சிவா கிருஷ்ணமூர்த்தி - Janus

லண்டனில் வாழும் எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தியின் புதிய சிறுகதை 'Janus'.

https://solvanam.com/2026/04/12/janus/

https://solvanam.com/2026/04/26/janus-2/

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வரும் அமர் தனது நண்பர் மோகனின் இல்லத்தில் தங்குகிறார் . அங்கு அவருக்கும் மோகனின் மகன் (கல்லூரி செல்லும் வயதில் ) யதுவுக்கும் இடையே ஏற்படும் உரசல்கள் , உரையாடல்கள் என விரிகிறது கதை. இந்த யுகத்தின் பிரதிபலிப்பாக யது அந்த பக்கமும் இல்லாமல் இந்த பக்கமும் இல்லாமல் ஒரு ஊசலாட்ட தலைமுறையின் வெளிப்பாடாய் அமர்.

அமரின் ஆங்கில உச்சரிப்பு , உணவு பழக்கவழக்கம் என பலவற்றை நகைப்புக்குள்ளாக்குகிறான் யது. அவர்களின் உரையாடலில் ஒரு இடத்தில் சர்ச்சில் , காந்தி போன்ற நிறவெறியர்களின் சிலைகளுக்கு லண்டனில் தார்பூசினோம் என யது சொல்கிறான் . அதில் அதிர்ச்சி அடைந்த அமர் காந்தியை எப்படி அப்படி சொல்லலாம் என கொந்தளிக்கிறார். யது எதிர்வாதமாக சர்ச்சில் இந்த ஊர் மக்களுக்கு நாயகர்தான் என்கிறான். நீங்கள் தான் சர்ச்சிலை குறை சொல்கிறீர்கள் . காந்தியும் அவ்வாறான ஒருவர்தான் வேறு நோக்கில் பார்த்தால் என சொல்கிறான் .

அமர் அங்கு தங்கி இருக்கும் ஒரு சில நாட்களுக்குள்.. இவரால் கேள்வி எழுப்பப்பட்டதால் அதை முற்றறியும் பொருட்டு Louis Fischer எழுதிய The Life of Mahatma Gandhi நூலை வாசித்துவிடுகிறான் யது . அதிலிருந்து அவனின் புரிதல் மாறுகிறது . ஆனால் இவ்வளவுக்கும் அந்த தருணம் வரை அமர் காந்தியை பாடப்புத்தக அளவில் தான் அறிந்துள்ளார் . அதைமீறி அவர் எதையும் காந்தி பற்றி வாசித்தவர் அல்ல.

யுகசந்தி என்கிற வார்த்தை  நினைவுக்கு வந்தது இந்த கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போது .தனக்கு எல்லாம் தெரிந்ததாய் நம்பும் ஒரு தலைமுறை. தனது புரிதலில் அறிதலில் குறை என்றால் அதை மாற்றிக்கொள்ள தயாராகும் அடுத்த தலைமுறை. அங்கு மீள்கண்டடைவு செய்யப்படும் காந்தி என செல்கிறது கதை.

தன்னை அலைக்கழிக்கும் கேள்விகளுக்கு தன் எழுத்திலேயே விடை தேட முயல்கிறார் சிவா . சில கதைகளை சிலர்தான் எழுத முடியும் என்கிற சொல்லாடலுக்கு ஏற்ப ..இங்கு இந்த மண்ணில் வாழும்போது நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் , உரையாடப்படவேண்டிய தளங்கள் , பதிவு செய்யப்படவேண்டிய விஷயங்கள் என மிகவும் முதிர்ச்சியுடன் அதை செய்கிறார் சிவா . இங்கு அமர்ந்துகொண்டு இழந்ததாய் எண்ணி ஊரை நினைத்து எங்கும் வகைமையிலான கதைகளோ , அந்த காலமே சிறந்தது இக்காலத்தில் யாருக்கு பொறுப்பு இருக்கிறது என்கிற புலம்பல்களோ இவரிடம் இல்லை. சில இடங்களில் கறாராக உண்மையை சொல்கிறார். அது மிகவும் காட்டமாக இருக்கிறது. இந்த ஊரில் இருந்துகொண்டு வாசிக்கும்போதே அதை உணர முடியும்.

அமர் செய்வது Hindsight Analysis எனப்படும் ஐ டி ப்ரொஜெக்ட்களில் அவை முடிந்தபின் ஆய்வு செய்யும் வேலை. அது சார்ந்தும் யதுவுக்கும் அவருக்கும் உரையாடல் நடக்கிறது .

காந்தியின் நூலைப் படித்து யது அமரிடம் பேசிக்கொண்டுவரும்போது

ரயில் செல்லும் திசைக்கு முதுகை காட்டியவாறு அமர் அமர்ந்திருந்தார். “உங்கள் இருக்கையிலிருந்து தெரியும் காட்சிகள் எல்லாம் கடந்து சென்றவை அல்லவா… உங்களுக்குத்தான் hindsight பிடிக்குமே?”

அப்ப நீ…Foresightஆ? உனக்கு வரப்போகிற காட்சிகள் எல்லாம் தெரிகிறதா”

“என்னைப் பற்றி நிச்சயம் தெரியவில்லை, ஆனால் காந்தி நிச்சயம் இரு இருக்கைகளிலும் ஒரே சமயத்தில் அமர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்…just like Janus”

“ஒருவேளை எனக்கு, உங்களுக்கு ஏதாவது தெரிகின்றது என்றால் அதற்கான காரணம் நாம் காந்தி போன்ற பெரும் பூத கணங்களின் தோள்களில் அமர்ந்திருப்பதால்தான் என்று நினைக்கிறேன்…நாம் எல்லாருமே ஒருவிதத்தில் ஐசக் நியுட்டன்தான் அங்கிள்” என்றான், மென் சிரிப்புடன்.

வெளிநாட்டில் வாழும்போது அங்கு ஏற்படும் தருணங்கள் குறித்து எழுதப்படவேண்டியது மிகவும் அவசியம் என்றே படுகிறது. முதலில் அது நம்மை தகுதி படுத்தும். பின்பு நம்மை நமது குழந்தைகளிடம் எப்படி கொண்டு செல்லவேண்டும் என சொல்லித்தரும். நம்மை என்றால் நமது இலக்கியத்தை பண்பாட்டை வரலாறை காந்தியை என அனைத்தையும். அவ்வகையில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படவேண்டிய கதைகளில் ஒன்று இது.

அன்புடன் கே.எம்.ஆர்.விக்னேஸ்

Comments

Popular posts from this blog

வெண்முரசு - வெய்யோன் - வாசிப்பனுபவம்

ரா.கிரிதரனின் சாதகப்பறவையின் காத்திருப்பு

வெண்முரசு - இந்திரநீலம் - வாசிப்பனுபவம்