வெண்முரசு - பன்னிரு படைக்களம் - வாசிப்பனுபவம்
வெண்முரசு நாவல் வரிசையில் பத்தாவது நூல் பன்னிரு படைக்களம். இதற்கு முன்பு வாசித்த ஒன்பது நாவல்கள் வாசித்து முடித்ததும் அடுத்து எழும் கேள்வி எப்போது இந்த நூலின் வாசிப்பின்பனுபவத்தை சில வரிகள் எழுதப்போகிறோம் என்பது. ஆனால் பன்னிரு படைக்களம் வாசித்த அன்று மனதில் எழுந்தது எவ்வளவு சொல்லினும் அதற்குள் அடங்கா வெறுமை ஒன்று . ஏன் , எதற்கு , அனைத்திற்கும் பொருள்தான் என்ன என்கிற கேள்விகள் அடுத்த சில நாட்களுக்கு வேறெதையும் வாசிக்கவும் விடவில்லை. சூதாட்டக்களம் நோக்கி அனைவரையும் கொண்டு சென்று நிறுத்தி பாண்டவர்களை மதியிழந்து மண்ணிழக்கச்செய்து கானேக வழிசொல்லும் கதைகள் நிரம்பிய கதைகளின் தொகுப்பு இந்த நூல். சித்திரை முதல் பங்குனி வரையிலான பன்னிரண்டு மாதங்களைப் பிரிவுகளாய் கொண்டு விரிந்திருக்கிறது பன்னிரு படைக்களம் . மகதநாட்டரசன் ஜராஸந்தனின் கதை விரிவாக சொல்லப்படும் வைகாசி மாதத்திற்கு முன்பு சித்திரையில் களம் அமைக்கிறது ரம்பகரம்பர்களின், ரக்தபீஜனின் கதைகள். மகத மன்னன் பிருஹத்ரதனின் மூத்த மகன் எனவும் கொள்ளலாம் ஜரையின் மைந்தனெனவும் கொள்ளலாம். இரு கதைகளும் இணைந்து ஜராவனத்தில் இருந்து நாடு கோ...