வெண்முரசு - பன்னிரு படைக்களம் - வாசிப்பனுபவம்

வெண்முரசு நாவல் வரிசையில் பத்தாவது நூல் பன்னிரு படைக்களம். இதற்கு முன்பு வாசித்த ஒன்பது நாவல்கள் வாசித்து முடித்ததும் அடுத்து எழும் கேள்வி எப்போது இந்த நூலின் வாசிப்பின்பனுபவத்தை சில வரிகள் எழுதப்போகிறோம் என்பது.

ஆனால் பன்னிரு படைக்களம் வாசித்த அன்று மனதில் எழுந்தது எவ்வளவு சொல்லினும் அதற்குள் அடங்கா வெறுமை ஒன்று . ஏன் , எதற்கு , அனைத்திற்கும் பொருள்தான் என்ன என்கிற கேள்விகள் அடுத்த சில நாட்களுக்கு வேறெதையும் வாசிக்கவும் விடவில்லை. சூதாட்டக்களம் நோக்கி அனைவரையும் கொண்டு சென்று நிறுத்தி பாண்டவர்களை மதியிழந்து மண்ணிழக்கச்செய்து கானேக வழிசொல்லும் கதைகள் நிரம்பிய கதைகளின் தொகுப்பு இந்த நூல்.

சித்திரை முதல் பங்குனி வரையிலான பன்னிரண்டு மாதங்களைப் பிரிவுகளாய் கொண்டு விரிந்திருக்கிறது பன்னிரு படைக்களம் . மகதநாட்டரசன் ஜராஸந்தனின் கதை விரிவாக சொல்லப்படும் வைகாசி மாதத்திற்கு முன்பு சித்திரையில் களம் அமைக்கிறது ரம்பகரம்பர்களின், ரக்தபீஜனின் கதைகள்.

மகத மன்னன் பிருஹத்ரதனின் மூத்த மகன் எனவும் கொள்ளலாம் ஜரையின் மைந்தனெனவும் கொள்ளலாம். இரு கதைகளும் இணைந்து ஜராவனத்தில் இருந்து நாடு கோரி வந்து ராஜகிருகத்தில் அமர்கிறான் ஜராசந்தன். பிருஹத்ரதனின் ஏனைய இளவரசர்கள் கொந்தளித்து அவனை அழித்தொழிக்க விழைகையில் அவர்களை அங்குள்ள மக்கள் சக்தியின் துணை கொண்டு வென்று கழுவிலேற்றும் வரை நின்றாடி முடிக்கிறான் ஜராசந்தன். இந்தப் பகுதியில் அவனின் நகர்நுழைவும் அவன் அரசை , முறைமைகளை மதிக்கும் விதமும் ஒரு தலைவன் மண்ணாசை கொண்டு அப்போது உருவாகவில்லை. அவன் பிறப்பிலேயே தலைவனாய் வந்தவன் என்பதற்கு வாசிக்கலாம் மகத அமைச்சர் பத்மரும் ஒற்றர்களும் பேசிக்கொள்ளும் பகுதிகள். ஜராசந்தன் ஊர் மன்றில் மக்களிடம் முதலில் சொன்னது 'நான் காட்டில் இருந்து வருகிறேன்' . எளிமையும் வலிமையும் உடன் நின்று அவனுக்கு துணைபுரிகின்றன. அரசனாய் ஆன பின்பு அவன் ஆடிமுடித்தது ஊழெனக்கொளலாம்.

மையக்கதையோட்டத்திற்கு ஊடாக வரும் புராணக்கதைகளில் இரட்டையர்கள் கதைகள் வருகின்றன . ஆனியில் சகஸ்ரகவசனால் தொழும்பனாக்கப்பட்ட தர்மனின் மனைவி மூர்த்திகையில் பிறக்கின்றனர் நரன் நாரணன். அந்த சகஸ்ரகவசனுக்கு பிறக்கின்றனர் சலனும் அசலனும். இந்த அனைத்து இரட்டையர்களின் கதைகளும் குருகுலக் கதைமாந்தர்களுடனும் அவர்தம் கதைகளுடன் எவ்வாறு இணைகிறது எனப் பார்க்கவே மறுபடியும் வாசிக்கலாம்.

'மைந்தா , அவர்கள் ஒருவரே . ஆயிரமாண்டுகாலம் படைக்கலம் ஏந்தாது தவம் செய்தவனும் ஆயிரம் ஆண்டுகாலம் படைக்கலமென்றே வாழ்ந்தவனும் ஒருவனே . ஒருபாதி உன்னை வெல்லும் வில்திறனை அடைந்தது. மறுபாதி இறப்பை வெல்லும் மிருத்யுஞ்சயத்தை அடைந்தது. '

ஆடியில் அஸ்தினபுரி நகரையே நோய் பீடிக்கிறது. காகங்கள் பெருகி நஞ்சு மழையாய் பனியாய் இறங்கி நகரையே அழிவின் விளிம்புக்கு கொண்டுசெல்ல அவ்வளவு மக்கள்திரளிலும் முழு ஆரோக்கியத்துடன் பொலிவாய் தோற்றம்கொள்வது கணிகரும் துரியோதனனுமே . அந்த நேரத்தில்தான் மகதத்தின் மீது இந்திரப்பிரஸ்தம் படைகொண்டு செல்ல வாய்ப்பிருக்கும் செய்தி அஸ்தினபுரிக்கு வருகிறது. விதுரர் , சகுனி, கணிகர் மூவரும் கூடி இப்போது மகதநாட்டிற்கு துணையாக செல்லவேண்டாம் என முடிவெடுக்கிறார்கள். மூவரும் வேறு வேறு காரணங்களால் அந்த போருக்கு துணை செல்லவேண்டாம் என நினைக்கிறார்கள் .

நச்சு நோய் கொண்டு நின்றிருக்கும் நகரை மீட்க , துணை நிற்க விதுரரின் அழைப்பின்படி அஸ்தினாபுரி வருகிறான் கர்ணன். கர்ணனும் துரியோதனனும் அப்போது சந்திக்கும் தருணம் அழகானது. துரியனைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் இப்படி ' துரியோதனன் பேரழகு கொண்டிருந்தான். உடலின் ஒவ்வொரு உறுப்பும் முழுமை கொண்டிருந்தது . புருவங்களில் மூக்கில் உதடுகளின் வளைவில் முகவாயில் மானுடத்தை மீறிய சிற்பக்கூர்மை.ஆனால் அவன் துரியோதனனாகவும் இருந்தான் ' .

காசி மன்னன் சகதேவனின் மகள் கலாவதியின் கதை. தனது கணவன் மதுர மன்னன் தாசர்கன் முன்வினை பழியில் இருந்து மீள கர்க்க முனிவருடன் இமயத்தில் உள்ள காக தீர்த்தம் சென்று நீராடும் பகுதி ஏனோ மூன்று முறை வாசிக்கவைத்தது. அந்த காகதீர்த்தத்தில் இருந்து நீர் கொண்டுவந்து அஸ்தினபுரி மீள்கிறது. அந்த நீர் கண்டே நோய்கொண்ட கர்ணனும் மீள்கிறான். ஆனால் அதன்பின்பு அகநோய் பீடித்தவனாய் வஞ்சம் நிறைந்தவனாய் !

ஆவணியில் இந்திரப்பிரஸ்தத்தில் ராஜசூய வேள்விக குறித்த பேச்சு எழுகிறது . செய்தியறிந்து பகை மணம் கமழ ஒன்றாய் நின்றாலோசிக்கிறார்கள் கர்ணனும் , கௌரவர்களும் ,ஜயத்ரதனும் , ஜராசந்தனும் , சிசுபாலனும் மற்றும் உத்தர பாஞ்சால அரசன் அஸ்வத்தாமனும். இந்த நேரத்தில்தான் பகை கூர்கொள்ள தொடங்குகிறது.

எதிரணி ஒன்று நினைக்க செயலையோ வேறொன்றாய் முடிக்கிறது பாண்டவரணி இளைய யாதவரின் தலைமையில் அவர்களின் முதற்பலி நானும் வாசுதேவனே என சொல்லிக்கொண்ட புண்டர நாட்டு மன்னன் வாசுதேவன்.

குசநாபனின் கதையில் இருந்து புரட்டாசி தொடங்குகிறது . அதனூடாக நைஷ்டிகர் அன்றி பிறர் நுழையாத நெறி கொண்ட கன்யாவனம் பற்றிய கதை. ஐம்பதாண்டுகாலமாக எல்லையில் இருந்தும் உள்ளே வரமுடியாமல் நின்றிருக்கும் பூசகரைக் கடந்து வனம் நுழைகிறார் பீஷ்மர் . இங்கு தனித்துவந்து அரசியல் களமாடலில் அடுத்த காய் நகர்த்தும் விதமாக தருமனின் ராஜசூய வேள்விக்கு பீஷ்மரின் ஒப்புதலை பெற்று செல்கிறார் யாதவப் பேரரசி குந்தி.

புரட்டாசியின் ஐந்தாம் அத்தியாயம் முழுக்கக் கவிதைகள். "நூறு கோடி முகங்களுக்கும் அப்பால் முகங்களின் முடிவிலி என விரிந்துகிடப்பவளைக் கடந்ததில்லை சிவம் ."

"உடல் உடலென்று காட்டி உடலில்லை உடலில்லை என்று அலைத்து உடல்மட்டும் அளித்து ஒளிந்தும் காட்டியும் ஆடுதலே அது. இணைந்தமென்மைக்குள் கரந்த ஊற்று. யானைவிழி. மான்குளம்புத்தடம். கருஞ்சிவப்பு மலரடுக்குக்குள் அமர்ந்த சிறுவண்டு. சுனைகள். மென்மைகள். தனிமைகள். தவங்கள். முக்கடல்முனையின் ஒற்றைக்கால். மூவிழியன் தலைக்குள் குளிர்ப்பெருக்கு. அவன் இடப்பாதி. பிறிதொருவன் நெஞ்சின் மரு. மூன்றாமன் சொல்லின் பொருள். உடலாகிவந்து சூழ்ந்தது."

"முன்னிரவின் வெம்மை குளிர்ந்து வரும் முதற்தென்றல். முதல் காலைமலரின் மந்தணக் காமம், முதல் பறவையின் ஏக்கம், முதற்கதிரின் முதல்நினைவென ஒரு முகம். சேற்றில் படிந்த அவள் காலடி. தன் இல்லமுகப்பில் அவள் இட்ட சித்திரக்கோலம். அதன் மேல் அவள் வைத்த பூசணிப்பூவின் பொன். அதன்மேல் உதிர்ந்த மாவிலையின் பொன். அதன்மேல் பதிந்த இளங்கன்றின் குளம்புச்சுவடு. அவள் இல்லத்தில்எழும் முதற்காலைப் புகையின் இன்மணம். அவள் அன்னைக்கு மறுமொழிகூவும் குழலோசை. அவள் எங்கிருந்தோ நோக்கும் ஒரு உடல் தொடுகை. அவள் தன் நெஞ்சு தொட்டு ஏங்கி நினைப்பழிக்கும் மூச்சு. கன்னி. கன்னியென்றான அன்னை".

ஐப்பசியில் அஸ்தினபுரியே மழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சித்திரம் வருகிறது . தருமனின் ராஜசூய வேள்வி குறித்த செய்திகள் கௌரவர்கள் மற்றும் அங்கநாட்டரசனிடம் நிலையழிவை உருவாக்கி அவர்களை துயில் களைய செய்துகொண்டிருக்கும் வேளையினில் சாதாரணமாக ஸ்நாதக பிராமணத் தோற்றத்தில் படகில் மகதநாடு சென்று ஜராசந்தனை மற்போரில் கொள்கிறான் பீமன் . அந்த நிகழ்வுக்கு காரணமானவன் ' நகர் அமைத்து முடிசூடியவன் அல்ல. அரசுகளை வைத்து பகடையாடுபவன் அல்ல. பெண்டிருடன் களியாடி, இளைஞருடன் விழவாடி திரியும் இளைய மைந்தன். அத்தோற்றத்திலேயே அவன் காலத்தை கடந்து செல்வான் '

ஆற்றல் மிகுந்த தந்தையர்களுக்கு அவர்களை விட சற்று வலுகுறைந்த மைந்தர் அமைவது புடவியின் நெறிகளில் ஒன்று போலும் . ஜராசந்தனும் அவர் மகன் சகதேவனும் மற்போர் களம் செல்லும் வழியில் மகனின் தோளில் இருந்து கையெடுக்காமல் அணைத்து நடந்துசெல்லும் காட்சி , அவர் சொல்லும் வரிகள் ' “நான் இந்நகருக்குள் புகுந்தபோது உன் வயதே இருந்தேன். உன்னைவிட இருமடங்கு பெரிய உடல் கொண்டிருந்தேன். நீ கற்ற நூலறிவோ அடைந்த அவைப்பழக்கமோ தேறிய படைக்கலப் பயிற்சியோ எனக்கிருக்கவில்லை. ஆனால் இந்நகர் என்னுடையது என்ற உறுதியும் இம்மண்ணை நான் ஆள்வேன் என்ற கனவும் பிறிதொன்றையும் எண்ணாது அதை நோக்கிச்செல்லும் ஒருமுனைப்பும் கொண்டிருந்தேன். எண்ணியபடி எழுந்து வந்தேன்”. இந்த நேரத்தில் நாம் காணும் ஜராசந்தன் வேறொருவர்.

ஜராசந்தன் மகதத்தில் முடிசூடி தொல்நாகர்களை கண்டடைந்து கொண்டுவந்து மழைவிழவையும் நாக வேள்வியையும் தொடங்குகிறான் . அதன் விளைவாக வைதீகர்களின் எதிர்ப்புக்கு உள்ளாக நேர்கிறது . இந்தக் கதைகளின் ஊடாக சொல்லப்படுகிறது வேதம் உருவாகி வந்த கதை. அடுத்த கட்ட தலைவர்கள் எப்படி உருவாகி வருகிறார்கள் என்பதற்கு ஐப்பசி ஒன்பதில் வரும் வரிகள் இன்றும் எந்த அதிகார அடுக்கிலும் பொருத்திப்பார்க்கலாம் . பார்த்து புன்னகைக்கலாம்.

"அவர்கள் தனித்தவர்கள். உயர்ந்தவர் விழிதொட்டு பேச முடியா தாழ்வுணர்வு கொண்டவர்கள். இளையவரானமையால் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு. அச்சிறுமையை வெல்ல அகக்கனவுகளில் வீங்கிப்பருத்து, அதை உள்கரந்தமையால் மேலும் சிறுமைகொண்டவர்கள் அவர்கள். ஒருபோதும் அவை நிகழாதென அறியும்தோறும் அக்கனவுகளை மேலும் இழிவாக்கிக்கொண்டவர்கள். அவ்வாய்ப்பு அவர்களுக்கு அக்கற்பனைகள் அனைத்தும் நனவாகும் ஒரு இறையாணை என்றே தோன்றியது. தங்கள் பகற்கனவுகளில் தாங்கள் எடுத்த பேருருவத்தை ஊழ் ஒப்புகிறதென்றே அதை உணர்ந்தனர்."

"தங்கள் மூத்தாரை மறுதலித்து கோல்கொண்ட சிலநாட்களிலேயே அவர்கள் தாங்கள் அப்பேருருவே என நம்பத்தலைப்பட்டனர். பேருருவை நம்புகிறவர்களிடம் அப்பாவனைகள் அமைகின்றன. நம்பி நிகழ்த்தப்படும் பாவனைகள் நம்பப்படுகின்றன. அவர்கள் குடித்தலைவர்களாக உருமாறினர். அவர்களை தகைமைசார் குடித்தலைவர்கள் என குடிகளும் நம்பினர். தங்கள் புறநிமிர்வாலும் அதை ஐயுற்றுத்தவித்த அகக்குனிவாலும் அவர்கள் குடிகளுக்கு நன்மைகளை செய்தனர். காலப்போக்கில் நற்பெயர் ஈட்டினர். அடுத்த தலைமுறையினரால் வாழ்த்தப்பட்டனர்."

ஜராசந்தனும் இளையயாதவரும் கடம்ப மரத்தடியில் நிகழ்த்தும் வேதம் குறித்த விவாதம் வரும் அத்தியாயம் தனித்து எடுத்து வைத்து அவ்வப்போது வாசித்துக்கொண்டே இருக்கவேண்டிய வரிகள் கொண்ட ஒன்று .

“மானுடர் எவரும் வேதத்தை முற்றறிந்துவிட முடியாது. இங்குள்ள நம்மைச் சூழ்ந்துள்ள ஒலி அனைத்தையும் கேட்டுவிட முடியும் என்றால் மட்டுமே அது இயல்வது. அறிவு அறியப்படுவது என்பதனாலேயே அறியும் தரப்பின் இயல்பின் எல்லைக்குட்பட்டது. பேரறிவு என்பது அறியப்படாத ஒன்றாகவே இருக்க முடியும்”

“எடைமாறி ஊசலாடும் பல்லாயிரம் கோடி துலாத்தட்டுகள் நடுவே அசைவுறாது நின்றிருக்கும் முள் ஒன்றுண்டு ஜரைமைந்தா”

கார்த்திகையில் ஜராசந்தன் மறைவு செய்தி கேட்டு புரவியில் தனித்த பயணத்தில் பித்தனாய் அஸ்தினபுரி வந்துசேரும் சிசுபாலனை சகுனி நீ ஒன்றும் ஷத்ரியனல்ல என்னும் தொனியில் எதிர்கொள்ளும் வரிகள் “சேதி நாட்டரசே, உங்கள் உணர்வுகள் அனைத்தையும் நாங்களும் அடைந்தோம். ஷத்ரிய தந்தைக்குப் பிறந்த அரசன் ஒருவன் அவ்வாறு கொல்லப்பட்டது நம் அனைவருக்கும் இழிவே”. இதுபோன்ற பல இடங்களில் ஷத்ரிய குருதி பரிசோதிக்கப்படும் நிகழ்வுகள் நிரம்பியிருக்கின்றன இந்த நாவலில்.

இளையயாதவனே எல்லாம் நிகழ்த்துபவன் என எண்ணி இருக்கும் நேரத்தில் கர்ணன் விதுரரிடம் சொல்கிறான் "இளைய யாதவன் இன்று தன்னை மண்வந்த தெய்வம் என்று சூதர் பாடுவதை ஏற்கிறான். தெய்வம் என தன்னை எண்ணத்தலைப்பட்டவன் தெய்வங்களின் பகையை ஈட்டிவிட்டான் என்றே பொருள்" . இளையயாதவரைப்பற்றி மட்டுமல்ல.

மார்கழியில் இந்திரப்பிரஸ்தத்தில் ராஜசூயம் நிகழ்கிறது கௌரவர்களும் உடன் நிற்க. அங்கேயே நிகழ்ந்தேறுகிறது தன்னை வாணாளெல்லாம் ஷத்ரியன் என நிறுவ முயன்ற யாதவக்குருதியும் கொண்ட சேதிநாட்டு சிசுபாலனின் முடிவு.

தையில் ராஜசூயம் முடிந்து மனக்கொந்தளிப்புடனேயே முறையான வகையிலன்றி கிளம்பி புரவிகளிலேயே நகர் மீள்கிறார்கள் துரியோதனனும் கர்ணனும். அதன் தொடர்ச்சியாக இந்திரப்பிரஸ்தத்தின் மீதான போர்தொடுக்கும் நிலைக்கு செல்கிறது அவர்களின் செயல்கள். மனதெனும் தத்துவத்திற்கு மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கும் சக்தி இருக்கிறது. போருக்கு பதிலாக பகடையாடல் என்பது முடிவாகிறது. அதுவும் குடும்பத்திற்கு உள்ளேயேயான ஒரு இன்பக்களியாட்டு என்கிற வகையில். மறுத்ததும் அவர்களே ஒப்புதல் அளித்ததும் அவர்களே என்று சொல்லலாம் அஸ்தினபுரி மூத்தவர்களை. விதுரர் மூலம் வந்த செய்தி தந்தையின் சொல் அது தெய்வ வாக்கு என எந்த தயக்கமும் இன்றி தருமன் ஒத்துக்கொள்கிறார் . இளையயாதவர் சொல்கேட்டு செல்லவும் இயலவில்லை.

மாசியில் அஸ்தினபுரியில் பன்னிருபகடைக்களத்தில் அமர்ந்தபிறகே தருமனுக்கு சொல்லப்படுகிறது பந்தயம் வைத்து ஆடும் ஆட்டம் அதுவென. ஆடியது யாதவன் , தருமன் , துரியன் , அவையில் மக்களாய் அன்றி மாக்களாய் அமர்ந்து விழி மட்டுமே கொண்ட உயிர்கள் என உள்ளின் ஒரு தரப்பு சொல்கிறது . ஆனால் உறுதியாய் மருதரப்பு சொல்கிறது ஆடியது துரியனின் விழியிழந்த தந்தையின் அன்பும் , மதியிழந்த நண்பனின் வஞ்சமுமே ஆடியது ஆட்டத்தை என. இந்த வரிகளை எழுதிக்கொண்டிருக்கும்போது ஓரமாய் நின்று புன்னகைக்கிறது ஊழ் !

“ஆக்கும் அல்குல். ஊட்டும் இணைமுலைகள். எரித்தழிக்கும் விழிகள். இணைக்கும் ஈரடிகள். இருத்தும் இன்மையின் பீடம். பிறப்பு, செல்வம், தந்தை, நட்பு, மைந்தன், எதிரி, துணைவி, இறப்பு, நல்லூழ், தீயூழ், வருவினை, செல்வினை என பன்னிரு கொடைகளென உடன் சூழ்ந்துள்ளவள். நீ இங்கமைக! இப்பன்னிரு படைக்களத்தில் அமைக!

----

இதுவரை வாசித்த வெண்முரசு நூல்களில் இந்த நூல் அளவுக்கு தீமைகளை கொண்டுள்ள நாவல் வேறில்லை . அதுவே வேகவாசிப்புக்கும் பலமுறை கொண்டுசென்றது. அவ்வாறு செய்கிறோமெனில் அது சரியா என நானே என்னை கேட்டுக்கொள்ளவும் வைத்தது .

வாசித்து முடித்தும்.. முடியாமல் ஓடிக்கொண்டிருக்கும் வரிகளில் சில

குருதிவிலக்காகியிருக்கும் தன்னை அவைக்கு அழைக்க வரும் ஏவலனிடம் திரௌபதியின் மறுமொழி “அவ்வாடலில் நான் மகிழ்ந்தேன் என்று அவனிடம் சொல். மைந்தரின் மடமையும் ஆணவமும் அன்னைக்கு உவப்பளிப்பதே. அவனிடம் மூன்று வினாக்களை மட்டுமே நான் எழுப்பினேன் என்று சொல்”

“தொழும்பியராக ஒரு குலப்பெண்ணை அவன் அவைக்கு கொண்டு செல்லும்போது என்றேனும் ஒருநாள் தன் அன்னையும் உடன்பிறந்தாளும் துணைவியரும் அவ்வண்ணம் கொண்டு செல்லப்படுவதும் அரசமுறையே என்று உணர்கிறானா? இத்தருணத்தில் அவன் வென்று தருக்க எண்ணுவது இந்திரப்பிரஸ்தத்தின் அரசியையா அல்லது தான் தன்னுள் விழையும் முதற்பெண்ணையா? பெண்ணை எவ்வழியிலேனும் ஆண் முற்றிலும் வெல்லமுடியுமென்று அவன் எண்ணுகிறானா? கேட்டுவா!”

“என் துணைவனென அங்கிருக்கும் இந்திரப்பிரஸ்தத்தின் அரசனிடம் கேள். அவன் தன் நாட்டை வைத்திழந்தான். பின்னர் தம்பியரை வைத்திழந்தான். தன்னையே வைத்திழந்தானா? தன்னையிழந்தவன் எவ்வண்ணம் என்னை வைத்திழக்க முடியும்? தன் உடல்மேலும் உயிர்மேலும் உரிமை இல்லாதவன் பிறிதொருவள் மேல் எவ்வுரிமையை கொண்டான்? எங்ஙனம் என்னை களப்பணயமென வைத்தான்?”

திரௌபதியை அழைக்க செல்லும் ஏவலர்களும் வீரர்களும் வெறுமே திரும்பி வந்து விவரிக்கும் காட்சிகள் . "அரசே, பல்லாயிரம் வெண்தாமரை மலர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி பூத்துச் சொரிந்த தடாகம் ஒன்றின்மேல் கால்படாது நடந்து வரும் உணர்வை அடைந்தேன். அரண்மனை முற்றத்திற்கு வந்து விழுந்தேன். விண்ணிலிருந்து உதிர்ந்த கந்தர்வன் போல் இருந்தேன். எங்கிருக்கிறேன் என்றறியவே நெடுநேரமாகியது"

பீமனின் சூளுரை ..

"ஆம், நெட்டைமரங்களென நின்றோம் நானும் என் உடன்குருதியினரும். அதன்பொருட்டு நாங்களும் சிறுமைகொள்க. பெண்ணுக்குப் பிழைஇழைத்தோர் பிள்ளைத்துயர் கொண்டழியவேண்டும் என்பதே முறை. விண்ணமர்ந்த தெய்வங்களே, இதோ எளிய காட்டாளனின் ஆணை! எங்கள் தலைமேல் பொழியட்டும் இத்தருணத்தின் பழி! கண்ணீர் அனலென எரிய எஞ்சும் நாளெல்லாம் நீறிப்புகைந்து நாங்கள் இதை ஈடுகட்டுகிறோம். எங்கள் குலம் இதன்பொருட்டு விழிநீர்பெய்து வீணென்றாகி அழிக!”

“எங்கே இந்திரப்பிரஸ்தத்தின் அரசன் என்றாகி நின்ற அப்பேதை? சொல்லாய்ந்து பொருளாய்ந்து அவன் கற்ற நெறிநூல்கள் அளித்தது இதுதானா? இருளில் விளக்கும், போரில் வாளும், தனிமையில் காவலும் என்றாகவில்லை என்றால் கற்றவற்றுக்கு என்ன பொருள்? அது உணவென உட்புகுந்து வெளியேறாது தங்கிய மலம் அன்றி வேறென்ன?”

"இங்குள அனைத்தும் ஒன்றே என்றறியாது எதைக் கற்றான்? அனைத்திலும் கரந்துள்ள ஒன்றே தான் என்று அறியாது எதைத் தெளிந்தான்? எனவே மண்ணில் எவ்வுயிரும் எதற்கும் அடிமையல்ல என்று உணராது எதைச் சென்றடைந்தான்? ஒவ்வொன்றின் நெறியையும், மீளும் வழியையும் வகுத்தளித்து நின்றாடுவதை நோக்கி நீயே நான் என்று சொல்லத்தெரியாதவன் அறிந்ததுதான் என்ன?"

அர்ஜுனன் பீமனிடம் சொல்வது "“உங்கள் பெருமையால் அனைத்தையும் அளவிடுகிறீர்கள், மூத்தவரே. நானோ என் சிறுமையால் இவற்றை புரிந்துகொள்கிறேன்”

“இந்த எளிய மானுடர்களை மட்டும் எண்ணுவேன் என்று கருதினீரா? இதோ நெளியும் புழுக்களிலிருந்து எவ்வகையில் மானுடர் மேம்பட்டவர்? இங்கு ஒரு காலடிபட்டு அழியும் பல்லாயிரம் புழுக்களைக் கண்டு ஒருகணமும் துயருறாத மூடர்களே போர்க்களத்தில் மாயும் வீரர்களுக்காக காவியம் எழுதுகிறார்கள். எனக்கு உயிர்கள் எல்லாம் நிகரே. எவர் மீதும் அன்பும் வெறுப்பும் இல்லை. கருணையும் காழ்ப்பும் இல்லை. எவர் வெல்லவும் நான் நின்றிருக்கவில்லை. பிறந்து இறந்து கொன்று நின்று ஆடிமறையும் உயிர்களென்பவை வெறும் ஒற்றைப்பெருக்கு. இப்பெரும்சுழியின் மையத்தில் விரலிட்டு படையாழி என ஏந்தி நின்றிருக்கிறேன்.”

உடன்வாசிக்கும் வாசிப்பை நேசிப்போம் குழும நண்பர்களுக்கு என் அன்பு .

நெல் மணி கொத்தும் குருவிகள் அறிவதில்லை விண்மணி கொத்திவந்து நம் முற்றத்து மரத்திலமரும் செம்பருந்தை .

ஆலமர்ந்த ஆசிரியருக்கு வணக்கமும் நன்றியும் .

Comments

Popular posts from this blog

வெண்முரசு - வெய்யோன் - வாசிப்பனுபவம்

ரா.கிரிதரனின் சாதகப்பறவையின் காத்திருப்பு

வெண்முரசு - இந்திரநீலம் - வாசிப்பனுபவம்