ரா.கிரிதரனின் சாதகப்பறவையின் காத்திருப்பு
தஞ்சை பெரியகோவிலுக்கு கண்ணந்தங்குடியில் இருந்து சென்று அமர வயது 28 ஆக வேண்டியிருந்தது எனக்கு.அப்படி பல நிகழ்வுகளை எல்லோராலும் தனது வாழ்நிகழ்வுகளில் இருந்து பட்டியலிடமுடியும்தான். கடந்த ஓரிரு ஆண்டுகளாக லண்டன் இலக்கிய வட்ட நண்பர்களுடன் கதை விவாதங்கள் (அவ்வப்போதேனும்), நேர் சந்திப்புகள்(பெரும்பாலும்) என தொடர்ந்து உரையாடி வருகிறேன். லண்டன் இலக்கியவட்டம் சுமார் பத்து ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. வாரம் ஒருமுறை வாட்ஸாப் உரையாடலில் இலக்கியம் வளர்க்க முயற்சி செய்வதும் அதன் செயல்திட்டத்தில் ஒன்று எனக் கொள்ளலாம்.
இந்த நண்பர்கள் குழாமின் முன்னணி முகங்களில் ஒருவர் எழுத்தாளர் ரா.கிரிதரன். அவரை முதலில் பார்த்த போது அவரின் வசீகரிக்கும் சிரிப்பும் , உரையாடல்களின்போது அவர் வைக்கும் வாதங்களும் அவர் சொல்லாமல் சொல்லின அவரின் வாசிப்பின் ஆழத்தை.ஆனால் அவர் எழுத்தாளர் என்பது சற்று பிந்திதான் தெரியவந்தது. நூல்களும் வெளிவந்துள்ளன என்கிற செய்தி முதலில் ஒரு ஆச்சர்யத்தை அளித்து பின்பு சற்று அடங்கிவிட்டது என்னுள். ஆனால் மாறாச் செயலாய் அவர் நூல்களை மட்டும் சேகரித்து வைத்திருந்தேன். திடீரென மேலே சொன்னேனே 28 வயதில் பெரியகோவில் பார்த்தேன் என. அந்த நிகழ்வு நினைவு வந்தது. உடனே கிரியின் சாதகப்பறவையின் காத்திருப்பு என்ற தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பை வாசிக்க தொடங்கினேன்.
இந்த நூலில் 34 கட்டுரைகள் மற்றும் 2 நேர்காணல்கள் உள்ளன.
க.நா.சு, ஜெயகாந்தன், ஜெயமோகன் , பாவண்ணன் , சாரு நிவேதிதா,சிவா கிருஷ்ணமூர்த்தி, தன்ராஜ் மணி, ஆர்.சண்முகசுந்தரம்,ஆர்.கே.நாராயணன், சௌரிங்கி ,சுரேஷ் பிரதீப், சல்மான் ருஷ்டி , சுனில் கிருஷ்ணன் , அனோஜன் பாலகிருஷ்ணன் , கார்த்திகைப்பாண்டியன் ரொபெர்த்தோ பொலான்யோ ,நாகரத்தினம் கிருஷ்ணா , பிரபஞ்சன் , கணேஷ் வெங்கட்ராமன்,சு.வேணுகோபால், ஜான் கான்ஸ்டான்டின் , தஸ்தாவெஸ்கி , யுவன் சந்திரசேகர் ,சார்லஸ் பெல்போர், கல்பற்றா நாராயணன் , ஸ்ரீதர் நாராயணன் , காலபைரவன் என நான் அறிந்த , அறியாத , பெயரளவில் மட்டும் தெரிந்த அல்லது அதுவும் தெரியாத சுமார் முப்பது எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த கிரிதரனின் விமர்சனக் கட்டுரைகள். லஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் & Carlo Rovelli ..இவர்களுடனான நேர்காணல்கள்.
எந்த எழுத்தாளருக்கும் சார்பாகவோ எதிராகவோ இல்லாமல் நேர்மையுடன் தனது வாசிப்பை மட்டும் துணைகொண்டு வரிகளாக்கி இருக்கிறார் என்று சொல்லலாம். அதை கொடுக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள் பெயர்களை மட்டும் வாசித்தாலே புரிந்துகொள்ள முடியும்.
ஒரு வாசகன் எதற்காக நேரடியாக ஒரு நாவலையோ சிறுகதையையோ வாசிக்காமல் இந்த நூலை வாசிக்கவேண்டும் ? கோடிகளில் வசூல் என பிரகடனப்படுத்தப்போகும் வகையில் (நேர்மறையில் சொல்கிறேன் ) நிகழப்போகிறது சென்னை புத்தகக் கண்காட்சி . புத்தகக் கண்காட்சி செல்வது ஒரு இனிய அனுபவம் .நான் அங்கு சென்ற நாட்களை நினைவு கூர்ந்தால் , எப்போதும் மூச்சு முட்டாமல் மீண்டதில்லை. அப்படித்தான் உண்மையிலேயே வாசிக்க விரும்பும் அனைவருக்கும். ஆனால் அனைத்து நூல்களையும் வாசிக்க காலம் இல்லை யாவர்க்கும். அவர் எந்த வயதினராக இருந்தாலும் . அதுவே தனது பால்யத்தில் இருந்து வாசிப்பை தவமென கொண்டுவரும் ஒரு தேர்ந்த வாசகர், எழுத்தாளர் ஒருவர் இப்படி ஒரு விமர்சன நூலை எழுதும்போது அது பரந்துபட்ட எல்லையை வாசிப்பு தேடல்கொண்ட ஒருவருக்கு அறிமுகம் செய்கிறது. ஒரு நூலில் முப்பது நூலை வாசித்த அனுபவத்தைக்கொடுக்கும் என சிலர் சொல்கின்றனர். அதில் எனக்கு உடன்பாடில்லை.இதன் மூலம் ஒரு அடிப்படை புரிதல்கள் அடைந்து தனது விருப்ப நூல்களை நோக்கி ஒருவர் செல்லலாம். அதே நேரம் அவர் கட்டுரைகள் கையாளும் அனைத்து நூல்களையும் வாசித்துவிடுவார் என சொல்ல முடியாது. ஆனால் தேர்ந்தெடுக்க ஒரு வழித்துணையாக அதுவரும்.
இந்த நூலை வாசித்து முடித்ததும் கீழ் வைக்க முடியாது என்னை நிறுத்தியது வெண்முரசு முதற்கனல் மற்றும் நீலம் நாவல்கள் பற்றிய கட்டுரைகள். இவைகளில் நூலாசிரியர் தனது மரபார்ந்த வாசிப்பையும் மேற்கோள்களாய் கொண்டுவருகிறார் . இந்த இடத்தில் குறிப்பிட வேண்டியது கிரிதரனுக்கு நவீன இலக்கியம் மட்டுமல்ல மரபிலக்கியத்திலும் சொல்லிக்கொள்ளும்(சொல்லித்தரும்)படியான வாசிப்பு இருக்கிறது. இப்போது வெண்முரசு வாசித்துக்கொண்டிருக்கும் எனக்கு மேலும் புரிதல்களை வாசிப்பின்போது தவறவிடக்கூடாதவைகளை காண்பிக்கின்றன அந்த கட்டுரைகள் .
அடுத்ததாக லஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் & Carlo Rovelli நேர்காணல்கள்.
லஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் மொழிபெயர்ப்பாளர் , அசோகமித்திரன், மௌனி, புதுமைப்பித்தன் , சுந்தர ராமசாமி , அம்பை, இமையம், கவிஞர் சேரன் என தமிழ் படைப்பாளிகளை ஆங்கிலத்துக்கு அறிமுகம் செய்துவைக்கிறார் , கனடா இலக்கியத் தோட்டம் விருது பெற்றுள்ளார் , முப்பது வருடங்களாக மொழிபெயர்ப்பில் இயங்குகிறார் என இந்த நூல்தான் சொல்லியது எனக்கு.
இங்கிலாந்தில் அவரை நேரில் சென்று பேட்டி கண்டுள்ளார் கிரிதரன். அந்த அனுபவத்தையும் கலந்து சுவாரஸ்யத்துடன் கொடுத்துள்ளார். லஷ்மியின் கணவர் ஆங்கிலேயர். இந்த நேர்காணலுக்காக கிரி சென்றபோது ஒன்று தெரிய வருகிறது அவருக்கு. லஷ்மியின் கணவர் மார்க்கின் பாட்டி வழி சித்தப்பாதான் ஜி.யு.போப்.
காலம் குறித்து கார்லோ ரோவெல்லியுடனான நேர்முகம் , உடனே மீண்டும் படிக்க வைத்த ஒரு பகுதி. இந்த பகுதியை தொடங்கிவைப்பது அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் என்கிற கதையில் இருந்து வரும் சில வரிகள். எனக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமானது இந்த நேர்முகம் எனச் சொல்லலாம்.
'காலம் நிலத்தடி நீராக ஒவ்வொரு கலைப்படைப்பின் கீழும் இருக்கிறது'
' தத்துவம் எப்போதும் தனி மனித காலத்துக்கும் உலகளாவிய காலம் எனும் கருத்துக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை முன்வைத்தபடிதான் இருக்கிறது'
'Integrated Thought Systems நாம் அறிந்த அனைத்தையும் ஒன்று சேர்க்க உதவும் . அப்படி அனைத்தையும் ஒரு துறையாக நாம் இலக்கியத்தைப் பார்க்க முடியும்'.
'நம் அனுபவ அறிவுக்கு முற்றிலும் வேறொரு வகையில் காலம் இயங்குவது உண்மை'
'நாம் யுத்தம் புரிந்து ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளாமல் உலகத்தில் தொடர்ந்து வாழ முடிந்தால் , ஒருநாள் ஒளியைவிட வேகமாக பயணம் செய்த ஒருவர் தன குழந்தைகளைவிடச் சிறுவனாக மாறி திரும்ப முடிவது நம் முன்னே நடப்பதோடு மட்டுமல்லாது அது மிகச் சாதாரண அனுபவமாகவும் இருக்கும் . காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேகத்தில் செல்கிறது எனும் உண்மை புரிந்துகொள்ள எளிமையானதாகிவிடும் . அப்போது , இறுக்கமான காலத்தின் பிடியில் நமது உடல்கள் சிக்கிக்கொண்டிருக்கிறது எனும் அறிவு உலகம் தழுவிய உண்மையாக இருக்காது. '
காலமும் வெளியும் இருவேறு கருதுகோள்கள் அல்ல . இரண்டுமே ஒன்றிலிருந்து விளைந்தவை எனும் புதுமையை இது முன்வைக்கிறது'
இவை அந்த நேர்முகத்தில் என்னை நிற்கவைத்த இடங்களில் சில.
இன்றுவரை எந்த ஆங்கில நூல்களையும் நான் முழுமையாக வாசித்ததில்லை . அதன் தேவை என்ன , ஏன் ஆங்கில நூல்கள் வாசிக்க வேண்டும் , அது இல்லாததால் வீண்பெருமை தமிழர்களாகிய நாம் எப்படி போதாமைகளை நிரப்பிக்கொண்டிருக்கிறோம் , ஒரு நூலை தரமான வகையில் மொழியாக்கம் செய்ய ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு என் பலவற்றை எழுதியும் , உரையாடல்களில் குறிப்பிட்டும் வருகிறார் ஆசிரியர் ஜெயமோகன். ஆங்கில நூல்களின் மீதான விமர்சங்களையும் கொண்ட கிரியின் இந்த நூல், ஒரு சில ஆங்கில நூல்களையேனும் சற்று அமர்ந்து வாசிக்கவேண்டும் எனும் தூண்டுதலை எனக்கு அளிக்கிறது. அதே போல கிரிதரனின் விமர்சனத்தில் ஒரு கவிதை நூலையும் காண ஆவல்.
இந்த நூலில் ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் கவிதை வரிகள் போல வருகின்றன அல்லது காரண வரிகளாய். நூலின் தலைப்பு சாதகப்பறவையின் காத்திருப்பு . தமிழ் இலக்கியத்தில் தன்னை பின்வைத்து , எழுத்தை , இலக்கியத்தை முன்வைப்பவர்கள் (பாவனைகள் அன்றி ) குறைவுதான். சாதகப்பறவையாய் காத்திருந்து , நவீன இலக்கியம் , மரபிலக்கியம் , அறிவியல் புனைவு, இங்கிலாந்தில் இலக்கியச் செயல்பாடுகள் என களமாடிக்கொண்டிருக்கும் கிரிதரன் இன்னும் அவருக்கான விரிந்த வாசகர்ப்பரப்பை அடைய வாழ்த்துகள். அவரின் வாசகனாய் வணக்கங்கள்.
- கே.எம்.ஆர்.விக்னேஸ்

Comments
Post a Comment