க.நா.சு - இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்
க.நா.சு . இந்த பெயரை நான் அதிகம் படித்தது. கேட்டது எனது ஆசிரியர் ஜெயமோகன் மற்றும் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் இவர்களின் எழுத்துக்களில் உரைகளில். அதன் மூலம் சென்றடைந்தது https://www.jeyamohan.in/29168/ .
அவரின் ஒரு நூலையாவது முதலில் படிக்கவேண்டும் என முடிவு செய்து வாங்கியது 'இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்'. இந்த நூலை தேர்ந்தெடுக்க இன்னொரு காரணம் பெங்களூர் இலக்கிய விழாவில் ஆசிரியரை பேட்டி கண்ட எழுத்தாளர் பொழிபெயர்ப்பாளர் சுசித்ரா இந்நூலை மேற்கோள்காட்டி பேசினார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருக்கு அறம் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கக் கொடுத்தேன். இன்னொரு நண்பருக்கு அவரின் மகன் ஆங்கிலத்தில் படிக்கும்வண்ணம் 'Stories Of the true' வாங்கிக் கொடுத்தேன் . இருவருமே சொன்ன ஒன்றுண்டு . ' இது என்ன இவ்வளவு raw வா இருக்கு ', ' கெட்ட வார்த்தை எல்லாம் பயன்படுத்தியிருக்கிறார். இதை படிக்கும் ஒருவர் எப்படி கடைத்தேறுவார் இப்படி பல கேள்விகள். அப்போது நான் சொன்னது ..பகடிக்காக ஆனால் அவர்களுக்கு உண்மையாக தோன்றும்படி 'ஆமாம் உண்மைதான் . இந்த கருத்துக்களை ஜெயமோகன் அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள். இது போன்ற ஆக்கப்பூர்வமான எதிர்வினைகளுக்காக என்றும் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பவர் அவர் என்று சொல்லி மின்னஞ்சல் முகவரியும் கொடுத்தேன் . அவர்களுக்கு அந்த நூல் வாங்கிய பணத்துக்கு வெங்காயம் வாங்கி இருக்கலாமே என்ற ஆதங்கம்தானே ஒழிய மின்னஞ்சல் அனுப்பவெல்லாம் நேரமில்லை .இதில் உள்ளுறைந்திருக்கும் மனப்பான்மை என்பது 'நான் எனக்கென்று ஒரு அளவுகோல் வைத்திருப்பேன் அதற்குள் நான் அறிந்த விஷயத்தையே மனம் லயிக்கும்படி சொல்லவேண்டும்' அதை மீறக்கூடாது. அப்படி என்றால் எந்த புதிய கருத்தும் சிந்தனையும் நம்முள் செல்லாது என்பதை பற்றி பிரக்ஞையற்ற நிலை தான் இது.
இப்போது இந்த நூலைப் பற்றி. இதிலுள்ள கட்டுரைகள் அறுபதுகளில் க.நா.சுவால் நடத்தப்பட்ட இலக்கியவட்ட இதழில் எழுதப்பட்டவை. 1985 ல் நூலாக வெளிவந்துள்ளது. விமர்சனம் என்பது இலக்கியத்துறைகளில் ஒன்று அதன் தேவை இடம் என்ன என்பதே இதன் அடிநாதம் . ஆனால் அதன்மூலம் இது தொட்டு சென்றிருக்கும் இடங்கள் பல. விமர்சனத்தின் தேவை , பத்திரிக்கை / பேராசிரிய , பல்கலைக்கழக எழுத்து, இலக்கிய எழுத்து இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், ஒரு வாசகராக ஒருவர் எப்படி ஒரு நூலை படிக்க வேண்டும். அதிலும் பயிற்சி எடுத்துக்கொள்ள என்ன என்ன செய்யவேண்டும். நல்ல நூல் என்று இனம்காண வாசிப்பின் வழி மட்டுமே சென்றடையமுடியும், உலக இலக்கியம் பற்றிய புரிதல் , மொழிபெயர்ப்பின் பயன் என்ன அது எப்படி இருக்கவேண்டும், தமிழ் தூய்மைவாதம் என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் , விமர்சகனுக்கு இருக்கவேண்டிய நிமிர்வு , பாரதியாரை குறளை நாம் எப்படி அணுகவேண்டும் ஆனால் எப்படி அணுகிக் கொண்டிருக்கிறோம் , டி கே சி யைப் பற்றிய உண்மையான வரிகள் எஸ்.வி.வி என்ற எழுத்தாளரைப் பற்றிய அறிமுகம் . கம்பனை ஷேக்ஸ்பியரைப் பற்றிய விரிவான விமர்சனங்கள் , அன்று தமிழில் எழுதிக்கொண்டிருந்தவர்களை சிலரைக் குறிப்பிட்டு இவர்களே எனக்கு முக்கியமான, இலக்கியத்தரமுள்ளவர்களாய் தெரிகிறது என சொல்லியிருப்பது சிறுகதை நாடகங்கள் நாவல்கள் கவிதைகள், விமர்சனம், சோதனைகள் என இவற்றைப்பற்றிய விரிவான புரிதல்களை அளிக்கும் இந்நூல் . இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில எழுத்தாளர்கள் பெயர்கள் இன்று அதிகம் கேட்பதில்லை என்றாலும் அவர் சொல்லும்படி அது அவரின் பார்வை மட்டுமே . உதாரணம் சிதம்பர சுப்ரமணியம் . அதோடு அவர் எதையும் இந்நூலில் நிறுவவில்லை. இதையெல்லாம் நான் இன்ன இன்ன காரணங்களினால் சொல்கிறேன். இதை இந்த முறைமைகளின் படி மறுப்பவர்கள் அவர்கள் கண் கொண்டு மறுக்கலாம் என சொல்கிறார். இது இலக்கியத்துக்கு மட்டுமல்ல நமது அன்றாட வழக்கு சழக்குகளுக்கும் பயன்படுத்திப்பார்க்கலாம் . இலக்கியத்தின் பயன்தானே அதுவும் . இலக்கியத்தில் கருத்தும் உருவமும் ஒரு சம்பாஷணை என்ற உரையாடல் வடிவக் கட்டுரையில் . மிக ஆழ்ந்த கவனத்தைக்கோரும் விவாதங்கள் இடம் பெறுகிறது. ஒரு படைப்பிற்கு முக்கியம் கருத்தா வடிவமா . ஒரு வடிவத்தை படைப்பாளி எப்படி தேர்ந்தெடுக்கிறார். அந்த வடிவத்தில் இல்லாது வேறுவடிவத்தில் எழுதியிருந்தால் அது எப்படி இருந்திருக்கும் என விரிவான உரையாடல். உலகப் படைப்பாளிகள் பலரது ஆக்கங்கள் விவாதிக்கப் பட்டுள்ளது அதில் சிலரது பெயர்கள் நான் முதல்தடவையாக வாசிக்கிறேன். உதாரணம் டாண்டே .
சரி அப்படி ஆரம்ப நிலை வாசகன் இந்த மாதிரி அழுத்தமிக்க நூலை வாசிக்கவேண்டுமா என்றால் . நிச்சயமாக ஆம் என்பதே என் பதில். அதற்கு துணை செய்யும் நூலில் உள்ள பொன்வரிகள் . உதாரணங்கள் சில கீழே .
* இலக்கியாசிரியன் வாசகனைத் தேடுவதில்லை. நல்ல வாசகன்தான் இலக்கியாசிரியனைத் தேடுகிறான்
* நல்ல இலக்கியாசிரியர்கள் எங்கே எங்கே என்று தேடுகிற கூட்டம் இன்று தமிழ்நாட்டில் அதிகம் இல்லை. ஏற்படவேண்டும்
* இலக்கியாசிரியன் எந்தக் குறிப்பிட்ட வாசகனையும் கூட்டத்தையும் மனதில் கொண்டு எழுதுவதில்லை . எழுதவேண்டிய அவசியம் , அரிப்பு , அர்ஜ் ஏற்படுகிறது - எழுதுகிறான்
* தாங்கள் படித்ததற்கு அப்பாலும் ரசிக்கத் தகுந்தது இருக்கலாம் என்கிற சிந்தனை முறையாகப் படித்தவர்களுக்கு இருப்பதில்லை
* பழசைப் பற்றியே எழுதித் தங்கள் பொழுதையும் நம் பொழுதையும் புதுசாக எதுவும் சொல்லாமல் போக்கிக் கொண்டிருப்பவர்களை , சமுகத்திலும் அறிவுலகத்திலும் இருந்து பகிஷ்கரிக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் ( இந்த இடத்தில நின்றுவிட்டேன் :) :) )
* தமிழ் தமிழ் என்று பாராட்டிச் சுயநலத்துக்காகப் பெருமை பேசுகிறவர்கள் உலக இலக்கியத்தில் தமிழ் தன் ஸ்தானத்தை ஏற்பதற்கு ஒன்றும் செய்யாதவர்கள் , செய்ய இயலாதவர்கள் என்று காண்கிறோம்
* எத்தனையை தெரிந்துகொள்வது , அதற்கு மேலும் தெரிந்து கொள்ளவேண்டியது இருந்துகொண்டேதானே இருக்கும் என்று கேட்கலாம். உண்மைதான். தெரிந்துகொள்வதைத் தெரிந்துகொண்டு , இன்னும் இருக்கிறது என்கிற உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டு விட்டால் இலக்கியம் வளரும்
*தமிழில் எல்லாமே இருக்கிறது குறளில் எல்லாமே இருக்கிறது வேறு ஒன்றும் நமக்குத் தேவையில்லை என்று ஆரம்பத்தில் பண்டிதப் பேராசிரியர்களும் , அரசியல்வாதிகளும் பின்னர் வந்த தமிழ் மட்டும் பற்றி வெறி கொண்டவர்களும் சூழ்நிலையை வீணாக்கிவிட்டார்கள்.
*உலகில் உள்ளதில் சிறந்ததை அங்கீகரித்துப் படித்துத் தெரிந்து கொள்வதற்கு ஊர் ஆர்வம் வேண்டும் .முதலில் அந்த ஆர்வத்தை வளர்ப்பதற்கு ஒரு சூழ்நிலை உருவாகவேண்டும்.
* சிந்திக்கவே மறுப்பதற்குப் பதில் , சிந்தித்து முடிவு காண முடியாவிட்டாலும் பாதகமில்லை - சிந்திப்பது என்பதுதான் முக்கியம்
Comments
Post a Comment