சொல்வளர்காடு - சில வரிகள்
"ஊழின் வழிகளைப்பற்றி ஒருபோதும் உள்ளி உள்ளிச் சொல்லாடலாகாது என்பதே மூதாதையர் கூற்று. அங்கு நிகழ்ந்தவை வேறுமுறையில் நிகழமுடியாதவை என்று உணரும் அடக்கம் இருந்தால் மட்டுமே. அவை அளித்த துயரத்தைக் கடக்கமுடியும்" சுனகக்காட்டில் தர்மனிடம் சொல்கிறார் காத்யாயனர்.
பன்னிரு படைக்களத்தில் இருந்து காடேகுகின்றனர் பாண்டவர்கள். உடன் தம்பிகளும் திரௌபதியும் வந்தாலும் மெய்மை தேடுவதோ தருமர்தான். கெளஷீதகம் , சுனகம் , துவைதம், ஐதரேயம் , தைத்ரியம் , பிருஹதாரண்யகம், சாந்தீபனி , மைத்ராயனியம், யக்க்ஷவனம் ஆகிய ஒன்பது காடுகளைக் கடந்து கந்தமாதானத்தில் கனலாடி மீள்கிறார் தருமன்.
குருநிலைகள் , அவர்களின் மரபு வரிசை அதையொட்டிய புராணக்கதைகள் என விரிந்து முன்நிற்கிறது ஒவ்வொரு காடும். சுனகத்தில் இருக்கும்போது மறுபடியும் அஸ்தினபுரியில் நிகழ்ந்ததும் அதையொட்டிய நிகழ்வுகளும் நாடகத்தருணங்களும் விரித்துரைக்கப்படுகிறது .மீண்டும் திருதராஷ்டிரரின் தந்தைப்பற்றும்.
அங்கிருந்து சினத்தில் கிளம்புகிறார் விதுரர் .அஸ்தினபுரியில் இருந்து உடலால் கிளம்பி உள்ளதால் அதைவிட இயலாதவர் மீண்டும் அங்கேயே அனுப்பிவைக்கப்படுகிறார் தருமன் மற்றும் தம்பிகளால்.
ஒவ்வொரு காடும் அவர்களின் குருநிலை அமைந்த வரலாறு , அவர்கள் கற்பிக்கும் தத்துவம், அதிலிருந்து மீறி சென்றவர்கள், செல்பவர்கள் என ஒரு முழு சித்திரத்தை அளிக்கிறது. எதிலும் நிலைகொள்ள இயலாமல் அடுத்த அடுத்த காட்டை நோக்கிய பயணம் ஈர்க்கிறது தருமனை. வாசிக்கும்போது ஒவ்வொரு தத்துவமும் சரி, இதுவே நமக்கானது என்கிற மனநிலை தோன்ற ..அடுத்த காடு அதை வேறொரு கோணத்தில் சிந்திக்க சொல்கிறது . ஆனால் சற்று நிதானித்த சிந்தனையையும் மறுவாசிப்பையும் கொடுக்கும்பட்சத்தில் அவைகளுக்கிடையேயான தொடர்பையும் கொண்டும் கொடுத்தும் அவைகள் பரிணமிப்பதை உள்வாங்க முடியும்.
பிருஹதாரண்யகம் கல்வியின் சிறப்பை , குருவென்றால் யார் என்பதை, கார்கி எப்படி அவரின் அழகின்மையை ஆற்றலாக மாற்ற முடியும் என்பதை விவரிக்கிறது. யாக்ஞவல்கியருக்கும் கார்கிக்கும் நடக்கும் விவாதம் அற்புதம். இன்மையில் இருந்து இருப்புக்கு , இருளில் இருந்து ஒளிக்கு, இறப்பிலிருந்து அமுதத்திற்கு ....
அதற்கு முன்பு கல்விசீலரான யாக்ஞவல்கியரும் தமது அறத்துணைவிகளை பெண்கள் என்கிற எல்லையைத்தாண்டி வரவிடாது வைத்திருந்ததை மைத்ரேயி அவருடன் விவாதித்து விளக்கும் பகுதிகளும் அடிக்கோடிட வேண்டியவை.
அஸ்தினபுரி அவை கூடி உயிரிழைப்பை விட கொடியதாம் மதிப்பிழப்பை நிகழ்த்திய நிகழ்வுக்குப்பிறகு சாந்தீபனிக் காட்டில்தான் திரௌபதியையும் பாண்டவர்களையும் சந்திக்கிறார் இளைய யாதவர். அவருக்கும் அந்த கல்விநிலைக்குமான உறவை , அவர் குருவை சீண்டி தாண்டிய தருணத்தை, பின்பு அவர் மீண்டும் அங்கு வரும்போது அங்குள்ளவர்களின் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த மனநிலையும் என வேறொரு தளத்திற்கு இட்டு செல்கிறது அந்தப்பகுதி.
பன்னிருபடைக்களம் வரை.. ஏன் சாந்தீபனி காடு வரும் வரை கூட அப்படி யோசிக்கவில்லை . திரௌபதி ஆறா சினம் கொண்டு கொழுநர்களில் மூத்தவரிடம் ஒருசொல்லும் உளம்கொண்டு பேசாது வரும் நிலையிலும் இளைய யாதவரிடம்தான் கேட்கிறாள் .. ஏன் அவர் வந்து உடன்நிற்கவில்லை என. அங்கு அவளை அவள் சொல்வழி சென்று தம்சொல்கொண்டு வீழ்த்துகிறார் இளையவர்.
' ஆம் நீங்கள் அரசி . அதனாலேயே இது அரசியலென்றாகிவிடுகிறது. இது குடிப்பூசல் அல்ல. ஆகவேதான் இதன்பொருட்டு குருதிப்பெருகவிருக்கிறது. '
தருமனையும் கட்டுடைக்கிறார் இளையயாதவர். இளையயாதவருக்கு சாந்தீபனியில் பத்ரர் காட்டிய எதிர்ப்பை மறுபடி மறுபடி தருமன் சொல்லும்போது
அரசே, உங்கள் வினா எழுவது எங்கிருந்து? அவருடன் சேர்ந்து சிலகணங்கள் அக்குரலை ஒலித்த உங்கள் அகத்திலிருந்தா?” என்றார். விழிகளை அவர் மேல் நிலைக்கவிட்டு மாறாமுகத்துடன் “ஆம்” என்றார் தருமன். “அங்கு நின்ற அனைவரும் அச்சொற்களை தாங்களும் சொல்லி திடுக்கிட்டு மீண்டனர். அவர் குரலுடன் வந்து இணையும் ஆயிரம் உளக்குரல்களாலேயே அது வல்லமைகொண்டதாகிறது”
"அவர் அடுமனை மெய்மையின் களம். ஆனால் அவர் அங்கே ஒற்றைச்சுவைக்கு சமைக்கிறார்” என்றார் இளைய யாதவர். “கற்பரசிகள் கட்டுண்டிருப்பவற்றிலிருந்து பரத்தையர் எளிதில் விடுபடுகிறார்கள்.
சாந்தீபனிக் காட்டில் இருக்கும்போது சொல்லப்படும் பஞ்சஜனம் , சங்கனின் கதை, அங்கிருந்து தனது குருவின் மைந்தனை இளைய யாதவர் மீட்டுவருவது தனி நூலாகவும் கண்டு வாசிக்கவேண்டியது.
அஸ்தினபுரிக்கு வர இயலாமல் இருந்ததற்கு காரணமாய் சொல்லும் படையெடுப்புகள் , சால்வனிடம் போர் , யாதவக் கிளர்ச்சிகள் அதை அடக்கிய விதம் அதன் விளைவாய் தனது மூத்தவருடன் பகை என நாடகத் தருணங்கள் பெரியதொரு காடு சாந்தீபனி.
அங்கிருந்து இளையயாதவர் சொல்படி வருவோர் செல்வோர் இருப்போர் பசியாற்ற அன்ன வேள்வி திகழும் மைத்ராயானிய காடு செல்கின்றனர். தருமன் வியர்வை சிந்த உழைப்பதும் , பசிக்கு உண்பதும் அங்குதான். தம்பிகள் ஒவ்வொருவரும் ஒன்றில் தேர்ச்சியுடையவராய் இருக்க ..தான் யார் என்கிற வினாவொன்று எழுகிறது தருமனிடம்.
நாரையிறகு வழி சொல்லி இவர்கள் சென்ற யக்க்ஷவனம் தருமனிடம் வைக்கிறது ஓர் அறச்சோதனை. அதையும் கடந்து கந்தமாதனம் சென்று மீள்கிறார் தருமன் . அந்த முடிவுக்குமுன் அவர் சொல்லும் அரசு சார்ந்த ஆணைகள் அவர் ஏன் பேரறத்தோன் என சொல்கிறது.
' மூன்றாம் மாதம் முழுநிலவுநாள் வரை எனக்காகக் காத்திருங்கள் , நான் மீளவில்லை என்றால் நகர்மீள்கையில் சகதேவன் இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியை சூடட்டும் . நான் திரும்பவில்லை என்றால் தான் வாழும் காலம்வரை மைந்தன் என நின்று மந்தன் எனக்கு நீர்க்கடன் செலுத்தட்டும் '
கந்தமாதனம் கனலை மட்டுமல்ல கவிதைகளையும் உள்ளடக்கிய பகுதி.
--- எனக்கு என்ன தந்தது இந்தக்காடுகள் ?
1.சொல்வளர்காடு , இந்தத் தலைப்பினால், நூலின் முன்னட்டையில் உள்ள படத்தினால் மிகவும் நெருக்கமானது வாசிக்கும் முன்பே.
2.நீலமும் , சொல்வளர்காடும் முறையே கவித்துவ , தத்துவ வரிகளை அதிகம் கொண்டவை . அதனாலேயே இதுவரை வாசித்த நூல்களில் அருகிருக்க , அணைத்துக்கொள்ள உகந்தவை
3. வாசித்து முடித்ததும், அவை என்னிலிருந்து அகலாமல் நின்றிருக்க வைரவரிகள் சிலவற்றை (நூலில் , இணையத்தில் இருந்தாலும்) மீண்டொருமுறை குறிப்பேட்டில் எழுதுவது வழமை . அவற்றில் சில கீழே
அழியாத ஒன்றை அடைவது வரை அடைவதை அழியாமல் பேணுக!
ஆசிரியரே, இந்த மைந்தனுக்கும் மதுராவில் கம்சனால் கொல்லப்பட்ட ஆயிரம் மைந்தருக்கும் வேறுபாடு ஏதேனும் உள்ளதா?
“கதிரவன் கடக்கும் வானம் அது. அதைத்தான் இங்கும் சொல்வேன். இங்கிருந்து அங்குவரை ஒற்றைச் சிறகடிப்பில் செல்லும் ஒரு பறவையால் மட்டுமே இங்கு எழும் அத்தனை எண்ணங்களையும் ஒன்றெனத் தொகுக்க முடியும்.” அவையை நோக்கியபடி சிலகணங்கள் தன்னுள் ஆழ்ந்தவராக அமர்ந்திருந்தபின் மெல்ல கலைந்து “மானுடம் காட்டும் உண்மை ஒன்றுண்டு, தேவையானது நிகழும். எண்ணங்கள் கோடி ஒன்றை ஒன்று தொடுத்து ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு பெருகலாம். அனைத்தையும் கடந்து நோக்கும் ஒன்றுள்ளது, மானுடனின் தேவை. அது ஒவ்வாததை தள்ளி உரியதை அள்ளும். தொடுக்கும். உருக்கி ஒன்றாக்கும்.”
“கட்டிறந்த பாழ்வெளியில் களித்திருக்கும் முனிவருக்குரிய மருந்து எங்ஙனம் கூடுகட்டி குஞ்சுகளை ஊட்டும் குடித்தலைவனுக்கு உகந்ததாகும்?
மாவீரனாகவோ மாபெரும் தொன்மமாகவோ ஆகாது எளிய தருணங்களினூடாகவே வாழ்ந்து முடிபவன் மகிழ்வுடன் இருக்கிறான். தன்னைத்தானே வெறுக்கவும் ஏளனம் செய்யவும் நேர்வதில்லை அவனுக்கு.
பசுக்களை நோக்கி புரிந்துகொள்ளுதல் ஆமருவுதலின் முதல்படி. அவற்றின் மீது பெரும் அன்பிருந்தாலொழிய அது கைகூடாது. நம் குரலை நம் அன்பென அது அறிகிறது. அதன் குரலை அதன் அன்பென நாம் அறிகிறோம். அன்புக்குரிய கலமென அங்கிருக்கும் பசு ஓர் அறிவென உள்ளமைதல் அடுத்த நிலை. சிறு ஓசைகளில் அசைவுகளில் மணங்களில் அவை நம்முள் முழுமையாக உருக்கொள்ளும்போது நாம் நம்மை என அதை அறிகிறோம். அறிவென ஆன பசு நம்மை தன்னறிவென அறிகிறது. நாம் அதை நம்மறிவென அறிவதைப்போல. பின்னர் ஒரு கணத்தில் பசு நம் அறிவைவிட்டு அகல்கிறது. அது நாமென ஆகிறது. அதன்பின் நாம் காடுசென்று மேய்ந்து கன்றூட்டுவதற்காக பாலூற தொழுதிரும்புகிறோம்.
பல காடுகளை கண்டுவிட்டீர்கள், அரசே. அனைத்துக் காடுகளுக்குச் செல்லும் வழிகளும் இணையும் காடு ஒன்றுள்ளது.
முற்றிலும் தண்டிக்கத்தக்க பிழை என்றோ முழுமையாகவே பேணப்படவேண்டிய நன்மை என்றோ ஏதுமில்லை.
உண்டவரில் உள்ளவர் அளித்துச் சென்றது இல்லாதவருக்கும் அவருக்கும் போதுமான உணவாகியது.
அவளை அறிக! அறிதலே கடத்தல். கடப்பதே விழைவை வெல்லும் ஒரே வழி.
தீயில் இறங்கி உருகி மாசு களைந்து வெளிவரும் பொன் அறியும் தீயென்றால் என்னவென்று. நூல்கள் பல்லாயிரம். நூலோர் பலமடங்கு. தொட்ட இடமெல்லாம் முளைக்கின்றன கொள்கைகள். ஆனால் மானுடம் தன்னை தான் நோக்கி உசாவத் தொடங்கிய நாள் முதல் தத்துவத்தின் வினாக்கள் ஒருசிலவே. விடைகளும் அவ்வாறே. வேதமுடிவுகாண எழும் இச்சிந்தனையை சிலர் வேதாந்தம் என்கிறார்கள்.
அனைத்தும் மாறுவது நாம் மறக்கப்படுவோம் என்பதற்கான சான்று. மாறாமலிருக்கும் ஒன்று நாம் எஞ்சவும் கூடும் என்பதற்கான நம்பிக்கை .
இனியவர்களே , பெருவெள்ளம் எழுகையில் உங்கள் தனிக்கிணறுகளால் என்ன பயன் ? அவை விண்ணில் ஊற்று கொண்டவை ஆயினும் .
நொய்மையான இல்லங்களை , ஒழுகும் களஞ்சியங்களை நீச்சலறியாத இளமைந்தரைக் கொண்டுள்ள இல்லறத்தாரின் அச்சத்தால் எதிர்கொள்ளப்படுகிறது இன்றைய பெருவெள்ளம்.
எதிரியை அஞ்சுபவனைவிட ஏழு மடங்கு கோழை தன்னை அஞ்சுபவன்
தீயில் இறங்கி உருகி மாசு களைந்து வெளிவரும் பொன் அறியும் தீயென்றால் என்னவென்று.
அமைதி என்பது அமைதியென்றும் உணரப்படாத நிலை. மகிழ்ச்சி என்பதும் அமைதியின்மையை.
இப்படி பல வரிகள் ..
மானுடப் பெருவெள்ளத்தில் கூர்ந்து நோக்கப்படுபவர்கள் மிகமிகச் சிலரே!
சேருமிடத்தை எண்ணினாலும் கூட அது பயணமென்றாகாது. செல்வதோ வருவதோ பயணம் அல்ல . வளர்வது மட்டுமே பயணம் என்றுரைக்கும் ஆசானுக்கு நன்றிகள் கோடி.
இப்பயணத்தில் உடன்வரும் வாசிப்பை நேசிப்போம் நண்பர்களுக்கு என் அன்பு.
- கே. எம் .ஆர். விக்னேஸ்
(04/05/2026 )

Comments
Post a Comment