பத்துலட்சம் காலடிகள் - வாசிப்பனுபவம்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் பத்துலட்சம் காலடிகள் நூல் குறித்து கடலூர் சீனு அவர்களுடன் உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
அவ்வப்போது நண்பர்கள் சொல்வார்கள் .. அடிக்கடி எழுத்தாளர்கள் சொல்வார்கள்.. நேற்றுதான் இந்த நூலைக் கொடுத்தார்கள் இரவுக்குள் படித்து முடித்துவிட்டேன் என . அதைகேட்கும்போது சற்று வியப்பும் பொறாமையும் ஒருங்கே எழும் உள்ளே. மூன்று நாட்களில் ஒரு முழு தொகுப்பை வாசித்தது எனக்கு இதுவே முதல்முறை.
பத்துலட்சம் காலடிகள் பற்றி ..
வேட்டு , வேரில் திகழ்வது , ஓநாயின் மூக்கு , கைமுக்கு, பத்துலட்சம் காலடிகள் என ஐந்து கதைகள் . ஒளசேபச்சன் என்கிற ஒய்வு பெற்ற காவல் அதிகாரியுடன் கடற்கரையில் காட்டிற்குள் உணவகத்தில் மதுபானக்கூடத்தில் என நண்பர்கள் உணவும் மதுவும் உடனிருக்க நிகழ்த்தும் உரையாடல் பாணியிலான கதைகள் இவை. மையக்கதைகளை ஒளசேபச்சன் சொல்கிறார் அவரின் பணி அனுபவத்தில் இருந்து .. அவரையும் சேர்த்து கதையாக்கி நம்மிடம் சொல்கிறார் மலையாளமும் தமிழும் சரிபாதி தன்னுள் கொண்ட பாண்டித்தமிழ் எழுத்தாளர் (இவரும் ஒளசேபச்சன் நண்பர்களில் ஒருவர்)
முதலில் களம் அமைக்கப்படுகிறது, பேச்சு சுயபகடி , சுய சமூக , மத பகடி என தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் ஒளசேபச்சன் பின்னோக்கி சென்று தனது பணிக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கத் தொடங்குகிறார் அதை மட்டும் சொல்லாமல் அதற்கு பின்புலமாய் உள்ள வரலாற்றுத் தரவுகள் (அது தனி மனித அல்லது அந்த சமூகம், அரசு ,மண் சார்ந்த வரலாறாகவும் இருக்கலாம் ), அதில் இவர் பங்கு கொண்ட நிகழ்வுகள் , அதில் கண்டடைந்தவைகள் , முடிவாக முடிவை சொல்லாமல் அங்கு அவருடன் மதுவருந்திக்கொண்டிருந்த நண்பர்களும் வாசிக்கும் வாசகர்களும் நிலையழிவை நோக்கி செல்லும்வண்ணம் சில திருப்பங்கள் என பல தளங்களை கொண்டுள்ளன ஒவ்வொரு கதையும்.
வேட்டு கதையில் ஜானம்மா ஏன் பாஸ்கரனின் கையை ஆகாய ஊஞ்சலில் ஆடும்போது விட்டுவிட்டாள், வேரில் திகழ்வதில் தந்தை ரொசாரியோவை காட்டிக்கொடுக்காமல் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் அழுதது ஏன் , அதே கதையில் யானையிடம் மட்டும் எப்படி அந்த சிறுவனால் பேச முடிந்தது . ஓநாயின் மூக்கு இன்னும் தொடர்கிறதா நம்மை , கைமுக்கு நின்றிருந்தாலும் அனுமன் சிலை (நம்) உள்ளே தானே இருக்கிறது, பத்து லட்சம் காலடிகள் கதையில் ஹாஷிம் ராதாமணியிடம் காட்டிய அன்பின் உட்பிரிவு என்ன , அவளிடம் வேறுயாரும் காட்டாத அதன் பெயர் உண்மையிலேயே என்ன .. ஹாஜி எம்.ஏ அப்துல்லா சிரித்த முகத்துடன் நிலைத்த தன்மையுடன் ஆடும் ஆட்டமென்ன அது தெய்வத்தின் ஆடலேதானா .. இப்படி பல கேள்விகள். ஆம் என்றும் இல்லை என்றும் . இரண்டிலும் சேரா வேறு பதில்களும் வந்து முன் நிற்கின்றன .
மனித அகத்தின் பல்வேறு கூறுகளை பரிணாமங்களை காட்டுகிறது இந்த கதைகள். இவைகளை வாசித்த ஒருவன் அவனே அறியாமல் அஞ்சுவதற்கும் ஆச்சர்யப்படுவதற்கும் வாய்ப்புகள் குறைவு.
நண்பர்களின் பகடி கலந்த உரையாடல்களுக்கு ஒரு முறை , மையக்கதை கொள்ள ஒருமுறை , அதுசொல்லும் கதையறிய ஒருமுறை அது நின்றிருக்கும் வரலாற்றுக்காலம்வரை ஒருமுறை , நுண்தகவல்களுக்காக ஒருமுறை என பலவாசிப்புகளை கோரி நிற்கிறது இந்த தொகுப்பு.
வேட்டு கதையில் தலையில் ஆப்பிள் வைத்து சுடுவது பற்றிய விவரணைகள் , ஜானம்மாவின் பீப் பொரியல் , பத்துலட்சம் காலடிகளில் பத்தேமாரி கட்டுமானம் பற்றிய குறிப்புகள் , ஓநாயின் மூக்கு கதையில் வரும் ஒரு நீண்ட தொடர் வாழ்க்கை அதில் நிகழும் ஒட்டுமொத்தம் , கைமுக்கு கதை நாம் உதவுகிறோம் ஆனால் உதவுகிறோமா என கேட்டு நம்மை நோக்கி விரல் சுட்டும் பல இடங்கள்.
என்னை நிலைகுலைய வைத்தது அனைத்து கதைகளும்தான் என்றாலும் , நெருங்கி எனது சில செயல்பாடுகளை அன்றாடத்தை கேள்விக்குள்ளாக்கியது கைமுக்கு, ஓநாயின் மூக்கு மற்றும் பத்துலட்சம் காலடிகள்.
ஓநாயின் மூக்கு வாசித்தபோது இந்த வரிகளில் சற்று நெருடியது, ஏன் என்று தெரியவில்லை அப்போது . 'அவள் மேஷ ராசியில் பிறந்தவள். அவளுக்கு மேஷினி என்று பெயரிட்டார் பாச்சுக் கைமள்'. அதற்கான விடை வந்தது மாலை கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடம் ராசி நட்சத்திரம் சொல்லும்போது எங்கள் அனைவரின் சார்பாக என் மனைவி ராசி நட்சத்திரங்கள் சொன்னாள் . அவளின் ராசியாய் அவள் சொன்னது மேஷம்.
'மனிதன் யார்? பாவப்பட்ட மிருகம். பயம் ,ஆசை, காமம், பகை ஆகியவற்றால் ஆட்டுவிக்கப்படுபவன். சரித்திரம் இப்படி ஓநாய் போல ரத்தவாடைதேடி மூக்கை நீட்டி தலைமுறை தலைமுறையாக பின்னால் வருமென்றால் என்ன செய்வான்?'
'இது சுல்தான்களுக்குரிய உடைவாள். இதை வழிப்பறிக்கு பயன்படுத்தக்கூடாது'
'ஒன்று பிழைத்தாலும் ரயில் பெட்டி மறுபடியும் கடலுக்குள் சென்றுவிடும்'
அமைதியை ... கூடவே பெரும் அச்சத்தை உருவாக்கி துயில் கலைத்த கதைகள் இவை.
- கே.எம்.ஆர் விக்னேஸ்
Comments
Post a Comment