தூயது
குழலினிது யாழினிது தொடங்கி இன்று வரை குழந்தைகளை சிலாகிக்காத போற்றாத இலக்கியங்கள் இல்லை . அனைத்தையும் படித்துவிட்டுதான் அந்த குழந்தைகளை வன்புணர்வுக்கு நிகராக பெற்றோர் என்ற பெயரில் அவர்தம் வளர்ச்சியில் அக்கறை என்ற பெயரில் அவர்களை நசுக்கவும் செய்கிறோம் .
எழுத்தாளரும் கதைசொல்லியுமான திரு பவா செல்லத்துரை ஒருமுறை சொன்னார். "உலகத்திலேயே அதிகக் கொடுமைக்கு உள்ளாவது பெண்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன ஆனால் நான் சொல்கிறேன் . பெண்கள் அல்ல குழந்தைகள் . அதுவும் பெற்றோரால் சுற்றத்தால் சமூகத்தால் " என்று . நானும் அதை பெரும்பாலும் ஒத்துக்கொள்கிறேன். மல்லாக்கப் படுத்து என்னையே நான் மாரில் துப்பிக்கொள்ளும் வகையான சீறல்களை எனது குழந்தைகளிடம் காண்பிக்கும் தருணங்கள் தவிர்த்து மற்ற நேரத்தில் .
சரி இப்போது நான் சமீபத்தில் என் குழந்தைகளிடம் கண்ட தூய தருணங்கள் சில .
முதலாவது :
இரவு தூங்கப்போகும் நேரம் . கணவன் மனைவி என்ற சொற்களை எங்களிடமோ அல்லது வேறெங்கோ கேட்டுவிட்டு அதன் பொருளறிய விழைந்தான் நான்கு வயதாகும் நிமலன் ரெங்கநாதன். நாங்களும் திருமணம், கல்யாணம், குடும்பம் என விளக்கம் கொடுத்தோம். அவனது அடுத்த கேள்வி 'நான் யாரை கல்யாணம் பண்றது ? ' நீ பெரியவனா ஆனதும் சொல்றோம் அப்ப ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணலாம் என்றோம் . அதற்கு அவனின் பதில் ' இல்ல நான் அம்மாச்சிய தான் கல்யாணம் பண்ணுவேன் '
இரண்டாவது :
எட்டு வயதாகும் யாகவியும் நானும் உணவருந்திக் கொண்டிருந்தோம் விரைவில் நடக்கவிருக்கும் எனது அக்காள் மகனின் திருமணத்தைப் பற்றி பேச்சு வந்தது . அவள் சமீபத்தில் நடந்த அவளின் சித்தி திருமணம் போல அது இருக்குமா என்றாள் ( அதாவது முதல் நாள் வரவேற்பு, மாப்பிளை சாரட்டில் ஊர்வலம் , குளிரூட்டப்பட்ட அரங்கில் திருமணம் , அங்குள்ள அறைகளிலே மணவீட்டார் தங்குவது இப்படி ). நான் இல்லம்மா இது வேற மண்டபம் வரவேற்பு கிடையாது அங்க தங்குறதும் தேவை இல்ல . காலையிலே திருமணம் முடித்து மதியம் மாலை வீடு வந்து விடலாம் என்றேன் . அதற்கு அவள் 'சரி சரி ரொம்ப பெரியவிளக்கமா கொடுக்குறீங்க . நான் இதுவரைக்கும் பாத்ததே ரெண்டு கல்யாணம்தான் ஒன்னு என் மாமா கல்யாணம் இன்னொன்னு சித்தி கல்யாணம் . என் சொந்த அம்மா அப்பா கல்யாணத்தையே நான் பாக்கல ' என்றாள்
மூன்றாவது :
இரவுணவு நேரம் சட்னியில் இருந்த கருவேப்பிலையை சாப்பிட சொல்லி நிமலனிடம் சொன்னேன் . அத சாப்ட்டா ஆர்ம்ஸ் வருமா என்றான் . ஆமா வரும் என்றேன் . எனக்கு ஏற்கனவே ஆர்ம்ஸ் பெருசுதான் என்று டி சர்ட்டை தூக்கி காண்பித்தான் . இல்லப்பா கூடவே முடி நல்லா வளரும் என்றேன் . உங்கள மாறியா என்றான் . அவன் கேட்ட தோரணையை வைத்து எந்த பதில் சொல்வது என உடனே யூகிக்கமுடியவில்லை . அதனால் இல்ல இன்னும் நல்லா வளரும் என்றேன் . அவன் கோபமாக கறிவேப்பிலையை தூக்கி கீழே போட்டுவிட்டு ' இல்ல உங்கள மாதிரிதான் எனக்கு வேணும் ' என்றானே . அன்றிரவு இனிய தூக்கம் ஆச்சரியத்துடனும் அகமலர்ச்சியுடனும்!
வரவு செலவு கணக்கு எழுதுகிறேனோ இல்லையோ . இந்த தருணங்களை பதிவு செய்துவிடவேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது. அது அவர்களின் குழந்தைமையை நம் மனதிற்குள் இருந்து எத்தருணத்திலும் மீட்டெடுக்க வழிசெய்யும் அல்லவா.
Comments
Post a Comment