வெண்முரசு - காண்டீபம் - வாசிப்பனுபவம்

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் இருக்கும் ஊரில் தமிழ்ச் சங்கமொன்றின் தீபாவளி விழாவில் வழக்கத்திற்கு மாறாக சில தமிழ்நூல்களையும் விற்பனைக்கு வைக்கலாம் என ஏற்பாடு செய்திருந்தோம். புத்தகங்களை ஒரு மேசையில் வைத்துவிட்டு அந்த விற்பனைக்கு உதவ ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டிருந்தேன் . நான் சென்று கேட்ட அனைவரும் ஒரே பொருளை வெவ்வேறு சொல்கொண்டு தந்தனர். 'என்னால் அது முடியாது' என்பதுதான் அது . அப்போது ஒரு நண்பர் அவராக வந்து புத்தகங்களை எடுத்து பிரித்துப்பார்த்துக்கொண்டிருந்தார் . கொஞ்சம் பேசியதில் அவருக்கு அந்த மேசையில் அன்று நாள் முழுக்க அமர்ந்து விற்பனையை கவனிக்க விருப்பம் எனத் தெளிந்தேன்.

அப்போது அவரிடம் நூல்கள் அதன் ஆசிரியர்கள் நூல்களுக்கான விலை விவரங்கள் என சொல்லத்துவங்கினேன். அதை அவர் இடைமறித்து நானும் புக் படிப்பேன். ஜெமோ வாசகன்தான் என்றார் ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரில் வாழ்ந்து வரும் பிரசாத். அன்று அத்துணை கூட்டத்திலும் நானும் அவரும் தனித்து இருந்தோம். உரையாடினோம் . அப்போது அவர் கேட்ட கேள்வி ' வெண்முரசு படிக்கிறீங்களா' . நான் 'இல்ல இப்போதான் தன்மீட்சி அறம் என சென்றுகொண்டிருக்கிறேன் ' என்றேன் . 'வெண்முரசு படிங்க விக்னேஸ் . அது வேற மாதிரி ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் ' என்றார். சிலர் நம்மிடம் உணவை , காலணி கடைகளை அல்லது துணிக்கடைகளை விவரிக்கும்விதம் கடன்வாங்கியாவது நாம் அங்கு சென்று விடும் விதத்தில் விதந்தோதுவர். அது ஒரு நகைப்புக்கு வழிவகுக்குமேயொழிய வேறொன்றும் அல்ல என்று அறிவர் உணர்வர் . ஆனால் பிரசாத் அப்படி சொன்னதில் அறிதலும் உவகையும் ஒன்றே கலந்து கண்களில் ஒளிமின்ன சொன்னவிதம் என்னில் அப்படியே தங்கிவிட்டது. எந்த இடத்தில் எந்த திசை நோக்கி நின்றுகொண்டு பேசினோம் என்றுகூட என்னால் நினைவுகூர முடியும் . தவழும் என்னை தாவ சொல்கிறார் என மனதுள் அன்று எண்ணிக்கொண்டேன் .

இந்த வரிகளை எழுதும் நாளில்  வெண்முரசின் எட்டாவது நாவலான காண்டீபம் முதல் வாசிப்பு நிறைவடைந்து சில நாட்கள் கடந்துவிட்டிருக்கின்றன. சுமார் இரண்டு வருடத்தில் எட்டு நாவல்கள், பல நூறு வாழ்க்கைகள், எண்ணற்ற அறிதல்கள் என்று நிறைவை அளித்து நில்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது வெண்முரசு என்னுள். நண்பர் பிரசாத் , உடன் வாசிக்கும் வாசிப்பை நேசிப்போம் நண்பர்கள் , தொடர்ந்து வாசிக்க எனக்கு ஒத்துழைப்பை அளிக்கும் சௌமியா,  யாகவி & நிமலன் ரெங்கநாதன் என அனைவருக்கும் என் நன்றியும் அன்பும் .

இப்போது காண்டீபத்தின் கதையை என் பார்வையில் சில வரிகளில் சொல்லி அது என்னுள் எய்தியதென்ன என்றும் எழுத முயல்கிறேன்.

குருகுலத்து கௌரவர்களில் ஒருவரான சுபாகுவின் மகன் சுஜயனின் கனவில் தொடங்குகிறது இந்நாவல். நொய்ந்த உடலும் நிற்காக் கனவுகளும் கொண்டு செவிலிகள் சேடிகளின் அரவணைப்பில் வளர்ந்துவருகிறான் சுஜயன் . உள்ளமோ குருதியில் தோய்ந்து போர் கனவுகளை குழந்தைமைக்கே உரிய வகையில் நித்தமும் அவனுக்கு அளிக்கிறது.இளவரசர் இப்படியா இருப்பது என  செவிலி அன்னைகளால் ஒருவகையான நகைப்புக்கு உள்ளானாலும் அவர்களால் முழுதெடுக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறான். 'அவரின் உள்ளம் கொண்ட உறுதியை உடல் கொள்ளவில்லை என்பதால் இந்த நலிவு. இதற்கு மருந்து நல்லுணவும் நற்சூழலும் . காட்டுயிர்களை அன்றாடம் காணட்டும் . வெயிலும் காற்றும் ஏற்கட்டும். அதோடு மாவீரர்களின் கதையும் ' என்கிறார் நிமித்திகரான அஸ்வகர் .

சுஜயனுக்கு உடன் இருந்து பணிவிடைகள் செய்யும் நீராட்டறைச்செவிலி சுபகை மற்றும் முஷ்ணையுடன் இளைய பாண்டவரின் செவிலித்தாய் மாலினியின் தவக்குடில் செல்கிறான் சுஜயன். சுபகை அனைத்து வகையிலும் சுஜயனுக்கு நெருக்கமானவள் அவனை சீராட்டி வளர்ப்பதில் அவனுடன் உரையாடுவதில் என தாய்மையின் , அன்பின் இருப்பாய் இருக்கிறாள் . அவளுக்கும் இளையபாண்டவருக்குமான உறவு வெறும் கூடல் மட்டுமல்ல பெரும்காதலும் கூட . அதை அவள் முதிய சேடியிடம் விவரிக்கும் தருணங்கள் அழகு. அந்த ஒருநாள் போதும் என் மொத்த வாழ்நாளுக்கும் என்கிறாள் கண்களில் மீண்டும் அந்த நாளுக்கு சென்று மீண்ட சுபகை . மாலினியின் குடிலில் அவள் மடியிருந்து அர்ஜுனனின் கதைகளை கேட்க துவங்குகிறான் சுஜயன் .

மாலினியின் மூலமாக சுஜயன் கேட்கும் கதைகள் அர்ஜுனனின் வீர தீர செயல்களைப்பற்றி  இயற்றப்பட்ட காவியங்களை மேற்கோள்காட்டி சொல்லப்படுகிறது . கனவுத்திரையில் கந்தர்வர்களிடம் அவர் உலகில் சென்று போரிட்டு சித்ரரதனிடம் இருந்து அறவிழி பெற்று சாஷுஷி மந்திரம் கற்று மீள்கிறான் அர்ஜுனன் .

இந்த நாவல் அர்ஜுனன், உலூபி , சித்ராங்கதை , சுபத்திரை என திரௌபதி தவிர்த்த மூவரை கவர்ந்துவந்த கதைகளை சொல்கிறது .அலையுலகான நாகருலகு சென்று உலூபியை மணம் கொள்கிறான். முதல்நடமிட்டு தன்னை வீரமங்கை பால்குனையாய் மாற்றி மணிபுரி இளவரிசி சித்ராங்கதையை வென்றெடுக்கிறான் . ஐந்துமுகத்தழலில் அவன் செல்வது ஆன்மீகப்பயணம் . ஆனால் அதற்கு முன் நீ வெல்ல வேண்டிய களமொன்றுள்ளது என்றுரைக்கப்பட்டு மீள்கிறான்.

இளையவரின் செய்தி கொண்டுவரும் கதனுடன் அர்ஜுனனின் ரைவத மலைப்பயணமும் அவர்களின் உரையாடலும் அரசியல் ஆடல்களுக்கு மட்டுமல்ல அன்றாட ஆடல்களுக்கும் உடன்வரும். பலராமரை சூரசேனரை தங்கள் பக்கம் வைத்துக்கொண்டு யாதவ குடிகள் இளைய யாதவரின் புகழடக்கும் விதமாய் சுபத்திரையை மணத்தன்னேற்பு எனும் நாடகம் மூலம் துரியோதனனுக்கு அளிக்க முயல ,அதை எதிர்த்து அவை புகுந்து அனைவர் முன்னிலையிலும் சுபத்திரையை கவர்ந்து வருகிறான் தேரோட்டியின் நண்பன்.

அரிஷ்டநேமி அரசர்களின் வாழ்வை ஒதுக்கி தவம் மேற்கொண்டு வருகிறார். அரசியல் காரணங்களுக்காக அவரை மறுபடியும் உலகியலுக்கு கொண்டுவர முயற்சிக்கிறார் இளைய யாதவர் அர்ஜுனனின் துணையுடன் . மூத்தவர் அரிஷ்டநேமி மானுடக் கீழ்மைகளை களைந்து அனைத்துயிருக்குமான மெய்மையில் கலந்து முழுமை கொள்ளும் பேராளுமை.

இந்திரபிரஸ்தத்துக்கு அர்ஜுனன் திரும்பும் காட்சிகளில் முடிகிறது காண்டீபம். அவனின் வருகையில் அரசியர்கள் திரௌபதி , சுபத்திரை மகன்கள் சுருத கீர்த்தி , அபிமன்யூ , சுஜயன் மகிழ்ச்சி கொள்கிறார்கள். இளையபாண்டவரின் கைப்பற்றி தேரேறி மாநகருலா செல்கிறது சுபகையின் காதல்.

காண்டீபம் என்னுள் எய்தியவை :

அர்ஜுனன் சென்ற பயணங்கள் என்று மேலோட்டமாக சொல்லலாம்தான் . ஆனால் இப்போது மேலெழுந்து நிற்பது சில தருணங்கள் . தருணங்கள் என்ன கொடுத்தது என்பதை வரிகளில் சொல்லி முடித்துவிட முடியுமா என்ன. அவை வழியென, முடிவிலா துணையென வருமெனும்போது .

ஷத்ரியர்கள் தனக்கென ஒரு வாழ்க்கையற்றவர்கள் என சேடிகள் செவிலிகள் பேசிக்கொள்வது .

அவரிடம்(அரிஷ்டநேமி) நான் தோற்றேன் என்று இளையயாதவர் சொல்லுமிடம். வெல்லமுடியா ஆற்றல் என்று இதுவரை காட்சி தந்த இளையவர் இந்த இடத்தில் காண்பிப்பது அதனினும் உச்சம்.

அர்ஜுனனை சுபகை வர்ணிக்கும்போது சொல்லும் உவமை ' விலங்குகளில் கொழுத்தவை உண்டு . வான் பறவைகள் எப்போதும் சீருடல் கொண்டவை '.

அந்த ஒருநாளில் அவர் தன்னை என்ன பெயர் சொல்லி அழைத்தார் என எயினியை அர்ஜுனைத் தவிர வேறெவரையும் தொடாத அவனின் செவிலித்தாய் மாலினி சொல்ல வைக்கும் தருணமழகு!.

'இன்றுவரை இலக்கடைந்த அத்தனை தேர்களும் அவ்வழியில் உள்ள பிற எவற்றையும் நோக்காதவையே'

அம்பனெப்படுவது பருவுருக்கொண்டு காற்றிலெழும் விழியே !

கந்தர்வரே வெல்லப்படுபவர் அனைவரும் பிளவுண்டவர்களே. ஒன்றென நின்றவன் தோற்றதில்லை '

தனி வல்லமையை அளிப்பது எதுவோ அதுவே வீழ்த்தும் பொறியும் ஆகும் என்பது போர்நூல் கூற்று  - அர்ஜுனன்

அறத்தின் பொருட்டு வில்லேந்துபவனுக்கு மட்டுமே கொல்லும் உரிமையுள்ளது. அறத்தின் பொருட்டன்றி சிந்தப்படும் ஒவ்வொரு துளிக் குருதியும் பழி சூழ்ந்ததே .. அர்ஜுனன்

கந்தர்வவிழி தரும் சித்ரரதன் அர்ஜுனனிடம் சொல்வது  ' இப்புவியில் மானுட விழிக்கு எட்டாதவையே பெரும்பகுதி என்றறிக '

மாலினி எயினியிடம் : உள்ளத்தை எண்ணத்தால் கழுவலாமடி. பிறப்பும் இறப்பும் உறவும் எல்லாம் மானுடனின் வெறும் பாவனைகள் மட்டுமே.

அன்று உடல் உள்ளம் ஆன்மா மூன்றையும் எனக்களித்திருந்தார் முற்றிலும் என்னுடனேயே இருந்தார் - எயினி

மாறாததென நின்றிருக்கும் சொற்களை நம்பியே இங்கு மானுடர் வாழ்கிறார்கள்

'பகை முடித்தல் , என் பெயர் என்றும் நிற்றல் , நீயென நானும் ஆதல் ' காம்யகன் திரிசரஸை வெல்லும் சமயத்தில்

பிறன் என ஏதுமற்றவனே பயணியாக முடியும் .

தனிமையில் பிறரை எண்ணி ஏங்காதிருக்கவும் பிறருடன் இருக்கையில் உள்ளத்தில் தனிமை கொள்ளாதிருக்கவும் பயின்றதே அவன் கற்ற கலைகளின் உச்சம் எனப்படுகிறது.

பால்குனை சித்ராங்கதனை ஊழ்கத்திற்கு தயார் செய்தல் அதன் நெறிகளை அவனுக்கு சொல்லும் வரிகள்

சென்று தைக்கும் அம்புக்கு ஒரு கணம் முந்தி அம்பொன்று உண்டென்று அறிந்தால் வில்லேந்தும் தகுதி பெறுகிறீர்கள் ..

ஆயிரம் களம் கண்டாலும் அடுத்த களம் முற்றிலும் புதியதென்றுணர்ந்தவனே வீரன் . களம்தோறும் மாறாதிருக்கும் சில உண்டு நம்மில் . நான் கற்பிக்க விழைவது அதையே .

அவர்களின் நகரில் அழகென்பதே செல்வமென்று இருந்தது. அடைவதென்பது இல்லாமலாகி அனைத்தும் அறிதலென்று மட்டுமே இருந்தன. கொள்வதோ கொடுப்பதோ இன்றி செல்வம் மங்கலம் என்றே பொருள்பட்டது

எண்ணும் பொறுப்பு வில்லுக்கு எய்யப்பட்ட அம்புக்கு செல்லும் பணி மட்டுமே..

படைக்கலன்கள் முன் , நோயின் முன் அவமதிப்பின் முன் அச்சமற்றிருப்பவன் வீரன் உண்மையின் முன் முற்றிலும் அச்சமற்றிருப்பவனே மாவீரன். நீ அத்தகையவன்

வர்கை(முதல்நிறைவின்மை என்பது எது ? ஏனென்றால் அதுவே வாழ்வைச் செலுத்தும் முதல் வினா ), சௌரபேயி(எவ்வினாவின் முன் ஒருவன் தன் இறுதியைக் காண்கிறான் ) , சமீசி(எவ்விடையில் அவன் முதல்நிறைவைக் காண்கிறான் ? ) , புல்புதை (எவ்விடையில் ஒருவன் வினாவென்பது பொய் என உணர்கிறான் ), லதை(எவ்வினாவுக்கு தன்னையே விடையென்று நிகரவைக்கிறான் ).

எச்செயலிலும் அத்தருணத்தில் முழுமையுடன் இருப்பதென்று நான் வெறி கொண்டுள்ளேன்

ஆம் இருத்தல் என்பதன் தூய இன்பத்தை அது காட்டுகிறது. இன்பங்களில் தலையாயது உள்ளேன் என்று உணர்வதே. உயிரின் முதல் பேறு

பிரிவில் கலங்குவதில்லை என நெறி கொண்டுள்ளேன் மூத்தவரே

நான் பார்த்தன் மிச்சமின்றி விட்டுச்செல்வதால் மட்டுமே புதியவற்றை அடையமுடியும் என்று அறிந்தவன் . எக்கணமும் என்முன் பேருருக்கொண்டு எழப்போகும் முழுதறிவை பெறுவதற்காக என் கலங்களை ஒவ்வொரு கணமும் கழுவி தூய்மைப்படுத்திவைப்பவன் .

ரைவத மலை நோக்கிய பயணத்தில் தான் அஞ்சுவது எது என படிவரிடம் அர்ஜுனன் கேட்டுத் தெளியும் இடம் . அச்சங்கள் எவையாயினும் கண்ணோடு கண் நோக்காது வெல்வது அரிது ' , எளிய மொழியில் எழுதப்பட்ட நூல் நீர் - படிவர்

நான் எவெரென்று அறிவீரா - அர்ஜுனன் . 'எவராயின் என்ன ? துயர் கொண்டவர் , தனித்தவர் தேடி அலைபவர்' - படிவர்

-----------------------------------------------------------------

வையத்தில் மானுடருக்களிக்கப்பட்ட அறிதல்களனைத்தும் தெய்வங்களுக்குரியவையே . அவற்றில் ஏதாவது ஒன்றில் முழுமை கண்டவன் விண்ணவனே!

எம்மை வாசிப்பில் வாழ்வில் வழிநடத்தும் வெண்முரசு ஆசிரியருக்கு மிக்க நன்றி!

அன்புடன்

கே.எம்.ஆர். விக்னேஸ் 

Comments

Popular posts from this blog

வெண்முரசு - வெய்யோன் - வாசிப்பனுபவம்

க.நா.சு - இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

ரா.கிரிதரனின் சாதகப்பறவையின் காத்திருப்பு