உயிர்த்தெழ ஒரு பயணம் - இரண்டாம் நாள்

காலையில் எழுந்ததும் கடலைப்பார்த்து கண்விழிப்பதெல்லாம் எனது அன்றாடத்தில் ஒருவகை ஆடம்பரம் என்று தோன்றினாலும் . அதுவொரு அரிய நிகழ்வே. அப்படி புனிதவெள்ளிக்கு மறுநாள் நாங்கள் டாம்மி ஜாக்ஸ் அடுக்ககத்தில் இனிய ஓய்வுக்குப்பிறகு கண்விழித்தோம் . முதல்நாள் மழைத்தூறலினூடாகவே இருட்டில் ஆண்கள் மட்டும் கடற்கரை சென்று வந்ததால் காலை பெண்மணிகள் செல்லவேண்டும் என்பது எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு. எங்கள் பயண அமைப்பாளர் சந்திரமௌலி வழிகாட்டுதலில் வண்டி ஓட்டுதலில் சௌமியா , ரைஹானா , ப்ரியா இவர்களுடன் தாயுடன்தான் இருப்பேன் என்று நிமலன் அடம்பிடித்ததால் அவன் . இவர்கள் காலையில் வெண்மையும் நீலமுமாய் மேலே வானம் விரிந்திருக்க அதை தன்னகத்தே வாங்கி நம்மகத்தே அளிக்கும் கடலை நோக்கி சென்றனர் .

யாகவியைத் தவிர மற்ற குழந்தைகள் எல்லாம் நீள்துயிலில். யாகவி மட்டும் நாங்கள் வீட்டில் தினமும் ஒப்புநோக்க சற்று சீக்கிரம் காலைப்பணிகளை தொடங்கிவிடுவதால் அவளும் அவ்வாறே எழுந்து பழகியுள்ளாள். அதிகம் பேசவும் , கேள்வி கேட்கவும் . அவளின் இந்த செயல்பாடுகளால் சௌமியாவும் நானும் அவ்வப்போது இன்பச்சிக்கல்களில் மாட்டிக்கொள்வதுண்டு. நண்பர்களிடம் அவர்தம் குடும்பங்களிடம் . ஆனால் உள்ளூர நான் அதை பெரும்பான்மையான நேரங்களில் ரசிக்கவே செய்வேன் . எட்டு மணிக்கு முன்பு யாரையும் எழுப்பக்கூடாது என அமிர்தா மற்றும் சனா தாய்மார்களிடம் இருந்து கட்டளை வந்துள்ளதால் குறுக்கே நெடுக்கே நடந்துகொண்டிருந்தாள் யாகவி . முதல்நாள் ரோமன் பாத் மார்க்கெட்டில் வாங்கிய நூலையும் இடையிடையே வாசித்துக்கொண்டு . நான் கையோடு கொண்டு சென்றிருந்த தேவதேவனின் நடைமண்டலம் கவிதை தொகுப்பை கைபோன போக்கில் விரித்து ஒரு கவிதை வாசித்தேன். அது 'ரகசியம்' என்ற தலைப்பிலான கவிதை

இந்தக்குளிர்த்தலத்தின் குன்றாத குளிர்வேளையிலும்

குளித்துவந்த போதெல்லாம் உணரும்

புத்துணர்வின் இரகசியம்

நம் காதல்தான் அல்லவா ?

அது சூழ்நிலைக்கு சற்று பொருந்தினாலும் . வாசிப்பின் தொடர்ச்சிக்கான செயல்பாடே இந்த கவிதை வாசிப்பு . அடுத்ததாக யோகப்பயிற்சிகள் சில . இதெல்லாம் சுற்றுலா வந்த இடத்தில் செய்யவேண்டுமா என்றால். வலுக்காட்டாயமாக செய்யவேண்டியதில்லை. வாய்ப்பிருந்தால் முயலலாம் . ஆனால் பொதுவாக மக்கள் அதை விரும்புவதில்லை . மற்றவர்களை பரிகசிக்கவும் செய்வர் . அத்தகையோர் அவர்கள் அன்றாடத்திலும் உணவுக்கும் உறுபொருளுக்குமன்றி வேறெதையும் செய்யாதவர்களே. விரிகடல் காணச்சென்றவர்கள் வருமுன் குளித்துதயாராக இருந்தேன். என்னதான் வாசிப்பு , யோகம் என்னை நான் செயலில் வைத்துக்கொண்டுள்ளேன் என நம்மையும் பிறரையும் நம்பவைத்துக் கொண்டிருந்தாலும் .சொகுசை எதிர்பார்க்கும் ஆண் சிலநேரங்களில் உள்ளிருந்து எட்டிப்பார்க்கவே செய்கிறான். குறிப்பாக உணவு நேரம் உள்ளிட்ட நமது தேவை நேரங்களில்.

காலையுணவு பிரட் , கார்ன் பிளேக்ஸ் , காபி என ஆங்கில முறைப்படி விரைவாக முடித்துவிட்டு Tindagel Castle க்கு கிளம்பினோம் . இந்த கோட்டை கடற்கரையிலேயே அமைந்துள்ளது . இது ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிங் ஆர்தரின் பயன்பாட்டில் இருந்துள்ளது . அவர் இங்கிலாந்தின் இடைக்கால இலக்கியத்தில் நாட்டுப்புற நாயகனாக வர்ணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அந்தக்காலத்தில் இது கடல்வழி எதிரிகளை தடுக்கும் வண்ணம் இங்கு அமைக்கப்பட்டிருக்கலாம். சொகுசாய் ஊருக்கு உள்ளே அரண்கள் அமைத்து வாழாமல் இங்கிருந்து தலைமை கொண்டாரோ கிங் ஆர்தர் என்று தோன்றியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து இந்த இடம் சுற்றுலாத்தலம் வாகன நிறுத்தத்தில் இருந்து அந்த கோட்டையை நோக்கி செல்லும் பாதையே ஒரு மலையை ஒட்டி ஏற்ற இறக்கங்களுடன் சென்றது. அதுவே ஒரு இனிய அனுபவமாக நான் உணர்ந்தேன். அங்கங்கே சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். முன்பெல்லாம் இது போன்ற இடங்களுக்கு செல்லும்போது படங்கள் எடுப்பது என்பதே பிரதான செயல்பாடாய் இருக்கும். இப்போது ஞாபகத்திற்கு சில எடுத்துவிட்டு அந்தக்காட்சிகளில் நம்மை உட்செலுத்த வேண்டும் என்பதே நான் எனக்கே சொல்லிக்கொள்வது . மேலே ஏறிவிட்டோம் அங்கே வெறும் கற்குவியல்கள் மற்றும் புல்வெளிகளே இருந்தது. அங்கிருந்து பார்க்க கீழே கடல் அழகாய்.

ஆனால் மனதிற்குள் இன்னும் சற்று வேறு திசையில் சென்றால் ஆர்தரின் கோட்டையை பார்த்துவிடலாமா என்பதே என்பதே கேள்வியாய் இருந்தது. ஆனால் அங்கிருந்த பணியாளர் அதுதான் கோட்டையே என்றார் . அதாவது கோட்டையின் எச்சங்களை பார்க்க தான் இவ்வளவு கூட்டம் . உடன் வந்த நண்பர்கள் முகங்கள் ஏமாற்றத்தில் வாடின . எனக்குள் ஒரு அமைதியை ஏற்படுத்தியது அந்த குவியல்களும் புல்வெளிதரையும். ஒருகாலத்தில் அதிகார மையமாய் இருந்த இடம் . இன்று சிலருக்கு பலவற்றை சொல்லாமல் சொல்வதாகவும் . பலருக்கு கடலோடு சேர்த்து படம் எடுக்கும் இடமாகவும் மாறியதன் விந்தை. விந்தையல்ல அதுவே என்றும் இங்குள்ள உண்மை . இன்னொன்றும் தோன்றியது ' வெள்ளைக்காரன் கற்குவியலை தொன்மத்தின் சின்னமாய் மாற்றுகிறான். நாம் தொன்மங்களை கற்குவியல்களாய் மாற்றிவருகிறோம் ' என்று.

நிமலன் குழந்தையாய் இருக்கும் போது வாங்கிய Buggy யை அவன் அப்போது பயன்படுத்தியதைவிட இப்போதுதான் அதிகம் பயன்படுத்துகிறான் . அதுவொரு வகையில் எங்களுக்கும் வசதிதான் அதில் வைத்து அவனை தள்ளி சென்றுவிடலாம். தூக்கி செல்லவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் மலைப்பாங்கான கற்கள் மற்றும் மேடுபள்ளங்கள் நிரம்பிய Tindagel Castle பகுதியிலும் அதையே கேட்டான். விளைவு சந்துரு மற்றும் யாசரும் அங்கங்கே வந்து எனக்கு கைகொடுத்து தூக்க உதவிசெய்தனர் .

அருகில் இருந்த மெர்லின் குகைக்கு சென்றோம். அங்கும் படங்கள் பரவசங்கள் என சில நிமிடங்கள் . இந்த குகை வாயிலில் ஒரு பாறையில் மனித முகத்தை மிகவும் சிறப்பான வகையில் செதுக்கிவைத்துள்ளனர். அதை நீங்கள் உடனே கண்டுபிடித்துவிட முடியாது. முதலில் பொறுமையாக நின்று பின்பு கண்ணோட்டி காணவேண்டும் அதை. எங்கள் குழுவில் ஒருவர் அதை என்னிடம் காண்பிக்க நான் வியந்துவிட்டேன் . பின்பு அவர் சொன்னார் ஒரு வெள்ளக்கார அம்மணி சொல்லி சென்றது என .

இளைப்பாறும் இடத்தில் சுற்றி வெள்ளைக்காரர்களும் ரொம்ப நாட்களுக்கு முன்பு இங்கு வந்து தங்களை இந்த ஊர் பூர்வக்குடிகளை நகல்செய்து அவர்களைவிடவும் நாங்கள் ஒருபடிமேல் என்று அகத்தில் நினைத்து ஆனால் புறத்தில் எந்த மாற்றமும் அற்ற நம்மூர்காரர்களும் ஆங்கில உணவுகளை சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் . அங்கு ஒரு மேசையை பிடித்து நாங்கள் எங்கள் புளி சோறை சாப்பிட்டோம். ஆர்கானிக் என்று பெருமைக்காக சொல்லவில்லை. தொட்டுக்கொள்ள இந்த ஊர் cheese and onion Walkers Crisps தான் . இதுபோன்ற பயணங்களுக்கு Grand Sweets மற்றும் அடையார் ஆனந்த பவன் கடல் கடந்தும் உதவி புரிகிறார்கள் புளி மற்றும் தக்காளித் தொக்கு வடிவில். அவை நம் நேரத்தை வெகுவாக சேமித்து வந்தவேலையை செய்யவைக்கிறது .

Tindagel Castle பகுதிக்கு வேறு சில சிறப்புகள் என்னவென்றால் இங்குதான் இங்கிலாந்தின் பழைமையான தபால்நிலையம் உள்ளது. இன்னொன்று நாம் சிலேட்டு என்று சொல்வோமே பாலர் பள்ளியில் பயன்படுத்திய எழுது பலகை. அதற்கான slate Rocks இங்கு அதிகம் . அந்த தபால் நிலையம் பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்தது . அதன் வடிவமும் அம்சங்களும் மாறாமல் அப்படியே பரமாரிக்கின்றனர் National Trust அமைப்பினர் . அது இன்று சுற்றுலாத்தலம். அதன் ஊழியர்கள் தபால் நிலைய ஊழியர் போன்ற சீருடையில் பணிபுரிகின்றனர். இதன் கூரை முழுக்க சிலேட் கற்களால் ஆனது . பின்பக்கம் கிணறு , அமர்ந்து படிக்க புத்தகங்களுடன் கூடிய படிப்பறை தோட்டம் என அனைத்தும் உள்ளடக்கியது இதன் சிறிய வளாகம். நண்பர் ஒருவர் சொன்னார் இங்கிருந்துதான் நம்ம தாத்தாவுக்கு தாத்தாலாம் தொரைங்களுக்கு எழுதுன கடிதமெல்லாம் வந்து போய் இருக்கும் என்று. உள்தோன்றி வெளிவந்துவிடாத சில சொற்களுடனும் பரிதாபத்துடனும் அவரை அன்புடன் பார்த்தேன்.

சுமார் ஆறு மணிக்கு அறைக்கு திரும்பினோம். அன்று நல்ல வெய்யில் . இந்த ஊரில் வெய்யில் என்றால் அது ஒரு திருவிழாவுக்கு நிகரானது. சற்று நேரம் ஒய்வு தேநீர் என நேரம் கழிந்தது. மாலை அனைவரும் கிளம்பி summerleach கடற்கரைக்கு சென்றோம் சூரிய அஸ்தமனம் காண . வாழ்நாளில் முதன்முறையாக முழுக்கக் கண்ட அமர்ந்து நின்று பரவசத்தில் என அனைத்து வகையிலும் பார்த்த சூரிய அஸ்தமனம் அது. சொல்லிவிளக்கத் தெரியவில்லை . ஏதோ ஒரு பெரும்நிறைவு அன்று . ஒருவன் இயற்கையின் ஒவ்வொரு காலத்தையும் பருவத்தையும் நம் வாழ்நாளில் இது எத்தனையாவது என எண்ணிக்கொண்டால் எல்லா பருவத்தையும் ரசிக்கவே முடியும் .

மீண்டும் அறைக்கு வந்து கோவைப்பாணி அரிசி பருப்பு சோறு உண்டோம் . மறுபடி மறுபடி பொன்னெழுந்ததோ பின்பு தீயெழுந்ததோ என்று நினைக்கும் வண்ணம் அஸ்தமனமே மனதில் ஆட்டத்தை நிகழ்த்திக்கொண்டிருந்தது.

நாளை Miniack Theatre மற்றும் Lands End Beach ஆகிய இடங்களுக்கு பயணம்

-- தொடரும்

Comments

Popular posts from this blog

க.நா.சு - இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

வெண்முரசு - இந்திரநீலம் - வாசிப்பனுபவம்

சென்றடையவில்லை என்னும் நிறைவின்மை !