உயிர்த்தெழ ஒரு பயணம் - மூன்றாம் , நான்காம் நாட்கள் மற்றும் வீடு திரும்பல்
ஒரு குழுவாக பயணம் செய்வதில் அதுவும் அந்த பயணத்தை நோக்கிய ஒத்தக்கருத்துடைய நண்பர்களுடன் செல்வது எப்போதும் மகிழ்ச்சியே. ஆனால் அதிலுள்ள பெரிய இடரே நேர மேலாண்மை. நேர மேலாண்மையை வெள்ளைக்காரர்களிடம் காண்பிப்பதில் நிறுவுவதில் நம்மவர்கள் வல்லுநர்கள். ஆனால் நம் மக்களிடம் சலுகைகள் எடுத்துக்கொள்வோம் . நான் உண்பது மற்றவர்களின் நேரத்தை என்ற புரிதல் அறவே அற்று .
இந்த பயணத்தில் ஒரு அட்டவணையை மிகத்தெளிவாக தயாரித்து முன்னரே அளித்தது மட்டுமல்லாமல் . அதை செயல்படுத்தியத்திலும் முன்நின்றவர்கள் நண்பர் சந்துருவும் அவரது மனைவி ப்ரியாவும் .
ஊரில் மாட்டிற்கு குத்துவதற்கு (அப்படி குத்தினால் அது வேகமாக அதன் வேலையை செய்யும் .. வண்டியிழுக்கும் , ஓடும் , உழும்) தார்குச்சியை பயன்படுத்துவோம் . அது மூங்கில் குச்சிதான் அதன் முனையில் ஆணி அடித்து அதை பென்சில் முனை போன்று கூர்தீட்டப்பட்டிருக்கும். மாட்டின்மேல் அன்புள்ளவர்கள் அதை மெதுவாக மாட்டின் உடம்பின்மேல் வைக்கமட்டுமே செய்வர்.
அதுபோல இந்த பயணத்தில் எங்களை விரட்டி யாரும் யாருடைய நேரத்தையும் வீணாக்காமல் திட்டத்தின்படி செல்லவைத்தார்கள் அவர்கள்.
ஞாயிறு காலை எழுந்ததும்கூட முதல்நாள் பார்த்த செந்நிறத்தோனின் வண்ணமே மனதில் வந்துகொண்டிருந்தது. இன்றைய இடங்களுக்கு செல்லும்முன் தளத்தை வாசிப்போம் என சில நிமிடங்கள் அமர்ந்தேன். தற்செயலா அல்லது நம்விழைவே வினையாகிவந்ததா எனத் தெரியாவண்ணம் செந்நிறத்தில் க.நா.சுவின் படத்துடன் எனது பதிவு ஒன்றிற்கு ஆசிரியரிடமிருந்து மிகவிரிவான பதில் ஒன்று பிரசுரமாகி இருந்தது https://www.jeyamohan.in/214331/ .நிறைவுடன் அதைவாசித்து நெஞ்சில் நிறைத்து , வேறு நிறம் மாறாதவகையில் எனது நாளை தொடங்கினேன் .
அன்று மூன்று இடங்கள் செல்வதாக முடிவுசெய்திருந்தோம். முதலில் பார்க்கசென்றது The Miniack Theatre . இது கடலைப் பார்த்தபடி அமைக்கப்பட்டிருக்கும் திறந்தவெளி அரங்கம். நாங்கள் அறையில் இருந்து கிளம்பி சுமார் இரண்டு மணிநேர பயணத்தில் Theatre இருக்குமிடத்திற்கு வந்துவிட்டோம் . யாசர் வருவதற்கு சில நிமிடங்கள் காத்திருந்து உள்நுழைந்தோம். நம்வீட்டு உப்பரிகையில் நின்று பார்ப்பதைப் போல கடலின் அழகை அவ்வளவு அணுக்கத்தில் புதியதொரு கோணத்தில் பார்ப்பது முதன்முறை. அந்த அழகில் சற்றுநேரம் திளைத்து சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அதில் சில நிமிடங்கள் சென்று கொண்டிருக்க , நான் கீழே இருந்த அரங்கத்தையே எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தேன். இங்கு ஆங்கில நாடகங்கள் நடக்கும் என்று சந்துரு சொல்லியிருந்தார். ஆகவே சீக்கிரம் சென்று நல்ல இடத்தில் அமர்ந்துவிடவேண்டும் என்று நினைத்து அனைவரையும் சீக்கிரம் கீழே செல்ல அவசரப்படுத்திக் கொண்டே இருந்தேன். படியிறங்கும் ஒவ்வொரு வளைவுகளிலும் நின்று படங்கள் எடுத்து பிரதான அரங்கு இருக்கும் இடத்துக்கு சென்றதும்தான் நான் கேட்டேன் 'எத்தனை மணிக்கு நாடகம்' என்று சந்துருவை. அவர் என்ன நாடகம் எனக் கேட்க . நீங்கதானே இங்க நாடகம் நடக்கும்னு சொன்னீங்க என்றேன் . அவர் உரக்கச் சிரித்து 'ஜி நாடகம் நடக்கும்தான் ஆனா இப்போ கிடையாது என்றார் . நம்ம டிக்கெட் எடுத்துதானே வந்தோம் என்றேன் . ஆமா ஆனா அந்த டிக்கெட் இந்த இடத்தை பார்க்க மட்டும்தான் என்று சொல்லிவிட்டு புகைப்படங்கள் எடுக்க சென்றுவிட்டார். என்னத்த சொல்ல நான் அந்தநேரம் கொண்ட கவலையே கடல்மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது.
இந்த அரங்கம் Rowena Cade என்கிற பெண்மணியால் நிறுவப்பட்ட ஒன்று. இதன் உருவாக்கத்தில் முக்கியபங்கும் இவரை மட்டுமே சாரும். அதாவது பொருளுதவி இடவுதவி மட்டுமல்ல இதன் கட்டுமானமே இவரின் பெரும்பாலான நேரத்தையும் உழைப்பையும் உண்டே மேலெழுந்துள்ளது. இவர் இந்த CornWall நகருக்கு முதல் உலகப்போருக்கு பின் இடம்பெயருகிறார். 1920களின் இறுதியில் கடலை ஒட்டிய இவரின் இடத்தில் இவரது நாடகக்குழு நண்பர்கள் நாடகம் போட துவங்குகின்றனர். 1932 ல் இங்கு அரங்கேறியுள்ளது ஷேஸ்பியரின் The Tempest. தொடர்ந்து 1983 ல் இறக்கும்வரை தனது உழைப்பையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார் Rowena Cade. இப்போது இந்த இடம் Charitable Incorporated Organisation என்ற அமைப்பிடம் . சுற்றுலாத்தளமாக .
2022 ல் 1932 ல் நடந்த The Tempest நாடகத்தின் 90ம் ஆண்டை குறிக்கும்விதமாக 2022ல் நடந்த கொண்டாட்டத்தில் அந்நாடகம் மீண்டும் அரங்கேறியுள்ளது என அறிந்தோம். இங்குள்ள இருக்கைகள் அனைத்தும் சொரசொரப்பான கற்களால் ஆனவை . அந்த இருக்கைகளில் அரங்கில் நடந்த நாடகங்களின் பெயரும் ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளது .
நிறுவனரைப்பற்றி அரங்க உருவாக்கம் பற்றி பார்வையாளர்கள் அறிந்துகொள்ளும்விதமாக ஒரு பகுதியை ஒதுக்கி அங்கு அரிய புகைப்படங்கள் , காணொளிகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணால் உருவாக்கப்பட்டு கடல்தொட்டு நிற்கும் இந்த இடத்தை காலத்தின் உப்புக்காற்றில் கரையவிடாமல் காத்துவருகின்றனர் .
அடுத்ததாக நாங்கள் சென்றது Miniack Theatre ல் இருந்து 10 நிமிடங்கள் கொண்ட பயணத்தில் உள்ள Lands End Beach. முதலில் நிகழ்த்திய இரண்டுமணி நேரப் பயணம் மற்றும் இந்த குறுகிய பயணம் இரண்டுமே கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்தன. இருபுறமும் விரிந்த புல்வெளிகள், தொடர்ந்துவரும் கடற்கரை, மலைகள் , கார் ஓடுகிறதா மிதக்கிறதா என்று தெரியாத சாலைகள், பச்சையை மட்டும் நமக்களித்து மற்றதை உள்தள்ளி நிற்கும் மரங்கள் என பல . அதோடு சில இடங்களில் மிகவும் குறுகிய வளைவுகள் கொண்ட சாலைகள். ஒரு இடத்தில்கூட மீறப்படவேயில்லை. மீனம்பாக்கம் இறங்கியதும் நம்தோளை எடுத்துப்போர்த்திக்கொண்டு வரிசைகளில் நெருக்கியடித்து ஓடும் நம்மால் கூட எந்த சாலை விதிகளும்! நிமலன் மட்டும் சில முறை சாலையின் வளைவுகள் கொடுத்த இன்ப அதிர்ச்சியால் வாயுமிழ நேர்ந்தது. இந்த முறை சௌமியா அல்ல. ஆனால் அவளின் உரிமையாளர் இருக்கையில் அமர்ந்துகொண்டு எக்கணமும் நேரலாம் என்ற பதட்டத்தில் என்னை வைத்திருந்தாள் .
Lands End , இங்கிலாந்தில் இந்த இடத்தில் நிலம் முடிகிறது நீர்விரிகிறது கடலாய். இங்கு ஒப்புநோக்க புகைப்படங்கள் எடுக்கும் ஆர்வமும் வேகமும் அதிகமாக தெரிந்தது மக்களிடம் . ஒருவேளை நிலத்தின் எல்லையில் நிற்கிறீர்கள் என்று உணர்த்தும்விதமாக இந்த கடற்கரையின் பெயரும் அமைந்துவிட்டதால் வரலாற்றுசிறப்புமிக்க இடம் அங்கு நாம் இருக்கிறோம் என்கிற உணர்வு வந்துவிடுகிறது அனைவரிடமும். அதனால் அல்லல்படுகிறது கைப்பேசி. யாரும் தனித்து இல்லை என்ற உணர்வே எழுகிறது அங்கு. அனைவரும் கூட்டம் கூட்டமாக . அளவளாவி மகிழ்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் தன்னை அவர்கள் சிலநிமிடங்கள்கூட கண்கூர்ந்து நோக்காவிடினும் அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் அவர்களின் பின்புறத்தை பார்த்துக்கொண்டு புன்முறுவலுடன் அமர்ந்திருக்கிறது கடல் மட்டும் தனியாக!
அங்கு அமர்ந்து எங்கள் மதியவுணவை முடித்தோம். அடுத்து 30 நிமிட பயணத்தில் காடும் நீரும் கலந்த பாதை ஒன்றில் சென்றது St Michael's Mount. இது கடலை ஒட்டி அமைத்துள்ள கோட்டை. இதற்கு செல்லும் கற்களால் ஆன நடைபாதை மாலை நேரத்தில் கடல்நீரால் மூடப்பட்டுவிடும் என்பதால் அதற்கு முன்பு சென்றுவிடவேண்டும் என்று அவசரமாக சென்றால் கார் நிறுத்த இடம் கிடைக்க தாமதம். சௌமியா , யாகவியை இறக்கிவிட்டுவிட்டு நிமலனுடன் நான் இடம் தேடி சந்துரு உதவியுடன் காரை நிறுத்திவிட்டு திரும்பிப்பார்த்தால் நிமலன் தூக்கத்தில். எனக்கும் சற்று அசதியாக இருந்ததால் காரில் சற்றுஓய்வு எடுத்தேன்.அப்படியும் சொல்லிக்கொள்ளலாம். ஒய்வு என்று என்னதான் நினைத்தாலும் இப்போதெல்லாம் வாசிக்கவேண்டியவைகள் கண்முன்வந்துவிடுகின்றன. ஒரு மனம் சற்று நேரம் கிடைத்துள்ளது என்று மகிழ்கிறது. இன்னொரு மனம் நாம் மட்டும் அந்த கோட்டை பாதையில் சென்று கால் நனைக்கவில்லையே என்று வருந்துகிறது(கோட்டைக்கு உள்ளே செல்லவில்லை. அந்த கற்தரையில் நீர்வந்து கணுக்காலுடன் விளையாடுவதை பார்த்துக்கொண்டே சென்று திரும்புவதே இலக்கு) . கீழ்மை உச்சத்தில் இருக்கும் இரட்டை நிலைதான் அது. முன்பிற்கு எவ்வளவோ பரவாயில்லை என்ற அகவுணர்வும் வருகிறது.
நிமலன் எழுந்ததும் திரும்பிவந்து கொண்டிருந்த யாசரிடம் நிமலனை ஒப்படைத்துவிட்டு ஒருநடை சென்று வந்துவிட்டேன். அதுவும் குறையாக இருந்துவிடக்கூடாது அல்லவா. அது பின்பு என்னையே எரிக்கும் தீயாய் எழுந்து அருகிருப்போரையும் சற்று தீண்டவும் செய்யலாம் தீங்காக. இந்த இடத்தில் யாசரைப் பற்றி சில வார்த்தைகள் . பெற்றோரே சில நேரம் குழந்தைகள் பராமரிப்பில் பயணம் வரும் இடங்களில் சற்று சோர்ந்துபோனாலும் பிறர் குழந்தைகளை எந்த முகச்சோர்வுமின்றி மலர்ச்சியுடன் அந்த பொறுப்பை எடுத்துக்கொள்வார். அவரின் மனைவியும் அவ்வாறே . கடந்த மூன்று இரவுகளில் அவரின் முழுவாழ்க்கையையும் கதையாய் சொல்லிதான் எங்கள் குழந்தைகளை தூங்கவைத்தார் ரைஹானா.அந்த விஷயங்களில் அவர்களிடம் பாடம் படிக்கவேண்டும் என்று நான் எனக்கே சொல்லிக்கொள்வதுண்டு.
மாலை சுமார் 730 க்கு அறைக்குத் திரும்பினோம். வானம் முகில்கூட்டங்களால் நிறைந்து சூரிய அஸ்தமனம் தெரியாதோ என்று நினைக்குமாறு இருந்தது. இருந்தாலும் அந்த நேரத்தில் அதை நோக்கி காத்திருந்துவிட்டாவது வருவோம் என்று சந்துரு , யாசருடன் சென்றேன். அந்த தருணத்திலும் நம்மை பொய்க்காமல் வேறொருவகையில் ஜாலம் காட்டியே சென்றுமறைந்தான் வெய்யோன்.
இரவு உணவாய் பாஸ்தாவுடன் நாள் முடிந்தது. கடந்த மூன்று நாட்களில் இன்று சுமார் 5 மணி நேரத்திற்கு குறையாமல் கார் பயணம் இனியதொரு அலுப்பை உடலுக்கு அளித்து தூங்க செய்தது.
மறுநாள் திங்கள் காலை சற்று நேரம் கூடுதலாக தூங்கலாம் Coventry வரை கார் ஓட்ட வேண்டும் என்று நினைத்து இன்று வேறு எந்த காலைப்பணிகளும் வேண்டாமென எண்ணியிருந்தேன். அதாவது யோகப்பயிற்சிகள் , வாசிப்பு போன்றவை. எவற்றையும் விட முக்கியம் தூக்கம் என்று யோகாசிரியரும் வாழ்வாசிரியரும் வாழ்விணையரும் மறுபடி மறுபடி என்னிடம் சொல்லிக்கொண்டே வருகின்றனர். நானும் எந்த நேரத்தில் தேவையோ அப்போது மட்டும் அதை நினைவூட்டிக்கொள்கிறேன் .
ஆனால் நேரத்துக்கு 30 நிமிடத்துக்கு முன்பே என்னின் நகலாய் முகத்தையும் அகத்தையும் கொண்டுள்ள யாகவி வந்து எழுப்பிவிட்டுவிட்டாள் . சினத்திற்கான காரணத்தைவிட சினம் தீங்கு செய்யும் நமக்கு என்று எங்கோ கேட்டதாகவோ வாசித்ததாகவோ நினைவு. ஆதலால் எதுவும் சொல்லவில்லை. அப்படியே திரும்பிபடுத்தால் அருகே நிமலன் கண்விழித்து என் தலைமேல் அவன் தலைவைத்து படுத்துக்கொண்டான் . நிமலன் தூங்கி எழும் நேரங்களில்நான் நினைத்துக்கொள்வது.. மன்மதன் அம்பு படத்தில் கமல் கவிதை ஒன்று சொல்வார் ' குழந்தை வாயை முகர்ந்ததுபோல கடும்நாற்றம் இல்லாத வாயும் வேண்டும். அது நாற்றம்தான் ஆனால் நாடும் நாற்றம்.
8 மணிக்கே காலை உணவைமுடித்துக் கொண்டு, Butlin Resort க்கு கிளம்பினோம். அங்கு நீச்சல் குளம் , நீர்சறுக்கு விளையாட்டுகள் என்று நாளைக் கழித்து இரவு Coventry வந்து சேர்ந்தோம். Chennai Dosa உணவகத்தில் இரவுணவாய் தோசையுடன் பயணம் நிறைவாய் முடிந்தது.
முதல்முறையாய் ஒரு பயணத்தை ஓரளவுக்கு எழுத முயன்றுள்ளதும் , நான்கு நாட்களில் நாய்க்குணம் எனக்கு வராமல் நான் தப்பித்ததும், தேவைக்கன்றி கைப்பேசி எடுத்து அதில்நான் மூழ்காததும்.. இந்த உயிர்த்தெழும் பயணத்தில் கண்டவைகளோடு பெற்றவைகள் என்றே சொல்லாடத் தோன்றுகிறது.
நிறைவு
Comments
Post a Comment