உயிர்த்தெழ ஒரு பயணம் - நாள் ஒன்று
தமிழ்த் திரைப்படம் ஒன்றில் கதாநாயகன் திருமணச் சடங்குகளை பகடி செய்யும்விதமாக சடங்குகள் அதன்விளைவான புகைமண்டலம் இதெல்லாம் வேண்டாம் அதனால் தனக்கு நேரடியாக அடுத்த கட்டத்துக்கு செல்வதே விருப்பம் என்று சொல்வார். இது ஒருவகையில் பயண ஏற்பாடுகளில் எனக்கு மிகவும் பொருந்தும் . என்னதான் பயணம் செல்வது நன்று, அது நம்மை அன்றாடத்தில் இருந்து வேறொரு தளத்திற்கு இட்டு செல்லும் , புத்துணர்ச்சி கிடைக்கும், இயற்கை அனுபவம் கிட்டும் என்றாலும் இன்னும் நானாக முன்வந்து அல்லது நானே முன்னின்று ஒரு சுற்றுலாவை முன்னெடுத்தது இல்லை. கிராமத்திலேயே அதிகம் புழங்கியவன் அந்த கிராமத்தை ஒட்டிய அவனுக்கு நகரம் என்று புலப்படும் சிற்றூருக்கு முதன்முதலில் செல்லும்போது சாக்கடையை பார்த்து முகம் சுழித்து மூக்கை பொத்துவான், என்னைப் பற்றி இதை நான் எழுதும்போது எனக்கு என்னிடமே அவ்வாறான ஒரு உணர்வே . சரி சுயபுராணம் போதும்.
1. இந்த ஆண்டு யேசுநாதர் உயிர்த்தெழுந்த திங்கட்கிழமையை ஒட்டி வந்த வார இறுதியில் இங்கு இங்கிலாந்தில் கார்ன்வால் என்னும் ஊருக்கு(செல்டிக் கடலுக்கு அருகில் உள்ளது) செல்வதாக நண்பர் சந்திரமௌலி அவர்களின் முயற்சியில் முடிவானது. மொத்தம் மூன்று குடும்பங்கள் . இவ்வாறு மற்ற குடும்பங்களுடன் செல்வதில் உள்ள நன்மை என்னவெனில் குழந்தைகளுக்கு ஒரு சிறு கூட்டத்துடன் விளையாடிக் கொண்டிருக்கும் மனநிலையில் ஓரிரு நாட்கள் செலவிடமுடியும் . ஆக பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு இவ்வாறான ஒரு பயணம் திருவிழா போல. எனது ஆழ்மனதிற்கு என்ன நன்மையென்றால் நானாக எதையும் தேடி கண்டடைந்து முன்பதிவு செய்யத் தேவையில்லை . எல்லாம் ஒழுங்குபோல நடக்கும் . நாம் செலவிற்கான தொகையை கொடுப்பது , அவ்வப்போது தள்ளு தள்ளு என்பதுபோல சிலவற்றை செய்வது , வண்டி ஓட்டுவது , புகைப்படங்களுக்கு முகம் , உடல் காட்டுவது , இவை எல்லாவற்றையும்விட என்னை மனதளவில் சமநிலையில் வைத்துக்கொள்வது இவைகளை செய்துவிட்டாலே சௌமியாவின் அகம்நிறைவடைந்துவிடும்.
குழந்தைகள் ஒருவாரத்திற்கு முன்பிருந்தே கிளம்ப ஆயத்தமாகிவிட்டார்கள் . அதிலும் யாகவி வீட்டைவிட்டு வெளியே செல்கிறோம், விடுதியில் தங்குகிறோம் , வெளி உணவு , இப்படி பல காரணிகளால் தூக்கமின்றி இன்பக் கொண்டாட்டத்தில் திளைக்க ஆரம்பித்துவிட்டாள். 18.4.2025 அன்று காலையில் கிளம்பி ஒன்றரை மணிநேரத்தில் மைக்கேல் வுட்ஸ் சவுத் பௌண்ட் சர்வீசஸ் என்னும் இடத்தில நிறுத்தி காலைஉணவு . பின்பு அங்கிருந்து கிளம்பி Bath நகருக்கு சென்றோம். இந்த நகர் வரலாற்று சிறப்பு மிக்க நகர். ரோம சாம்ராஜ்யம் , ரோம கட்டிட சிற்பக்கலை இன்றும் நமது கண்களுக்கும் இதர புலன்களுக்கும் காட்சிதந்து கொண்டிருக்கின்றன. எங்கு திரும்பிடினும் அதன் அழகை உணரமுடியும். நூற்றாண்டுகள் கடந்து காலத்தில் அழியா காவியமாய் நிற்கும் பெரிய பெரிய அரண்மனைகள் போன்ற கட்டிட முகப்புகளும் சுற்றுச்சுவர்களும் சிற்பங்களை , பலவித பாவனைக்கொண்ட முகங்களை கண்களாய் கொண்டு நம்மை உற்றுநோக்குகின்றன.
Roman Bath என்றே இந்த ஊர் அழைக்கப்படுகிறது. நகரின் மையத்தில் சுற்றிவந்து கொண்டிருந்தபோது ஒரு நீண்ட வரிசை நிற்பதைக் கண்டு என்ன என்று அருகே சென்று பார்த்தோம் . அது அக்கால அரச அரசியர்கள் நீராடிய இடம். இன்றும் ஒரு நீச்சல் குளம் போல அதை பராமரித்துவருகின்றனர் . அதற்கு அனுமதிசீட்டு வாங்கி உள்ளே சென்று பார்ப்பதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் . அப்போதுதான் Bath என்று அந்த ஊருக்கு பெயர் வந்ததற்கு அந்த குளமும் ஓரு காரணமோ என்று எண்ணம் வந்தது. அவ்வளவு செலவு செய்து உள்ளே சென்று பார்க்க நின்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய மக்கள் . ஆனால் இன்று அந்த இடத்தை பார்க்கும் ஒருநவீன மனம் எனது என தன்னை நம்பும் ஒருவர் அடைவது என்ன என்று நினைத்துப்பார்த்தேன் . கிட்டத் தட்ட 1500 , 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாம்ராஜ்யத்தின் அரச குடும்பம் புழங்கிய ஒரு இடத்தில் நிற்கிறோம் என்ற உணர்வு. வரலாற்றில் பின்னோக்கி சென்று சில நிமிடங்கள் வாழ்ந்துவருவது போன்ற மனமயக்கு. பொதுவாக இந்த மாதிரி இடங்களை காணும்போது அதன் அழகை உன்னதத்தை உணர முயற்சிக்கும்போது இன்னொரு அகவிழி என்னுள் விழித்து கொள்கிறது இந்தியனாய் , தமிழனாய். அந்த நேரத்தில் நம்மூரில் நான் இன்னும் காணாமல் இருக்கும் பொக்கிஷங்களை , மற்ற பண்பாடுகளுக்கு அவர்தம் தத்துவங்களுக்கு விழுமியங்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத அளவில் நிற்கத் தகுதி கொண்ட நான் இன்னும் முழுக்க அறியாத நம் இந்திய பண்பாட்டை , ஞானத்தை , தத்துவத்தை ஒருகணம் சென்று தொட்டுவருகிறது அந்த அகவிழி. இந்த நேரத்தில் ஒரு ஆங்கிலேய முதியவர் சமீபத்தில் என்னிடம் சொன்ன ஒரு வரியும் அப்போது ஞாபகம் வந்தது. அவர் தனது இந்திய பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்த போது ' இந்தியாவில் இன்றும் இருப்பது எஞ்சி நிற்பது பொக்கிஷங்கள், நான் ஒரு இந்தியனாய் இளைஞனாய் இருந்தால் என்னளவில் ஏதேனும் செய்ய முயற்சிப்பேன் ' அது ஒரு அறைகூவல் போல அவ்வப்போது எனக்குள் ஒலிக்கும் . பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் இங்கிலாந்தில் சொல்லி நிறுவப் பட்டதால் மட்டுமே அது சுற்றுலா அந்தஸ்தை பெறுகிறது . அப்படி பார்த்தால் நாம் வெற்று பெருமிதங்களை அன்றாடத்தில் களைந்து மெய்யான பெருமிதங்களை உலகுமுன் வைத்தாலே சுற்றுலாவில் உலகத் தலைநகராக எல்லா வாய்ப்பும் நமக்கு உண்டு. ஆனால் அப்படி ஆகவே முடியாதென்பதே நிதர்சனம் .
எங்கள் உயிர்த்தெழும் நாள் பயணத்திற்கு வருவோம் அரச குடும்பம் குளித்த இடத்தை பார்த்துவிட்டு அங்கிருந்த சந்தை ஒன்றிற்குள் சென்றோம் . எங்கும்போல அங்கும் சில புகைப்படங்கள் எடுத்தோம். அருகிலேயே ஒரு பழைய புத்தகக்கடை. டால்ஸ்தாய் நூல் ஒன்று வாங்கினேன். யாகவிக்கு சில நூல்கள் வாங்கி கொடுத்தேன் . அடுத்து அங்கிருந்து 15 நிமிட நடையில் Royal Crescent என்ற இடத்திற்கு சென்றோம் பிறை வடிவில் அமைத்த ஒரு மாளிகை அது. அங்கிருந்த புல்வெளியில் வானைப் பார்த்துக்கொண்டு சில நிமிடங்கள் படுத்திருந்தேன். கண்மூடி பறவை ஒலிகள் காற்றில் மரங்கள் இலைகள் சலசலக்கும் ஓசைகள் கேட்டும் சில நிமிடங்கள். இனியதோர் அனுபவங்களில் ஒன்றது என உணர்ந்துகொண்டே.
அருகே இருந்த கொட்டகை போன்ற இடத்தில் வீட்டில் இருந்து கொண்டுசென்றிருந்த மதியஉணவை உண்டோம். உணவிற்குப்பின் குழந்தைகள் புல்வெளியில் விளையாடிக்கொண்டிருக்க , நாங்கள் உணவருந்தி கொண்டிருந்தோம் . அப்போது யாகவியும் அமிர்த்தாவும் ஒருநாயைக் கண்டு ஓட அதுவும் இவர்களை துரத்த ஆரம்பித்தது . அந்த நேரத்தில் இருவரும் வெவ்வேறு திசைகளில் ஓட ஆரம்பவிக்க நாய் அமிர்தாவை துரத்த தொடங்கியது. அதுவரை முகத்தில் இருந்த கலவரம் யாகவியின் முகத்தில் மாறி சிரித்துக்கொண்டே ஓடினாள். அதற்குள் நாயின் உரிமையாளர் வந்துவிட்டார். அந்த வகை நாய் ஒன்றும் செய்யாது என்றனர் அனைவரும். எனக்கு அது மட்டும் புரியவேயில்லை . அப்படி என்றால் அது கடிக்கவோ அல்லது ஒன்றும் செய்யக்கூடாது என்றோ பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அல்லது படைக்கப்பட்ட ஒன்றா . அப்படியே இருந்தாலும் அதன் மனநிலை எந்நிலையிலும் மாறாதா?
மறுபடியும் கார் பயணம் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு . ஒரு சிறு இளைப்பாறல் Collumpton என்ற வழி ஊரில் Costa காபி கடையில். பின்பு மேலும் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து தங்குமிடத்தை அடைந்தோம் . அது Bude என்ற இடத்தில் அறையில் இருந்து பார்த்தாலே கடல் தெரியும் வகையில் அமைந்த Tommy Jacks Apartments என்கிற அடுக்ககம் . கீழே ஒரு பார் இருந்தது. காலையில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் போல காட்சியளிக்கும் . மாலையில் ஆண்டுவிழா நடக்கும் அன்று நிகழ்வுகள் தொடங்க இருக்கும் பள்ளிக்கூடம் போல வேறொரு கோலத்தில் இருக்கும் அந்த பார். பிறந்து சில வாரங்களே இருக்கும் கைக்குழந்தை முதல் 85 , 90 வயதுக்கு மேல் உள்ளவர்களையும் அங்கே காணமுடிந்தது . அந்த பிறந்து சில வாரங்கள் ஆன குழந்தை தந்தை மடியில் இருக்க தாய் கையில் Guinness பீர். அங்கு குழுமி இருந்த மக்களின் அகத்தை பார்க்க உகந்த இடம் அதுவல்ல . ஆனால் கண்டுணர்ந்த ஒன்று 'அவர்கள் புறத்தில் அவ்வளவு மகிழ்வுடன் இருந்தனர் . புறம் போடும் வேடத்தை அகமும் ஒரு கட்டத்தில் ஏற்கத் தொடங்கிவிடும் என்று வெண்முரசில் படித்த ஞாபகம்.
அந்த பார் நுழைவு வாயிலில் நுழைந்துதான் எங்கள் அறைகளுக்கு செல்ல முடியும் . அவர்களை விலக்கி எங்கள் மூட்டை முடிச்சு , அரிசி , உணவு பைகள் என அனைத்தையும் கொண்டுசென்று சேர்ந்தோம் . நான் சந்துரு , யாசர் மட்டும் கடற்கரை சென்று பார்த்துவரலாம் எனக் கிளம்பினோம் . லேசான மழைத்தூறல் , மேகமூட்டம் இருந்ததால் சூரிய அஸ்தமனம் தெரியவில்லை. இருட்டத் தொடங்கிருந்தது . ஆனால் அலைகளின் ஓசையை அருகிருந்து கேட்டும் கரியதோர் ஒளியை கண்டும் வந்தோம் . இரவுணவாய் உப்புமாவுடன் எங்கள் முதல்நாள் நிறைவுற்றது. இனியத்தூக்கத்தை நோக்கி செல்லும்போது மிக அருகில் என தெரிந்தது இந்த ஒரு நாளில் கண்ட பலவும். மனிதன் படைத்த Bath , இறைவன் படைத்து பேருரு கொண்டு வழி எங்கும் நிறைந்து கார் ஓட்டும் அலுப்பை சிறிதும் உள்ளளிக்காமல் காட்சி தந்த மலைகள் புல்வெளிகள் நீர்நிலைகள். சில மனித முகங்களும். மறுநாள் Tindagel Castle செல்வதாக திட்டம் .
Comments
Post a Comment