சென்றடையவில்லை என்னும் நிறைவின்மை !

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புதான் என்னை சிறிதளவேனும் வாசிக்க வைக்கிறது , முன்நகர்த்துகிறது என்று சொல்ல முடிகிறது . ஆனால் அதன் பக்க விளைவுகளில் ஒன்று . வாசிக்கும் வேகத்தைவிட வாங்கும் வேகம் அதிகமாகி வீட்டில் நிறைந்துவரும் நூல்கள் . ஒரு நேரம் சிறிய குற்றவுணர்வும் பெரும்பாலும் நிறைவுமே கொள்கிறேன் அந்த செயலால்.

திடீர் என எழுந்து சென்று அடுக்கில் இருந்து எடுத்து ஒரே நாளில் சமீபத்தில் வாசித்த நூல் ' சில ஆசிரியர்கள் சில நூல்கள்' . அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுப்புகள் அடங்கிய இந்த நூல் . தமிழ் எழுத்தாளர்களில் தொடங்கி உலக எழுத்தாளர்கள் பலரை மற்றும் தமிழ் நூல்கள் சிலவற்றை அறிமுகம் செய்கிறது.

இந்த புத்தகத்தில் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள் என நான் உணர்வது சில உண்டு . ஒன்று அசோகமித்திரனின் நூல்களில் நான் வசிக்கும் முதல் அபுனைவு நூல் இது . சரி அவரின் புனைவு நூல்கள் நிறைய படித்துவிட்டாயா என்றால் அதுவுமில்லை . மணல் என்ற குறுநாவல் மட்டும் Tamil Literary Talks ல் அறிந்து வாசித்துள்ளேன் முன்பு.

இரண்டு , நாம் ஆத்மார்த்தமாக உணர்ந்து செய்யும் விழையும் எதுவும் நம்மை நாடி வரும் என்பதற்கு சான்றாய் இந்த நூலில் முதல் கட்டுரை நான் என்றும் மானசீகமாய் வணங்கும் க.நா.சு பற்றியது .

மூன்று , தமிழ் இலக்கியத்திலேயே இப்போதுதான் தவழும் அல்லது கருவாய் உருவாகி இருக்கும் என் போன்ற வாசகர்களுக்கு உலக இலக்கிய ஆளுமைகளை ஒரு சிறுகதைக்கு உண்டான ஈர்ப்புடன் அறிமுகம் செய்யும் கட்டுரைகள் . அதிலும் வெறுமனே விதந்தோதாமல் அவரின் பார்வையில் அவர் கண்டவற்றை சொல்லி செல்லும் பாங்கு . ஓரமாக நின்று வேடிக்கைப்பார்க்கும் ரசிகனாய் தன்னை வைத்து அந்த ஆளுமைகளை சொல்ல வந்த விஷயத்தை முன்னே வைத்து செல்கிறது இதிலுள்ள நடை .

பல உலக இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள் காதில் கேட்டதோடு சரி . ஆனால் அவர்களைப் பற்றிய முழு சித்திரத்தையும் இந்த நூல் அளிக்கும் . உதாரணம் மாக்சிம் கார்க்கி , எஸ்ரா பவுண்டு , செகாவ், வில்லியம் பாக்னர் . இவர்களின் பிறப்பு குடும்பப் பின்னணி எழுத்திற்கும் அவர்களுக்குமான உறவு, அவர்களின் சோதனை காலங்கள் , கீழ்மைகள் கூடவே மேன்மைகள் வெளியான தருணங்கள் என தொட்டுத்தொட்டு சென்று அவர்களின் இறப்பையும் நம்மிடம் காண்பிக்கிறது .

எழுத்தாளனின் சொந்த வாழ்க்கை ஒரு வாசகனுக்கு முக்கியம்தான் ஆனால் எழுதும்போது இருக்கும் ஒருவன்னல்ல எழுதி முடித்தபின் இருக்கும் மனிதன் . இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் செகாவ் மற்றும் கொரலங்கொ , மாக்சிம் கார்க்கிக்கு எதிராக நின்ற தருணங்கள் . அவர்களால் தான் வழிகாட்டப்படுகிறார் கார்க்கி குறிப்பாக கொரலங்கொவால் . ஆனால் அவர்களின் இடம் இல்லாமல் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் இவரை கீழேயே வைத்திருக்க விழைகிறார்கள். இங்கு எழுத்தாளர்கள் அல்ல நாங்களும் மனிதர்கள் என்று அவர்கள் நிறுவுகிறார்கள் .

ரஷ்யாவில் , உலகப் போர் நாட்களில் என சோதனைக் கலங்கள் பலவற்றில் எதிர்நடைபோட்டு செல்கிறார்கள் இந்த எழுத்தரசர்கள் .

தமிழ் எழுத்தாளர்களில் ஆத்மாநாம் பற்றிய கட்டுரை ஒரு தந்தை மகனை இழந்த , மூத்தவன் இளையவனை இழந்த நிலையில் நின்று எழுதப்பட்டது போல உள்ளது . இந்தக்கட்டுரைகள் அனைத்தும் 60 களில் இருந்து 80கள் வரையிலான ஆண்டுகளில் எழுதப்பட்டுள்ளது. ஒருவேளை எனது வாசிப்பு வரும் நாட்களில் ஆழமும் அகலமும் கொண்டு வேகம் எடுத்து இதில் அறிமுகம் பெற்ற எழுத்தாளர்களை வாசித்துவிட்டேன் என்றால் அதுவே பெரும்பேறு .

நூலாசிரியர் அவரே சுட்டிக்காட்டும் முரண்கள் சில இந்த ஆளுமைகளிடம் இருந்தாலும் . முரணே இல்லாத ஒன்றுண்டு ' இவர்கள் யாருமே எழுத்தை இம்மியளவும் எந்தத் தருணத்திலும் கீழே விடவில்லை என்பதே அது ' அந்த வகையில் இந்த நூலுக்கு முதல்கட்டுரையாக க.நா. சு அமைந்தது சாலச் சிறந்தது .

நிறைய நூல்கள் மேற்கோள்கள் என விரவிக்கிடக்கும் பொக்கிஷமிது. அதிலும் இவர்களை அவர்களின் எந்த நூலில் இருந்து வாசிக்க தொடங்கவேண்டும் என்பதையும் அசோகமித்திரன் பதிவுசெய்கிறார்.ஆனால் இந்த சிலவரிகளை எழுதும்போது என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விஷயமென்னவென்றால் 'இவ்வளவை சொல்ல எவ்வளவு வாசிக்கவேண்டும் ' என்பதுதான் .

நன்றி. .. நூலை பரிந்துரைத்த , வாசிப்பில் என்றும் என்னை மலைப்பு கொள்ளவைக்கும் ஆதர்சம் கடலூர் சீனுவுக்கு

Comments

Popular posts from this blog

க.நா.சு - இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

வெண்முரசு - இந்திரநீலம் - வாசிப்பனுபவம்