அ.மார்க்ஸ் அவர்களின் நேர்காணல் வாசித்து அதன் அனுபவத்தை எழுத்தாளர் சாம்ராஜ் அவர்களுக்கு எழுதிய கடிதம்

அண்ணன் வணக்கம்.

பேராசிரியர் உயர்திரு அ. மார்க்ஸ் அவர்களின் நேர்காணலை வாசித்தேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. 41 பக்கங்களில் ஆனால் அதில் தொட்டுச்சென்ற விஷயங்களை தொடர்வதென்றால் வாழ்நாள் வேண்டுமெனும் அளவிற்கு பறந்து விரிந்த வெளியின் முன் நிற்கவைத்துவிட்டீர்கள் என்னை. உங்கள் மூலமாக மற்றும் ஆசிரியர் மூலமாக பேராசிரியரின் பெயர் அறிந்தவன், அவர் வாழ்ந்த பாப்பா நாட்டிற்கு அருகில் பிறந்தவன். எங்கிருந்தோம் இவ்வளவுநாள் என்ற குற்ற உணர்வும் இப்போதாவது அறிந்தோமே என்ற நிறைவையும் ஒருங்கே அடைந்தேன்.

இந்த உரையாடலில் நான் அறிந்துகொண்டது மற்றும் வியந்தது பல. மாற்றுக் கருத்துடன் விவாதிக்க நினைப்பது வெகுசிலவே (ஆனால் அதையும் முழுத்திறனுடன் வெளிப்படுத்த நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது என்று உணர்கிறேன். ஆகவே அந்த வெகு சிலவும் அறிதலே).

ஊழின் விளைவா அல்லது என் அகத்தின் விழைவா எனத் தெரியவில்லை . நான் கற்றுவரும் அல்லது அறிய வரும் ஆசிரியர்கள் அனைவர்க்கும் அடிநாதமாக ஒன்றுண்டு . அது நில்லாக்காலங்கள் பலகண்டது , 'உண்மை' எனும் பெயர் கொண்டது . 'உண்மையை நிறுவ உண்மை ஒன்றுதான் வழி. உண்மை அல்லாததால் உண்மையை நிறுவ முடியாது.' இந்த இரு சொற்றொடர்கள் போதும் அதற்கு சாட்சியாக.

இந்த மொத்த உரையாடல்களையும் வாசித்து முடித்தவுடன் எனக்கு ஈர்ப்பாக இன்று உள்ளது அவர் களமாடல்கள் பலகண்டு வந்து கண்டுகொண்ட தளமான 'மைக்ரோ லெவல் மோவ்மென்ட்ஸ்' அல்லது மைக்ரோ பாலிடிக்ஸ் என்னும் நிலை. காந்தியின் வழியல்லவா அது !

ஒரு வாழ்க்கை வாழவே ஓராயிரம் குறை சொல்லும் எனக்கு , பல வாழ்க்கை அனைத்திலும் முழுமைகண்டு நின்றிருக்கும் பேராசியரை நான் வணங்குவது எழுத்தாளர் , மனித உரிமை மற்றும் கள செயல்பாட்டாளர், ஓயா மக்கட்பணியாளர் என்பதால் மட்டுமல்ல . , உண்மையை முன் வைத்து தன்னை மற்றும் தான் சார்ந்த இயக்கங்களை அப்பட்டமாக விசாரத்துக்கு ஆட்படுத்துகிறார் என்பதாலும்தான்.

நான் வாசித்துக்கொண்டிருந்தபோது நின்று என்னை விசாரணைக்கு உள்ளாக்கிய இடங்கள் கீழ்கண்ட வரிகளில் பொதிந்துள்ளன . ஆனால் கீழ்கண்ட வரிகளில் மட்டும் என்று கொள்ளவேண்டாம்.

"பெருங் கற்பிதங்களோடு ரொம்பவும் romantic ஆக தலித்தியம் பேசிய நாங்கள் உட்பட எல்லோரும் ஒன்றை மறந்தோம்.. சமூக வாழ்வு எனும்போது எல்லோருமே மற்றவர்களின் பகுதியாகத்தான் உள்ளோம். மற்றமையுடன் இணையும்போதுதான் முழுமை அடைகிறோம். ஆனால் அடையாள அரசியல் தெரிந்தோ தெரியாமலோ இந்த அடிப்படை மானுட இயல்பை மறுக்கிறது.

அடையாள அரசியலின் ஆகப் பெரிய பலவீனம் ஒன்றைக் களைய இங்கு தலித் தலைவர்கள் முயலவில்லை. ஒடுக்கப்பட்டவர்களின் தலித் அரசியல் என்பது சாதி தவிர்த்த மற்ற எல்லா அம்சங்களிலும் . ஆதிக்க சக்திகளின் அரசியல் வடிவத்தை அப்படியே கண்ணாடிப் பிரதிபலிப்பாக ஏற்றுக் கொண்டது. ஆகப் பெரிய தலைவன், கட்சி அடையாளத்தின் ஊடான கர்வம், தன்னுடைய சாதிக்கு அடையாளமாக ஏதாவது ஒரு மூதாதை, வரலாற்று ஹீரோக்கள், இப்படியான அடையாளங்களுக்குத்தான் முக்கியம் இருந்ததே ஒழிய இங்கே அடையாள அரசியல் எந்த வகையிலும் தன் தனித்துவத்தை நிறுவவில்லை. யோசித்துப் பார்த்தால் அடையாள அரசியலே இப்படித்தான் அமையும் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். அவனுக்கு ஒரு வரலாறு என்றால் எனக்கொரு போட்டி வரலாறு, அவனுக்கு ஒரு வரலாற்று ஹீரோ என்றால் எனக்கு அதேபோல ஒரு ஹீரோ என்பதிலிருந்து கட்டப் பஞ்சாயத்து வரைக்கும் ஆதிக்க சக்திகளின் வடிவங்களே இங்கு தலித் இயக்கத்திற்கும் முன்மாதிரியாக இருந்தன.

மொத்தத்தில் ஒரு மாற்று அரசியலாக தலித் அரசியல் உருப்பெறவே இல்லை. தனக்கான ஒரு மக்கள் நாயக அரசியலை அது உருவாக்கவே இல்ல.. ஏற்கனவே இருந்த மைய நீரோட்ட அரசியலுக்கு அது தன்னைத் தகவமைத்துக் கொண்டது. ".

ஒருசில நூல்களை வாசித்துவிட்டு உலகை மாற்ற உலகையே பரிதாபக்கண் கொண்டு பார்க்கும் எனக்கு அ மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கை பெரும்பாடம். அவரிடம் சொல்லுங்கள் " நீங்கள் ஒரத்தநாடு வழியாக செல்லும்போது அடிப்படைவாத அரசியல் பேசிக்கொண்டு ஒரத்தநாட்டையே உரிமை கொண்டாடி மற்ற கிராம மக்களை அச்சுறுத்தும் வண்ணம் அநாகரிக வலம் வந்துகொண்டிருந்த முன்னவர்களை தன்னவர்களாய் கொண்ட ஒரத்தநாட்டிற்கு அருகில் இருக்கும் கிராமத்தை சேர்ந்த ஒருவன் உங்கள் வாழ்க்கைவரிகளால் சற்று சமநிலை இழந்துள்ளான் என. அவன் ஊர் வரும்போது உங்கள் பாதம் தொட்டு சென்னியில் சூட விழைவு கொண்டுள்ளான் எனவும் "

மிக்க நன்றி அண்ணன்

அன்புடன் கே.எம்.ஆர்.விக்னேஸ்

Comments

Popular posts from this blog

க.நா.சு - இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

வெண்முரசு - இந்திரநீலம் - வாசிப்பனுபவம்

சென்றடையவில்லை என்னும் நிறைவின்மை !