மூன்று அறிதல் முறைகள்

ஆசிரியர் ஜெயமோகனின் மூன்று அறிதல் முறைகள் ' என்னும் உரையை தனியாக அமர்ந்து முழுக்கக் கேட்டேன்.

மூன்று அறிதல் முறைகள் என கற்பனை - Imagination , தர்க்கம் - Logic , உள்ளுணர்வு - Intuition ஆகியவற்றை குறிப்பிடுகிறார். இந்தியாவிற்கு வெளியே அவர் ஆற்றிய முதல் தத்துவ உரையான இதில் மிகத் தெளிவாக நம்மை அளித்து உள்வாங்கக்கூடிய வகையில் பேசினார்.

கற்பனைக்கு உதாரணமாக கலையும் , தர்க்கத்துக்கு புறவயப்பார்வை (objectivity), பொதுமைப்படுத்துதல் ( generalization) , நிலையானத்தன்மை( certainty ) அதே நேரத்தில் தன்னையே ரத்து செய்து முன்செல்லும் நோக்கு , வடிவம் ( structure ) ஆகியவற்றைக் கொண்ட அறிவியலையும், உள்ளுணர்விற்கு நமது அறிவு, பண்பாட்டு அறிவு , மொழி அறிவு , மானுட அறிவு என அதன் வழிகளை ஊற்றுக்கண் நோக்கி செலுத்தினார்.

'மூளை என்பது ஒரு பொருள் அல்ல , அது ஒரு நிகழ்வு என்றவர் கூறியது எனக்கு ஒரு திறப்பை அளித்தது. ஏனெனில் இதே மூளை மாற்றமடையாமல் இருந்தால் நாம் எப்போதும் ஒரே மனநிலையில் ..குறிப்பாக ஒரே மனநிலையில் அல்லவா நீடிப்போம். அதற்கு உதாரணமாக Phineas Gage என்னும் அமெரிக்கக் கட்டிடத் தொழிலாளியின் விபத்தை மேற்கோள்காட்டி , அதில் Gage மூளையில் பலத்த சேதத்துடன் உயிர்பிழைத்து கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கை வாழ்ந்து மறைந்ததை சொன்னார் .

கற்பனைக்கு உதாரணமாக யானையின் தும்பிக்கையையும் , தர்க்கத்திற்கு அதன் காலையும் கூறினார் . அறிவியலால் மாற்று சக்தி படைக்க முடியாத இரண்டு உறுப்புகள் உண்டு . அது யானையின் தும்பிக்கை மற்றும் மனிதனின் நாக்கு என்றதெல்லாம் நம்மை தொடர்ந்து யோசிக்கவைக்கும் வெளிச்சங்கள்.

தும்பிக்கை கொண்டு யானையால் மரத்தை வேரோடு பிடுங்கவும் முடியும் , பூவை கசங்காமல் எடுக்கவும் முடியும் என்றது முரணியக்கம் கலந்த கவிதை செயல்பாடே.

Generic Intelligence என்பது Bio Intelligence ன் ஓர் அங்கம் , Bio Intelligence என்பது Cosmic Intelligence ன் சிறு துளியே என்றார் . நம்மை அந்த துளியினும் துளி என உணரவைக்க உதவும் சொற்கள் அவை.

நம்மை பிரபஞ்சத்தின் ஒரு துளியாய் உணர்வதுதான் ஞானம் , தியானம் என்று கூறினார் . மூன்று அறிதல் முறைகளும் ஒன்றுடன் ஒன்றிணைந்தே நாம் காணும் கவிதை , அறிவியல் எல்லாம் படைக்கப்படுகின்றன என்றார். இங்கு சற்று நிதானமாக யோசித்தால். ஆம் அது எவ்வளவு சரி என்றே தோன்றியது.

இந்த மூன்று அறிதல்முறைகளையும் நாம் நமது அன்றாட வாழ்வில் , துறையில் , கல்வியில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பல உதாரணங்களுடன் எடுத்துரைத்தார் .

மூன்று அறிதல் முறைகள் இணைவதற்கு உதாரணமாக ..கற்பனையை உருவாக்குவது உள்ளுணர்வே என்றும் ..அதை செயலாக்குவது தர்க்கம் என்றும் கூறினார் . நடுகல்நடும் முறை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்காலத்தில் இருந்ததற்கு அதுவே சாட்சி எனக் கூறினார்.

ஆனால் அதை வரையறுத்து நிறுவமுடியாது என்பதையும் அவர் குறிப்பிடாமலில்லை . Humanity யை நிலத்தடி நீருக்கு உவமையாக சொல்லி மார்க்ஸ் , பிராய்டு, ஐன்ஸ்டீன் ஆகியோரின் செயல்களை சிந்தனைகளை மேலோட்டமாக எடுத்துரைத்தார் . நாம் இவைகளில் எந்த அளவுக்கு ஆழம் நோக்கி செல்கிறோமோ அதுவே நம்மை மேலெழச்செய்யும் என அவருக்கே உரியபாணியில் சுட்டிக்காட்டினார்.

நடராஜ குருவின் 'அறிவு ' என்பதற்கான வழிகளாக அவர் எடுத்து கூறியது புறவய உலகம் (objective world ) , சொந்த அறிவு ( my knowledge ) , பண்பாட்டறிவு (culture knowledge ) , உயிரறிவு (bio knowledge ) , பிரபஞ்ச அறிவு ( Cosmic Knowledge ) அதாவது பிரம்மம் . பிரம்மத்தை தன்னைத் தானே தின்பது , பார்ப்பது என அழகாகக் கூறினார். சூரிய கிரகணத்திற்கு ராகு கேதுவை வைத்து ஓர் விளக்கம் அளித்தார் .

Egypt mythology , Greek Mythology & Hindu mythology இவற்றுக்கான ஒற்றுமையை சொல்லி . இவைகளில் egypt mythology யே பழமைவாய்ந்தது என்றார் . கற்பனை எப்படி உருவாகிறது , அதில் மற்றவர்களின் எண்ணங்கள் எப்படி இணைகிறது, அதன் விளைவாக ஞானம் எப்படி எய்தப்படுகிறது என தெளிவாக விளக்கி உரையை முடித்தார்.

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் வாசித்து வருகிறேன் . தொடர்ந்து இந்து மெய்யியல் மற்றும் வேதாந்தம் சார்ந்த அறிமுக நூல்களை வாசிக்கத் திட்டமிட்டுள்ளேன் . அதற்கு இவ்வுரை எனக்கு பேருதவியாக இருந்தது இருக்கிறது .

- கே.எம்.ஆர்.விக்னேஸ்

Comments

Popular posts from this blog

க.நா.சு - இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

வெண்முரசு - இந்திரநீலம் - வாசிப்பனுபவம்

சென்றடையவில்லை என்னும் நிறைவின்மை !