ஜெயமோகனின் நாளும் பொழுதும்
பேராசான் ஜெயமோகனின் ' நாளும் பொழுது ' நூலை வாசித்தேன் .
அனுபவக் கட்டுரைகள் என்று சொல்லத்தக்கவை. அவர் இயங்கும் மூன்று தளங்களில் கண்டவற்றை பதிவு செய்துள்ளார். நான் , சினிமா , சமூகம் என்ற அந்த மூன்று பிரிவுகளில் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் புனைவுக்கு நெருக்கமாகவும் அதே நேரத்தில் அவை பேசுவன இன்றும் நம் வாழ்க்கையுடன் பொருந்தும் வண்ணமும் திகழ்கின்றன . சில கட்டுரைகள் துவக்கத்தில் பகடியுடனோ அல்லது சாதாரணமாகவோ தென்படுகின்றன ஆனால் அதன் மையத்திலோ அல்லது கட்டுரை நிறைவடையும் இடத்திலோ நம்மை கலைத்துவிடுகின்றன .
சமூகத்தின் கீழ் வரும் கட்டுரைகள் நமது பண்பாட்டை அறிமுகம் செய்கின்றன அவரின் அனுபவத்தின் ஊடாக அல்லது நமது நடவடிக்கைகளை நம்மையே கேள்வி கேட்டுக் கொள்ளும் வண்ணம் நிகழ்ந்துள்ளன . காசி பற்றிய எழுத்துகள் மரணத்தை நமக்கு வேறொரு கோணத்தில் காட்டுகின்றன .
திருமண பந்தி பற்றி ஒரு கட்டுரை , இதை ஒரு printout எடுத்து ஒவ்வொரு திருமண மண்டபத்திலும் கொடுத்து அமுல் படுத்த செய்தால் அது ஒரு ஆகச் சிறந்த செயல்பாடாய் மாறும் .
சினிமா மோகத்தில் நாம் எப்படி வரலாறை தொலைக்கிறோம் என்பதை குஷ்பூ குளித்த குளம் என்ற கட்டுரையில் முழுக்க பகடியுடன் சொல்லியுள்ளார் . சிரித்துக்கொண்டே வாசித்தேன். ஆனால் ஆழ்ந்த கனம் ஒன்று வந்து மனதில் அழுத்தியது. ஜெயஸ்ரீ யின் வீடு என்ற கட்டுரையில் ஒரு வீடு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு லாரி பேக்கர் , காந்தி என தொட்டு சென்று விளக்கியது அது தொடராததற்கு எது அல்லது யார் காரணம் என தகுந்த பின்னணியுடன் எழுதியுள்ளார்.
ஒரு இலக்கியவாதி தனது சினிமா அனுபவத்தில் எதை பார்ப்பார் பதிவு செய்வார் என்பதற்கு சாலச் சிறந்த கட்டுரைகள் சினிமாவின் கீழ் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் . பாலா , வசந்த பாலன் படங்களில் அவர் பயணித்த நாட்கள் அதில் அவர் கண்டறிந்தவை என விரவிக் கிடைக்கும் விஷயங்கள் ஏராளம்.
நான் என்ற வகைமைக்குள் தனக்கும் நாய்களுக்குமான உறவு , தனது bsnl நாட்கள் அதில் மக்களுடன் உரையாடிய அனுபவங்கள் , அரசு அலுவலங்களில் முன்பு பைல்கள் எப்படி கையாளப்படும் என்று ஒரு கட்டுரை அதில் பைல்களுக்கு பதில் நீங்கள் நமது இன்றைய அன்றாட செயல்பாட்டில் உள்ள எதையும் பொருத்தி பார்க்கலாம் (உதாரணம் . ஒவ்வொரு கணத்தையும் புகைப்படமாய் எடுத்து சேமித்துக் கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறை ). மனைவி வேலைக்கு போக தனது வீட்டில் தனியாக இருக்கும் ஆண் சந்திக்கும் சங்கடங்களை பகடியுடன் அதே நேரத்தில் அகஆழத்துடன் பார்க்க ஒரு கட்டுரை 'ஆண்மகன்' என . தன்னறம் , சாப்பிடு பாப்பா போன்ற கட்டுரைகள் வேறு தொகுப்புகளிலும் இருக்கின்றன என்றாலும் இதில் மறுபடியும் வாசிக்க வேறு சில புதிய அறிதல்களை நம்மில் நிகழ்த்தும் நிச்சயமாக .
ஆசிரியருக்கு மிக்க நன்றி.
அன்புடன்
கே.எம்.ஆர். விக்னேஸ்
Comments
Post a Comment