வெண்முரசு நாவல் 'வெண்முகில் நகரம்' - வாசிப்பனுபவம்
இந்த ஆண்டின் முதல் வெண்முரசு நாவல் 'வெண்முகில் நகரம்' . முதல் வாசிப்பு இன்றுடன் நிறைவு.
தொடுதிரை விடுத்து நூலாய் கையில் எடுத்து வாசித்ததும் இதுவே முதல் வெண்முரசு நாவல்.
கதைச்சுருக்கமும் , தரிசனமாய் அடைந்தவைகளும் என தொகுக்க ஓர் சிறிய முயற்சி :
மணத்தன்னேற்பில் திரௌபதியை வென்று பாஞ்சாலத்தில் வாழ்கிறார்கள் பாண்டவர்கள். அவளுக்கானவன் வென்ற பார்த்தனா , மூத்தோன் தருமனா என்று வாதங்களில் தொடங்கி மூத்தோர் சொல்லை துணை கொண்டு அரசாண்மைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஐவருக்குமானவள் அவள் என்பது முடிவாகிறது.
முறை வைத்து நடக்கிறது அவர்கள் ஒவ்வொருக்குமான முதற் தனிக்கூடல் திரௌபதியுடன். ஆழ்கடல் பாவையில் தருமனும், பிடியின் காலடிகளில் பீமனும், தழல் நடனத்தில் அர்ஜுனனும் , ஆடிச் சூரியனென நகுலனும் அவ்வாடியின் அனலில் சகதேவனும் இணைகிறார்கள் அவளுடன். ஒவ்வொருவருடனும் அவரவர் திறன் அறிந்து அளிக்கிறாள் அன்னை தன்னை ! தனிப்பட்ட காதல் செய்தல்களுடன் அரசு செய்தலுக்கான அடித்தளமும் சேர்ந்தே நடக்கிறது.
காம்பில்யத்தில் நடந்த மணத்தன்னேற்பு நிகழ்வுகள் மற்றும் தங்கள் எதிர்காலம் பற்றிய கனவுகள் சஞ்சலங்கள் மனதிலோட தங்கள் மண் நோக்கி திரும்புகிறார்கள் மத்ர , சௌவீர , பால்ஹிக அரசர்கள். அவர்களின் இளையோர்களில் தனித்த திறன் உள்ளவனும் பூர்வ பால்ஹிக நாட்டின் இளவரசனுமான பூரிசிரவஸ் பால்ஹிக கூட்டமைப்பின் பகடையாய் உருட்டிவிடப்படுகிறான். விளைவாய் தொடங்குகிறது குல மூதாதை பால்ஹிகரைத் தேடி சிபி நாட்டுப் பயணம். அந்த நீண்ட நெடிய பயணங்களின் கூடுதல் பயனாய் தேவிகையின் பிரேமையின் காதல்கள். மத்ர இளவரசி விஜயையும் அவன் மனதில் ஏற்றப்படுகிறாள் அரசமுறை தேவைக்காய்.
அரசு சூழ்தல் அல்லது தமது நாடுகளை யாரும் சூழாதிருக்கும் வண்ணம் வேவுப் பார்க்கும் வகையில், மணத்தன்னேற்பு தோல்வியில் இருந்து நாடு செல்லாமல் தசசக்கரத்தில் இருக்கும் கௌரவர்களிடம் தூதாய் செல்கிறான் பூரிசிரவஸ். அங்கு துரியோதனன் அன்பில் தன்னை நண்பனாய் அவனுக்கு முழுத்தளித்து என்றும் அவனுடன் நிற்க வாக்களிக்கிறான். அதன் விளைவாய் அங்க அரசன் கர்ணனின் நட்பு, துச்சளையின் சொல்லப்படாத காதல், 'சிற்றரசின் இளவரசன்தான் நீ' என்னும் எள்ளல், துரியனின் அளவுகடந்த நட்பு என பல அவன் அங்கு அடைந்தது. அடைந்தது சில இழந்தது பல என்னும் கூற்றுக்கு இணையாய். எடுப்பார் அனைவருக்கும் கைப்பிள்ளை கால்பிள்ளை என எல்லாமும் ஆகி காற்றின் விசைக்கு அலைக்கழிக்கப்படும் சருகாய் பூரிசிரவஸ். அவனின் மூத்தவன் சலனால் எய்தப்படுகிறான் அம்பாய் எங்கும். ஆனால் அந்த அம்பு அன்பையே எங்கும் ஏந்தி செல்கிறது. சல்லியர் அவையில் அரசு சூழ்தலுக்கும் காதலுக்குமான போராட்டத்தில்
முன்னதையே தேர்ந்தெடுத்து பின்னாளில் அதன் பயனை எதிர்கொள்கிறான் பாண்டவ அரசிகளில் ஒருத்தியாய் வந்து நிற்கும் விஜயையிடம்.
யாதவ குல இளைஞர்களின் பெருங்கனவு இளைய யாதவனின் அடிசேர்ந்து அவனிடம் பணிதலே. அப்படியாய் கிளம்பி பெருவாயில்புரமாம் துவாரகை சென்று தொழும்பர் குறி ஏற்று கிருஷ்ணனின் அடிமையாய் தன்னைக் கொடுத்து அவனிடம் சேர்கிறான் சாத்யகி. இளைய யாதவனின் பெருங்கருணையில் அவனுக்கு நிழலாய் மாறி துவாரகை இளவரசன் என்னும் நிலைக்கு சென்று சேர்கிறான்.
கிருஷ்ணன் காம்பில்யம் வந்து யாதவ அரசி பாஞ்சால இளவரசி , பாண்டவர்கள் என அனைவரையும் சந்தித்து முதற் தூது கொண்டு அஸ்தினபுரி செல்கிறான். நாட்டைபங்கிடும் வழிகாட்டுதல்கள் கொண்ட குந்தியும் திரௌபதியும் கொடுத்த இரு வேறு வரைபடங்களுடன். அவன் செல்லுமிடமெல்லாம் புறத்தில் மட்டுமில்லாமல் அகத்திலும் துணைவனாய் அவன் குறிப்பறிந்து உடன் செல்வது சாத்யகி. சேவகனாய் அல்ல நகர்வலம் செல்லும்போதும் இளைய யாதவனுக்கு நிகராய் தேர்த்தட்டில் நின்று.
அஸ்தினபுரியில் கிருஷ்ணன் ஆடியது சகுனியுடனான பகடையாட்டம் மட்டுமல்ல. திருதராஷ்டிரர் , காந்தாரி , அவளின் இளையோர்கள் , அரண்மனைச் சேடிகள் , காவலர்கள், வணிகர்கள் என அனைவரிடமும் தான். ஹஸ்தவனம் சென்று தன்னுள் தான் அடங்கி வீற்றிருந்த பீஷ்மரும் அவனின் ஆடலில் தப்பவில்லை. 'என் கடன் சொல்வது. அது ஆனது' என்று சொல்லி அவரிடம் அவன் ஆடியது 'அம்பை'யாட்டம்.
பகடையாய் எண்களில் ஒன்றான பூரிசிரவஸ் பால்ஹிகபுரி திரும்ப, மறுபடியும் உருட்டப்படுகிறான் தேவிகையின் ஓலையால் சிபி நாட்டிற்கு , சலனின் ஆணையால் மத்ர நாட்டிற்கு , துரியோதனனின் அழைப்பால் அஸ்தினபுரிக்கு என்று! 'அவன் நினைத்திருக்க அவனை அவளும் நினைத்திருக்க' என்றிருந்த தேவிகையை பீமன் கவர்ந்து செல்ல , அரசியல் ஆட்டத்தில் தான் இரண்டாய் வைத்த விஜயை பாண்டவ இளையனுக்கு மனைவியாய் வர, துச்சளையும் ஜயத்ரதனுக்கு என்றாகிறது.
'அவரிடம் எழுந்தது அறத்தின் தெய்வம்' என்கிறான் தந்தையின் வெறியாட்டில் கர்ணன் துச்சாதனன் புடைசூழ சென்று தந்தை முன் வீழ்ந்துபட்ட கௌரவ மூத்தவன் மனைவி பானுமதியிடம்.
கிருஷ்ணனின் செய்தி கொண்டு காம்பில்யம் செல்கிறான் சாத்யகி எனும் மதியூகி. அவன் அந்த நகரில் உள்நுழையும்போது காவலர்களிடம் சொல்வதோ பாண்டவர்களை, யாதவ அரசியை சந்திக்க துவாரகையில் இருந்து வந்திருப்பதாக. ஆனால் திரௌபதியை சந்திக்கும்போது சொல்வதோ அவளைத்தான் அவன் பிரதானமாக சந்திக்கவந்திருப்பதாக, பாண்டவர்களை சந்திக்க செல்வது முறைமைக்காகவே என்று!
சாத்யகி சொல்கண்டு குந்தி அஸ்தினபுரி நுழைகிறாள் பலவருடங்கள் கழித்து. அவளின் நகர் நுழைவு சாதாரண நிகழ்வே . ஆனால் அது உண்டாக்கும் அரசியல் சலசலப்பு அதிகம். அங்கும் ஆடுவது இளைய யாதவனே! தம்மை மேல்வைத்து குந்தியை கிருஷ்ணனை கீழ்வைக்க முனையும் கௌரவ அணியை அதைக்கொண்டே அதற்கும் மேல் எழுந்து நிற்கிறது அவனின் செயற்கரிய செய்கைகள்.
புதல்வர்களை புறந்தள்ளி நண்பர் விப்ரருடன் கானுறைய சென்ற அரசர் திருதராஷ்டிரரும் நகர் திரும்புவது அவனின் ஆடலிலனாலே. அவரை வைத்தே கர்ணனும் துரியோதனனும் வாளேந்தி அவளின் இருபுறமும் வர, நகர் காணா பெருநிகழ்வாய் மாறுகிறது வெண்முகில் நகர் கனவு கொண்ட பாஞ்சால இளவரசி திரௌபதியின் நகர் நுழைவு.
முறையே அம்பாய் சருகாய் நாம் உணரும் சாத்யகியும் பூரிசிரவஸும் சுதுத்ரியின் கரையில் சந்தித்து சாத்யகி அஸ்தினபுரி செல்ல, பூரிசிரவஸ் அங்கிருந்து விடைபெற நிறைவுறுகிறது நாவல் 'இத்தருணம் வாழ்க' என்ற வாழ்த்துடன்.
வாசகன் அடைந்த தரிசனங்கள் :
* பாராதவர்ஷமே அதிகார வெறியின் ருசிகண்டு அதன் பயணத்தில் இருக்க அதன் எந்த அடிச்சுவடும் தெரியாத வேறு ஒரு உலகில் இருக்கும் கோவாசனரும் அவரின் சிபி நாட்டு சைப்யபுரி நகரும்
* போர் குறித்து அதன் வணிகத் தேவைகள் குறித்து பூரிசிரவஸும் சுதாமரும் உரையாடும் தருணம்
* காம்பில்யம் நோக்கிய போர் ஆயத்த பேச்சில் கணிகர் துரியோதனனை கர்ணனை அவர்களின் நோக்கத்தை மிகச்சரியாக மதிப்பிடுவது. அதற்கு உவமையாய் சர்ப்பதம்சம் என்ற மிகச்சிறிய முள்ளை சொல்வது .
* தன்னிரக்கம், தன்னை தான் வெறுத்தல் என சில நேரங்களில் குறுகி நிற்கும் கர்ணன் அர்ஜுனனின் வெற்றிக்கு காரணமாய சொல்லும் வரிகள் ' தன் செயற்களத்தில் வந்து நிற்கையில் மட்டுமே ஆளுமை முழுமை கொள்ளும் சிலர் உண்டு இவ்வுலகில். அவர்களே கர்ம யோகிகள் , அவன் அத்தகையோரில் ஒருவன்! சினமற்றவன் விருப்பற்றவன் இளமைக்குரிய தூய விழைவே உருவானானவன்!'
* பூரிசிரவஸ் சென்றடைவது கௌரவர்களிடம் ஆனால் அங்கு என்னதான் நண்பன் மலைகளின் இளவரசன் என சொல்லுரு கொண்டு போற்றப்பட்டாலும் , பல நேரங்களில் அவனின் இருப்பு அவன் நாட்டின் நிலவளம் ,விஸ்தீரணம், செல்வம் ஆகியவை கொண்டு கீழ்வைத்தே மதிக்கப்படுகிறது. 'நான் ஜாதியே பார்ப்பதில்லை . என் வீட்டிற்குள் அனைத்து சாதியும் வருவர்' என்று சொல்லிக்கொண்டு இருக்கும் ஒரு ஜாதி வெறியர் இந்த இடத்தில் நினைவில் வரலாம். தொழும்பர் குறி கொண்டவர்கள் கடல் உலா செல்ல இளவரசராய் மாற என இளையயாதவனுக்கு நெருக்கமாகிறார்கள் துவாரகையில். அடிப்படைவாதத்திற்கு முன்னதும் அடுத்தகட்ட உலகு சமைப்பதற்கு பின்னதும் உதாரணம்
* சமையர்கள் மிருஷை கிருபை கலுஷை போன்றவர்கள் இளவரசர்களுக்கு ஒப்பனை செய்யும் நேரத்தில் நடத்தும் உரையாடல்கள் அனைத்தும் எத்துணை முறை வாசித்தும் தீரா பொருள் கொள்ளும் வரிகள்('அப்படியே நடந்து வெளியேறிவிடுங்கள் இளவரசே . நெடுந்தூரம் செல்ல முடியும் ' ~ துரியோதனனிடம் சொல்வது )
* சகுனியும் கிருஷ்ணனும் ஆடும் ஆட்டத்தில் சகுனியின் எண்ண ஓட்டங்கள். அதுவரை கிருஷ்ணனின் ஆட்டத்தில் மதிமயங்கி இருந்த மனது சகுனியின் இந்த வரியில் அவராய் தன்னை உணர்ந்தது 'சிறிய உத்தி வழியாக என்னை வென்றுவிடலாமென எண்ணுகிறான் என்றால் என்னை என்னவென்று எண்ணினான் . என் பொறுமையை இழந்து நான் இவன் முன் சிதறுவேன் என திட்டமிடுகிறான் ' . இந்த வரிகள் தான் இந்த நாட்களில் எனது பற்று கோல். வேலையில், குடும்ப பொறுப்புகளில், வாசிப்பில் என எனது அன்றாட செயல்களில் ஊசி முனையில் யானையை கோர்க்க பிரயத்தனப்படுகையில் இந்த வரிகளே எனக்கு துணை . அத்தருணங்களில் சகுனியும் நானே கிருஷ்ணனும் நானே !
* பொதுமக்கள் சராசரி பணியாளர்கள் பற்றிய அவதானிப்புகள் ' போரை மக்கள் ஏன் விரும்புகின்றனர் ? வரலாற்றில் தங்கள் கண்முன் எதாவது நடக்கும் என நினைக்கிறார்கள் '
'பதறிக்கொண்டே இருக்கும் நடிப்புக்கு அடியில் எதையும் ஒரு பொருட்டெனவே எண்ணாத அரண்மனைப் பணியாளர்கள் ' .. இந்த வரிகள் நேரடியான வரிகள் ஆனால் நாமும் அந்த வேடத்தை பொருள் கொடுக்கும் வேலையில் சில வேளைகளில் போடுகிறோம் என்ற நினைப்பு வந்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
* பூரிசிரவஸ் அரண்மனையில் குறை தேடி சுவரில் கறை கண்டடைந்த தருணம். அதன் காரணமானவனையும் கிருஷ்ணனின் சவுக்கை வாங்கும் நேரத்தில் கண்டுகொள்வது
* இளைய யாதவன் ஒரு இடத்துக்கு செல்லும்முன் அங்குள்ள அனைத்தையும் பற்றி அறிந்து செல்வது அங்குள்ள மனிதர்கள் பெயர்கள் உட்பட . அது இந்த நுனிப்புல் யுகத்தில் மாபெரும் படிப்பினை எனக்கு.
மேற்சொன்ன வரிகள் போக கையேட்டில் ஏறிய வரிகள் ஏராளம் . அதில் சில
குந்தி பானுமதிக்கு சொல்லியனுப்பியது ' பெருஞ்சுழல்பெருக்கில் எதற்கும் பொருளில்லை'
இளைய யாதவன் சாத்யகியிடம் 'அள்ள அள்ளக்குறையாத பெருஞ்செல்வத்தின் நடுவே விடப்பட்டவர்கள் நாம்'
பானுமதி 'மிக மிக எளிய உயிர்கள் ஆணும் பெண்ணும் . மிகமிக பழகிப்போன நாடகம் அதைமட்டும் உணர்ந்து கொண்டால் சினமும் வஞ்சமும் நெஞ்சில் எஞ்சியிருக்காது. இனிமை மட்டும்தான் . அதைத்தான் இன்று கண்ணனின் இசையில் கேட்டுக்கொண்டிருந்தேன்'
'பொருளிலாத பெருக்கில் இருப்பென்ன இறப்பென்ன இயல்வதுதான் என்ன ? இங்கே நின்றிருப்பது ஏதுமில்லையென்றால் அன்றிருந்ததும் இன்றுள்ளதும் வந்துருவதும் என்ன ?' கண்ணனின் இசைகேட்டு பூரிசிரவஸ் நின்ற கணம்.
------------------------------
வெண்முரசு நாவல்கள் வாசிக்கத் தொடங்கிய இந்த ஓராண்டில் நான் உணர்ந்தது 'அளவில் பெரிய நாவல்களைக்கண்டு இப்போது மலைப்பெதுவும் ஏற்படுவதில்லை' . முன்னிலும் அதிகமாக மற்றநூல்களை அதிகம் வாசிக்கிறேன். அந்த வகையில் வாசிப்பில் வேகத்திற்கும் உள்வாங்கும் திறனுக்கும் இந்த பயணம் பெரிதும் துணை செய்கிறது.
நான் செய்யும் இன்னொரு குழந்தைத்தனமான உத்தியும் உண்டு. அது இணைப்பில் படத்தில் உள்ள Book mark ஐ இணை வாசிப்புக்கு நான் எடுக்கும் மற்ற நூலில் வைத்துக்கொள்வது . வெண்முரசும் என் ஆசிரியரும் உடன் வந்து கவனித்துக்கொண்டிருப்பதாய் ஒரு உணர்வை அது ஏற்படுத்துகிறது 🙂
இந்த நாவலில் ஒரு வரிவரும் 'துவாரகைக்குமேல் கடலின் துமி எப்போதும் மழையென பெய்து கொண்டிருப்பதனால் அங்கே வெயில் வெம்மை படிவதேயில்லை ' . அதுபோல அன்றாடத்தின் வெம்மை படியாமல் தனது வரிகளால் எம்மைக் காத்துவரும் பேராசானுக்கு நன்றிகள் கோடி . உடன் வாசிக்கும் வாசிப்பை நேசிப்போம் நண்பர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் .
“சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு – என்குலமே
சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு!”
அன்புடன்
கே.எம்.ஆர்.விக்னேஸ்
Comments
Post a Comment