அப்பா - ஒரு அறிமுகம்
நண்பர்களுக்கு வணக்கம் .
இந்தப் பதிவு எனது அப்பாவைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் அவருடனான எனது சில நினைவலைகளையும்
உங்களுக்கு அளிக்கலாம். (இதில் பெயரில் பின்வரும் பட்டப்பெயர்கள் என் ஊரைச் சார்ந்த சிலர் வாசிக்கக்கூடும் அவர்களுக்கு கூடுதல் தெளிவை ஏற்படுத்தவே அப்படி எழுதியுள்ளேன். துளியளவும் சாதி சார்ந்த வெற்றுப் பெருமை எனக் கொள்ளவேண்டாம் என பணிவுடன் கூறி மன்னிக்க வேண்டுகிறேன்)
வீட்டில் இருக்கும் நேரங்களில் நினைவு தெரிந்த நாள் முதல் பெரும்பாலும் அப்பாவின் அருகமர்ந்து அவரின் சொற்களைக் கேட்டுக்கொண்டும் அவரிடம் பேசிகொண்டுமிருப்பேன். அவ்வாறான உரையாடல்களில் அவரிடமிருந்து வரும் பெயர்களில் பலரை நான் நேரில் பார்த்ததில்லை. நான் பிறக்கும் முன்பே இறந்துவிட்டிருந்தனர் பலர். சிலர் இருந்து கொண்டிருந்தனர், ஏனையோர் ஒவ்வொருவராக இறந்து கொண்டிருந்தனர் . அந்த பெயர்களில் எனது நினைவில் இன்றும் நினைவில் நிற்பவர்கள் தெய்வத்திருவாளர்கள் ,பெரியப்பாக்கள் K.R.சிதம்பரம் , மாமா R.A.துரைசாமி , அதற்கும் முந்தைய தலைமுறையான தாத்தாக்கள் ஆறுமுகம் காலிங்கராயர்(அவரின் சித்தப்பா) , வாசுதேவ காலிங்கராயர் , சிக்கல் சிங்காரவேலர் , பாகவதம் கண்டபிள்ளை , குமாரசாமி கண்டபிள்ளை(மாமா கருணாநிதியின் தந்தை , ராமலிங்கம் கண்டபிள்ளை , சுந்தரம் மூரியர் , விபூதி வீரமுத்து சாமியார் , வடிவேல் மண்கொண்டார், பெரியப்பாக்கள் ராசமாணிக்கம் (மீசை) தொண்டமார், பிச்சைக்கண்ணு காலிங்கராயர் , ஆதிமூலம் காலிங்கராயர், சின்ன மணியக்காரர் , பெரிய மணியக்காரர் , தாத்தாக்கள் நடராச கடம்புரார் , பழனிவேல் கடம்புரார், மாமன் கோவிந்தசாமி கண்டபிள்ளை, மின்னாத்தூர் அய்யா பெரியசாமி பிலியூரார், எங்கள் பிரியமிகு கண்டிக்காரர் அய்யா சின்னையன் என பலர். அவரைவிட இளையவர்களின் பட்டியலும் நீண்டது . அவர்களை இங்கு குறிப்பிடவில்லை.
இவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு வகையில் அப்பாவின் ஆளுமைக்கு வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்திருக்கிறார்கள் . சிலர் எதிரிலும்.
பிறப்பு, இளமை வாழ்க்கை மற்றும் தலைமை பொறுப்புகள்:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கண்ணந்தங்குடி கிராமத்தில் குழந்தை காலிங்கராயர் தெருவில் வசித்துவந்தவர்கள் கண்ணுச்சாமி - செங்கம்மாள் . அவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் மகாலிங்கம் . இளையவர் ஆறுமுகம் .
மூத்தவரான மகாலிங்கம் கண்ணந்தங்குடி மேற்கு தெற்குத் தெருவை சேர்ந்த ஒருவரை மணம் புரிகிறார். அவர்களுக்கு குழந்தை இல்லை. ஆதலால் இறந்த முதல் மனைவியின் பங்காளி வீட்டிலேயே மறுமணம் கொள்கிறார். அவரின் பெயர் தனபாக்கியம் (தெற்குத் தெரு திரு ராமச்சந்திர குருசார் அவர்களின் மூத்த சகோதரி ). மகாலிங்கம் - தனபாக்கியம் தம்பதிக்கு கடைக்குட்டியாக 01.08.1948 அன்று பிறந்தவர்தான் ரெங்கநாதன். அவரின் பெற்றோருக்கு ஐந்து மகன்கள் , ஒரு மகள். அவர்கள் முறையே பாலமைந்தன் , கிருஷ்ணமூர்த்தி , பத்மாவதி, திருப்பதிவாசன் , கோவிந்தராசன் மற்றும் ரெங்கநாதன்.
மகாலிங்கம் பெருமாள் பக்தர் என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பெரியவர் ஒருவர் சொல்லியதை வைத்தும், வைணவ மரபை பின்பற்றியவர் என குழந்தைகளின் பெயர்களை வைத்தும் யூகிக்க முடிகிறது. மகாலிங்கத்தின் பக்தி மற்றும் அவரின் அன்றாடத்தில் குருசானோடை பெருமாள் கோவில் வழிபாடு போன்ற செயல்பாடுகளால் சாமியார் என உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்களால் அழைக்கப்படுகிறார். அவரின் தொழில் விவசாயம் மற்றும் கள்ளுக்கடை.
கடைசி குழந்தையான ரெங்கநாதனுக்கு விவரம் தெரியும் முன்னரே அண்ணன்கள் பாலமைந்தனும் கோவிந்தராசனும் இறந்து போகின்றனர் இறுதியில் தந்தையும் அகால மரணமெய்துகிறார்.தாயார் தனபாக்கியமும் அவ்வப்போது வந்துசெல்லும் நலக்கோளாறுகளால் அவதியுறுகிறார். அந்த நேரத்தில் தன்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு சென்றது, சோறூட்டியது வளர்த்தது என மாரி பெரியாயி , **** பெரியாயி (பெயரை நான் இப்போது மறந்துவிட்டேன்) என சிலரை நினைவு கூர்ந்துள்ளார். மாரி பெரியாயியை ஒரு படம் எடுத்துவைக்கவில்லை என அவர் வருத்தப்பட்ட நாட்கள் பல.
பள்ளிப்படிப்பு 8ம் வகுப்பு வரை ஒரத்தநாடு ஆண்கள் பள்ளியில். கால்பந்து விளையாட்டில் ஆர்வம் இருந்ததாக சொல்லியுள்ளார். குடும்ப சூழ்நிலை , தாயார் நலமின்மை காரணமாக நேரத்திற்கு உணவு என்பது எல்லாம் எட்டாக்கனியாய் இருக்கும்போது பள்ளிப் படிப்பு இரண்டாம் பட்சமாக மாற , படிப்பை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபடுகிறார். அவரின் துடிப்பான செயல்பாடுகள், உடல்வாகு, நாவன்மையின் விளைவாய் அந்த வயதுக்கே உரிய நண்பர்கள் குழாம் அமைகிறது. 'ஆயக்கலைகள் அறுபத்து நான்கையும் அறிந்து கொண்ட நாட்கள் அவை ' என அவருக்கே உரிய தோரணையில் பகடியுடன் சொல்லியுள்ளார்.அந்நாட்களில் 'ரவுடி ரெங்கநாதன்' என்றும் சொல்லாடல் உண்டு என அறிய முடிகிறது . ஒரு கட்டத்தில் ஊரில் இருக்கப் பிடிக்காமல் திருச்சி சென்று திரு.
ஜம்புலிங்கம் அவர்களின் உணவகத்தில் வேலை. அங்கிருந்து அவரை பெரியப்பா K.R.C 'நீ இந்த வேலைக்கானவன் அல்ல' என்று சொல்லி மேலும் கடுமையாக திட்டி ஊர் திரும்ப வைக்கிறார். மீண்டும் நண்பர்கள் , விவசாயம் என செல்கிறது நாட்கள்.
20.7.1969(ஆடி மாதம் , செவ்வாய் கிழமை ) அன்று அவருக்கும் - கண்ணந்தங்குடி திரு தங்கவேல் கடம்புரார் - தனபாக்கியம் தம்பதியின் மகளான எனது தாயார் திருமதி. காந்திமதியை மணம் புரிந்துகொள்கிறார். அதன் பிறகு குடும்பம் ஒரு சீருக்கு வருகிறது. தாயார் நலம் மனைவி வசம் ஒப்படைக்கப்படுகிறது.
எழுபதுகளின் ஆரம்பத்தில்தான் முதல்முறையாக கண்ணந்தங்குடி கிழக்கு கிராமத்திற்கு கூட்டுறவு சங்கம் அமைக்கப்படுகிறது. அதற்கான முதல் தேர்தலும் வருகிறது. அதில் மாமா R.A துரைசாமி அவர்களின் சொல்லிற்கிணங்க போட்டியிட்டு அவரின் வழிகாட்டுதல்களுடன் தனது இருபதுகளின் ஆரம்பத்திலேயே கூட்டுறவு சங்கத் தலைவராகிறார் ரெங்கநாதன்.அதுவரை இருந்த அனைத்தும் மாறுகிறது. ம.ரெங்கநாதன் தலைவர் ரெங்கநாதன் ஆகிறார். தனது ஊர் பெயரையும் தனது பெயருக்கு முன் போடவேண்டும் என்று நினைத்து
K(கண்ணந்தங்குடி).M(மகாலிங்கம்). ரெங்கநாதன் என குறிப்பிட ஆரம்பிக்கிறார். அதற்கு பிறகு இன்று வரை ஊராட்சி மன்றம் , கூட்டுறவு சங்கம் , ஒன்றியக் குழு, கட்சி சார்ந்த அமைப்புகள் என பலவற்றில் பலர் வந்து சென்று கொண்டிருக்கின்றனர் . இருந்தும் தலைவர் என்றால் அவரை மட்டும் குறிக்கும் சொல்லாக நின்றுவிட்டிருக்கிறது. ஆனால் அவர் போனில் பேசும்போது சொல்லும் முதல் சொற்றொடர் ' ஹலோ , வணக்கம் . நான் ரெங்கநாதன் பேசுறேன்' அந்த ஒரு சொற்றொடர் செய்துவிடும் பல பணிகளை என்பதை அறிவார் KMR ஐ அறிந்த அனைவரும் அன்று.
கூட்டுறவு சங்கத் தலைவராய் இருக்கும்போதும் சரி இல்லாத போதும் சரி. ஊரில் பொது நலன் சார்ந்த நிகழ்வுகளில் உயரும் முதல் குரல் அவருடையது.70 களின் இறுதியில் கதிர் அறுத்த பணத்தில் கண்ணை கிழக்கில் விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்த குடிசைகளுக்கு குண்டு பல்புகள் கொண்ட மின்னிணைப்பு பெற செலவு செய்த ஒளி கொண்ட நிகழ்வுகளும் உண்டு. வட்டிக்கு கடன் வாங்கி தேர்தல் நன்கொடை கொடுத்த துர்நிகழ்வும் உண்டு. ஆனால் அனைத்தும் இன்முகத்துடன்.
திராவிட இயக்க மற்றும் கட்சி அரசியல் சார்ந்த செயல்பாடுகள் :
திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். 1967 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி கலைந்து திமுக ஆட்சி துவங்குகிறது. அந்த தேர்தலில் தீவிர களப்பணியாளராக மிதிவண்டியிலேயே ஒரத்தநாடு வட்டத்தில் பல கிராமங்கள் சுற்றி வந்து வாக்கு சேகரித்திருக்கிறார் அன்றைய திமுக வேட்பாளரான திரு.எல்.கணேசனுக்கு.
அவரின் வேகமும் உள்ளடி வேலைகள் அற்ற நேர்நின்று பேசும் துணிவும் சொந்த கிராமத்தில் மட்டுமல்லாமல் ஒரத்தநாடு , தஞ்சை பகுதிகளில் பல நல்ல நண்பர்களை அவருக்கு பெற்றுத் தருகிறது.
கண்ணந்தங்குடி கிழக்கு கிளைக் கழக செயலாளர் , ஒன்றிய பிரதிநிதி போன்ற பதவிகளை வகித்துள்ளதாக ஞாபகம்.வேறு பெரிய பதவிகள் கட்சி சார்ந்து அடைந்தது இல்லை.
திரு.எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் திரு. கருணாநிதி அவர்களின் கைதைக் கண்டித்து இவரின் தலைமையில் நடந்த அதிமுக பெரும்புள்ளியின் நள்ளிரவில் காலி பஸ் எரிப்பு சம்பவம் நடந்தேறுகிறது. அதன் வினைப்பயனை
விளைநிலம் விற்று வழக்கில் இருந்து வருகிறார். அந்த செயல்பாடு பல படிப்பினைகளை கட்சி சார்ந்து , மாவட்டம் போன்ற அடுக்குகள் சார்ந்தும் புரிதல்களை உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
1994 ல் திமுக உடைகிறது . திரு.வைகோ என்று இன்று அறியப்படும் வை.கோபால்சாமி தலைமையில் மதிமுக என்ற கட்சி உருவாகிறது . அப்போது திமுகவின் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் உட்பட பல பிரபல முகங்கள் மதிமுக செல்கிறார்கள். திமுகவின் சார்பில் ஒக்கநாடு கிழக்கு தலைவர் பெரியப்பா திரு KR பவானந்தம் 'ஒன்றிய செயலாளர் நீங்கள் தான் வரும் 1996 சட்ட மன்றத் தேர்தல் வேட்பாளரும் நீங்கள் தான் அது உறுதி நீங்கள் கட்சியை விட்டு செல்லாதீர்கள்' என கேட்டுக்கொள்கிறார். பதவி எனக்கு தேவை அல்ல கண்ணந்தங்குடி ஒற்றுமையே முக்கியம் என மறுத்துவிட்டு மதிமுகவில் தொடர்கிறார் . அங்கும நிலைமை வேறுவிதமாக சரியில்லாமல் செல்ல, உள்ளடிவேலைகள் நடக்க, மீண்டும் திமுக 2006 ல் .
திமுகவில் மெல்ல மறுபடியும் நிலைமை சரியில்லாமல் ஆக . 1969 முதல் எதிர் அரசியலாய் இருந்த அதிமுகவில் இணைகிறார் .' நான் பதவிக்கு வரவில்லை, எனது தன்மானத்திற்கு மட்டுமே வந்திருக்கிறேன்' என்று சொல்கிறார் .
இந்த செயல்பாடுகளில் அவர் செய்ததில் எது சரி எது தவறு என்று இன்று பட்டியலிட என்னால் இயலாது. ஆனால் ஒன்று சொல்லமுடியும் உறுதியாக ' அவை அந்த நேரத்து அவரின் நியாயங்கள்'.ஆனால் தீவிர களப்பணி அரசியலில் இருந்து 2010 ல் இருந்தே மெல்ல வெளிவர தொடங்கியிருந்தார். எவரிடமும் விரோதம் பாராட்டும் குணமும் குறைந்து வருகிறது. தீவிர விவசாயத்தில் ஈடுபடுகிறார் இறுதிநாள் வரை.
சில அழகியல் தருணங்களும் அதன் மூலம் நான் அடைந்த தரிசனங்ளும் :
* சக்ரவர்த்தியின் பவனி
அப்பாவின் நடை உடை பேச்சு மற்றும் பாவனைகள் தனித்த அடையாளம் கொண்டது என்றாலும் ..அதில் குறிப்பிடத் தகுந்த ஒன்று அவர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் தோரணை. அவர் வெளியே கிளம்பும் காலை நேர காட்சி இப்படி ஆரம்பிக்கும்..எப்போதும் 5:00 5:30 க்கு எழுந்துவிடுவார். அந்த நேரத்திலும் நண்பர்கள் உறவினர்கள் பெரும்பாலான நாட்களில் சந்திக்க வந்திருப்பார்கள் அது அவர்களின் குடும்ப சமூக பிரச்சனைகளுக்கு ஆலோசனை கேட்க வழிநடத்த(ஊர் சச்சரவுகள் , பஞ்சாயத்துகள் என்றும் சொல்லலாம்) என்றிருக்கும். காலையில் எழுந்ததுமே மற்றவர்களுக்காக நேரம் செலவிட வேண்டுமா என்று எந்த சலிப்பும் அகத்திலும் புறத்திலும் இருக்காது. அவர்களுடனான உரையாடல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செல்லும். அவர் எப்படி அதை முழுமனதோடு விரும்பி செய்கிறாரோ அதற்கு நிகராக அந்த பேச்சுகளை கவனிப்பது எனது வழக்கம் நினைவறிந்த நாள் தொட்டு. அது ஒரு குருகுலக்கல்வி போல எனக்கு. எனது வயதொத்த சிறுவர்களுடன் கழித்த நேரமென்பது அரிதினும் அரிது. அவர் அருகமர்ந்து அகத்தில் தேக்கியவையே இன்றும் என்னை வழிநடத்துகிறது.
பின்பு வயலுக்கு, தோப்புக்கு விஜயம். சுமார் 8 மணியளவில் வீடு திரும்பி வெந்நீர் குளியல். நான் அருகே இருந்தால் முதுகு தேய்க்க அழைப்பார் என்று காத்திருப்பேன். அதுவொரு இனிய எதிர்பார்ப்பு. உடலால் தந்தையுடன் நெருக்கமாகும் தருணம் என்பது அனைவருக்கும் வாய்க்கும் என்றில்லை, எனக்கு வாய்த்தது அது இறுதிவரை. அவர் குளித்து முடித்து துவட்டிக் கொண்டிருக்கும் இடைவெளியில் மாற்றுக் கைலி, உள்ளாடைகள் , துண்டு , வேட்டி , சட்டை அனைத்தும் தயாராய் இருக்கும். சலவை செய்து வந்த வேட்டி சட்டையை அந்த மடமடப்புடன் தொடுவது ஒருவகை உவகையைக் கொடுக்கும். முழுக்கை சட்டைதான். ஆனால் முழங்கைவரை மடித்துவிட்டு நீவிவிட வேண்டும் நேரான ஒரு வடிவத்தில் அது இருக்க. பின்பு சட்டை பாக்கெட்டில் பேனா, சீப்பு, தொலைபேசி எண்கள் , முக்கிய எண்கள் குறிக்கப்பட்டிருக்கும் டைரி( தொலைபேசி எண்களில் அடிக்கடி அழைக்கும் எண்கள் அவரின் நினைவிலேயே இருக்கும்) . லேசாக வாசனை திரவம் சட்டையில் , துண்டில் விட வேண்டும்.
சிறுமேசையில் கண்ணாடி, தேங்காய் எண்ணெய் , முகப்பூச்சு மாவு(Yardley அல்லது Ponds) தயாராய் இருக்கும். தினமும் வண்டி(அவர் உபயோகப்படுத்திய வண்டிகள் Crusader புல்லட் TNO 6067 -இந்த வண்டியை விற்றது 2000 ஆண்டில். இந்த வண்டியை மானசீகமாய் தேடிக் கொண்டிருக்கிறேன், Suzuki Max100 R, Hero Honda CD Deluxe, Excel Super - இந்த வரிசையே சொல்லும் பல கதைகளை) துடைத்துவைத்துவிட வேண்டும் . அந்த வண்டிகளை
Side Stand போட்டு ஒருநாளும் பார்த்ததில்லை. கோணலாகவும் நிற்காது . வண்டியை நன்றாக தூக்கி இழுத்து ஒரு நேர்கோட்டில் நிற்கவைப்பார். புல்லட் மட்டும் ஸ்டாண்ட்க்கு கீழே இரு புறமும் சிறு மரக்கட்டைகள் எடுத்து வைத்து அதன் மேல் நிற்கும்.
ரப்பர் செருப்பை கழுவி வைத்திருப்பார். அதுவும் தயாராக இருக்கும். (ஒருமுறை அப்பாவின் நண்பர் ஒருவர்
உங்களுக்கு நல்ல தோல் செருப்பை வாங்கித் தருகிறேன் என்று சொல்ல. அது வேண்டாம் . காலையில் வயலில் வாய்க்காலில் இறங்குவேன். விருப்பம் போல இதை கழுவிக் கொள்ளலாம். அப்படி தோல் செருப்பை வாங்கினால் நாம் செருப்பாய் உழைக்க வேண்டும் அதைக்காக்க என்றார். இது செருப்புக்கு மட்டுமல்ல. கடைசி வரை 'என் உயரம் என்ன என்று எனக்கு தெரியுமெனக்' கூறி தவணையில் கார் வாங்க சொல்லி வந்த இலவச ஆலோசனைகள் அனைத்தையும் அன்புடன் தவிர்த்தார்.
ஆடை அணிந்தபின் ஆளுயுரக் கண்ணாடி முன் நின்று நேராக பார்ப்பார் பக்கவாட்டில் பார்ப்பார். துண்டை சீராக மடித்து தலையில் முண்டாசு கட்டுவார் வலது புறம் ஒரு குஞ்சத்துடன். பின்பு Ray Ban கண்ணாடியை அணிவார். மறுபடியும் கண்ணாடி நோக்குதல். அதுவரை இருந்த தந்தையல்ல அப்போது நின்றிருக்கும் மனிதர். அதுவொரு பிரமிப்பை எனக்கு அளிக்கும். அந்த எல்லையுடன் எனக்கு ஏதும் தாக்கல்கள் இருந்தால் முடித்துவிடுவேன். கேட் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்கும். வண்டியில் ஏறி உட்கார்ந்து இருபக்கக் கண்ணாடிகளும் சற்று திருப்பப்படும்(அந்த கண்ணாடிகள் பின்புறம் வரும் வாகனங்களை மனிதர்களை கவனிக்க என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அப்பாவுக்கு அது அவரை அவர் ரசிக்க பயன்படும் ஒன்று பயணத்திலும்). வண்டியை கிக் ஸ்டார்ட் செய்த பிறகு பின்னிருந்து அழைப்பதோ, பெரிய செலவுகளை கடன்களை ஞாபகப்படுத்துவதோ கூடவே கூடாத ஒன்று. வண்டி கிளம்பி மேற்கு நோக்கி திரும்பி சந்தியம்மன் கோவில் கடந்து பார்வையில் இருந்து மறையும்வரை நின்றிருப்பேன். உடலும் மனமும் துள்ளும் உவகையிலும், இது என்றோ ஒருநாள் இல்லாமல் ஆகும் என்று வரும் கணநேர நிதர்சன உணர்விலும்.
ஒருநாள் அப்பாவுடன் அவரின் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறோம் . அப்போது சாலையின் ஓரத்தில் நின்றிருந்த ஒருவர் அப்பாவுக்கு தலையாட்ட அவரும் தலையாட்டினார். நானும் திரும்பி அவருக்கு தலை ஆட்டி கையை உயர்த்திக் காட்டினேன் . 'என்றும் தலைக்கு மேல் கை காண்பிக்காதே ' என்றார் . அந்த சொற்கள் இன்றுவரை என்னை தொடர்கிறது. குறிப்பாக என் எல்லை அறிந்து களமாட.
*முருகனுடன் ஒரு ஒப்பந்தம்
என் தாய் தந்தையருக்கு முதலில் பிறந்தது ஆண் குழந்தை. அவர் இரண்டரை வயதில் இறக்க. பிறகு எனது அக்காக்கள் பிறக்கிறார்கள் . அன்று கிராமங்களில் உச்சத்தில் இருந்த விழைவு ஒரு ஆண் குழந்தை. அது
அப்பாவில் ஆழ்மன விருப்பமாகவும் சமூக அழுத்தமாகவும் இணைகிறது பல வகையில்(அதில் என் தாய்பட்ட இன்னல்கள் எண்ணிறந்தவை என அறியமுடிந்தது பின்னாட்களில்). அப்போது கருப்பு சட்டை என்பது அப்பாவின் விருப்ப உடை(தலைவர்கள் கைதாகும் போது கருப்பு கொடி போராட்டம் போன்ற எதிர்ப்பை தெரிவிக்கும் நிகழ்வுகளுக்கு மட்டுமல்ல , அவரிடம் யாரோ உங்களுக்கு கருப்பு சட்டை நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்களாம் அதுவும் ஒரு அழகியல் காரணம் கருப்பு சட்டை அணிய 🙂 ). கட்சி செயல்பாடுகள், விவசாயியாய் ஒப்பந்தக்காரராய் வேலைகள் , ஊர் பஞ்சாயத்து இவையே பிரதானம். கடவுள் தரிசனம் , கோவில் செல்லுதல் என எதுவும் பழக்கத்தில் இருந்தது இல்லை.
நான்காவது குழந்தை அம்மாவின் வயிற்றில் . அந்த நேரத்தில் பழனி அருகே ஒரு பஞ்சாயத்திற்கு செல்கிறார் அப்பா. உடன் வந்தவர்கள் முருகனை தரிசிக்க மலையேறுகிறார்கள். இவர் மறுத்து பிறக்கப் போகும் குழந்தை
ஆண் குழந்தையாய் இருந்தால் வந்து ஏறுகிறேன் பிறகு என்கிறார் . நான் பிறக்கிறேன். என் அம்மாவும் அவர் வழி உறவுகளுக்கும் நிம்மதி பெருமூச்சு. தங்கத் தேர் இழுப்பு மற்றும் எங்கள் வீட்டு நிலைவாசப்படியில் முருகனுக்கு 'முருகன் துணை' என்று ஸ்டிக்கர்! அதற்குப் பிறகு கருப்பு சட்டை குறைகிறது. முருகன் வழிபாடு, கோவில்கள் சார்ந்த செயல்பாடுகள் அதிகரிக்கிறது.
*ஆடைகளும் அப்பாவும்
ஆடைகளில் நேர்த்தி என்ற கொள்கையை கடைசி நான்கைந்து வருடங்கள் தவிர எப்போதும் அவர் தவறவிட்டதில்லை . வேட்டிகளில் பலவகை பட்டு ரகங்கள், டெரிகாட்டன் , சாரதி, சங்கு, ராம்ராஜ் என
பெரும்பாலான வகைமைகளை கட்டிப்பார்ப்பதில் அலாதி பிரியம். அதைவிட துண்டுகளின் மேல். வியர்வைக்கும் முண்டாசுக்கும் அது இன்றியமையாதது. ஒரு மழைக்காலத்தில் சலவை செய்து வரவேண்டிய துணிகள் வரவில்லை . பள்ளிவிடுமுறையில் இருந்தேன். நானே துவைத்து கஞ்சி போட்டு காயவைத்து தேய்த்து தயார் செய்தேன்.தியானம் போன்றதொரு நிறைவு என்னின் அகத்தில் . சொல்லமுடியாத அளவுக்கு மகிழ்ச்சி அப்பாவின்
முகத்தில்.
*அன்றாடத்தில் அமைதி
பதட்டத்துடன் வெளியே கிளம்புவதோ , அதிவேகத்தில் வண்டி ஓட்டுவதோ, வேட்டியில்லாமல் கைலியில்
ஒரத்தநாடு செல்வதோ நிகழ்ந்ததே இல்லை. அவர் வண்டி ஓட்டி ஒரு விபத்து கூட நடந்தது இல்லை சுமார் ஐம்பது ஆண்டுகளில். இன்னொரு குறிப்பிடத் தகுந்த நிதானச் செயல்பாடு ஒன்றுண்டு அது ஒரத்தநாடு தாண்டி வேறு ஊர்களுக்கு செல்வதென்றால் வண்டியை ஒரத்தநாட்டில் போட்டுவிட்டு பேருந்து ஏறுவதே வழக்கம். இது என்ன அதிசயமா என்றால் அப்படி அல்ல . அதில் ஒரு நிதானமும் பொறுமையும் உட்பொதிந்திருக்கும்.
*திருமணத்திற்கு பிந்தைய நாட்கள்:
அன்றைய சமூகத்தில் நிலவிய ஆணாதிக்க குணங்களும் , அடக்குமுறைகளும் ,ஒரு பக்க ஏவல்களும் நிரம்பியதாகவே எங்கள் வீட்டிலும் இருந்துள்ளதை அறிய முடிகிறது. ஆனால் என் திருமணத்திற்கு பிறகு
அப்பா சொன்னது 'நான் இருந்தது போல நீ இருக்க முடியாது, உன் வரவு செலவுகள் அனைத்தும் உன் மனைவிக்குத் தெரியவேண்டும். அவள் வேலைக்கும் செல்லவேண்டும்' இந்த வரிகள் அவரிடம் இருந்து வந்தது நான் எதிர்பார்த்திருந்த ஒன்றுதான் என்றாலும். அடுத்த தலைமுறையின் மாற்றம் அதற்கு முன் தலைமுறை உணர்ந்து கொள்வது என்பது எங்கும் நடக்கும் என்றில்லை.
அதற்குப் பிறகு ஒருநாளில் அம்மா என் மனைவியிடம் சொன்னது ' இந்தக் குடும்பத்திற்கு வந்து படாதபாடு பட்டுவிட்டேன். பார்த்து இருந்துகொள்' தாயாய் மாமியாராய் சொல்லும் சொற்களைவிட பெண்ணாய் ஒரு பெண்ணிடம் பேசுகிறார் என்று புரிந்துகொள்ள முடிந்த தருணமிது.
*எனக்கும் அவருக்குமான பிணக்குகள்
பெரும்பாலும் இருந்ததில்லை. ஒன்றிரண்டு தருணங்கள் என்றால் அது இருசக்கர வாகனம் ஓட்டவேண்டும் என்றும்
சென்ட் அடித்து பள்ளிக்கு செல்லவேண்டும் என்று அடம்பிடித்த தருணங்களை சொல்லலாம். அதற்காக ஒருநாள் தேங்காய் உடைத்து தேரில் வந்த அம்மனை வழிபடக்கூட செலவில்லை. தேர் நெருங்கிவர அவர் வந்து என்னை அழைக்க அப்படியும் மறுத்த மறந்தே விட நினைத்து மறக்கவே முடியாத இழிநினைவுகள் என்னிடம் உண்டு. அப்போதெல்லாம் கோபத்திற்கு, திட்டுவதற்கு பதில் கண்களில் பொருள்பல ஒளித்து தொடர்ந்து ஆழ்ந்து சிரிப்பார். அதில் கவலை, பரிதாப உணர்வு, கருணை, நக்கல் எல்லாம் அடங்கி இருக்கும். இப்போது தோன்றுகிறது அதற்கு பதில் திட்டி இருக்கலாம் ஒரு முறையாவது என் வாழ்நாளில் அவர் என்னை அடித்து இருக்கலாம். இப்போது அந்த சிரிப்பு எனக்கும் அவ்வப்போது வந்துவிடுகிறது. நான் அவரை என்னுள் உணரும் தருணங்களில் ஒன்றது.
*அவர் எனக்கு
தந்தையா நண்பரா என்றால் பின்னதை முதலில் தேர்ந்தெடுப்பேன். அவர் என்னிடம் எதையும் மறைத்ததில்லை.
எனக்கு அவர் செய்ததை நான் பார்த்த எந்த தந்தையும் மகனுக்கு செய்ததில்லை என்று உறுதியாக சொல்லமுடியும்.
அது என்னைத் தனிக்கவனம் கொடுத்து வளர்த்ததா,நான் நோயுற்றால் தான் நொந்து பதறி அந்த நேரத்தில் இருக்கும் தஞ்சையின் சிறந்த மருத்துவரைப் பார்க்க அழைத்து சென்றதா,என்ன படிக்கிறாய் என்று எப்போதும் கேட்காமல் இருந்ததினாலா , தேர்வுகளில் தோல்வி கண்டு அழுதால் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி என்னை தேற்றியதற்கா, சென்னை ரயில்வண்டியில் ஏற்றிவிட்டுவிட்டு வண்டி கிளம்பி அரியலூர் செல்லும்வரை இணைப்பில் இருந்து இருக்கை / படுக்கை கிடைத்ததா என்று கேட்பதற்கா, அவர் தனது மனைவியை எப்படி நடத்துகிறார் என்பது ஒருபுறம் இருந்தாலும் ஒரு மகன் தனது தாயை எப்படி மதிக்கவேண்டும்
என்று உதாரணமாய் வாழ்ந்துகாட்டி அதை எனக்கும் சொல்லியதற்காக, ஏவல்கள் சீறல்கள் சற்றுக் குறைக்கவேண்டும் என்று நான் சொல்ல அதன் நியாயம் அறிந்து அவர் அதை ஏற்றுக்கொண்டு மறுபேச்சு இன்றி செயல்படுத்தியதற்கா ,'பணம் சேமிப்பு என்பதெல்லாம் நம்மிடம் இல்லை.இருப்பினும் நான் நினைத்தால் வண்டியோ காரோ அடுத்த ஒரு மணிநேரத்தில் வாசலில் நிற்க வைக்க முடியும். அது உனக்கும் தெரியும். ஆனால் அதை செய்யும்முன் நாம் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது அதில் சிந்தனையை வை. இவையெல்லாம் சிறுத்து முக்கியமில்லாததாய் ஆகிவிடும்' என்று சொன்னதற்கா, எனது கல்லூரி இறுதியாண்டில் சென்னையில் என்னுடன் வந்து இரு நாட்கள் தங்கிவிட்டு ஊர்வந்து அண்ணன் ஒருவரிடம் 'நான் அவனுக்கு செல்போன் , வண்டி, கணினி என எதையும் வாங்கிக்கொடுக்கவில்லை. ஆனால் அவை அனைத்தையும் இவன் கேட்காமலே தந்து துணைபுரியும் நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கிறான்' என்று சொன்னதற்கா, அந்நாட்களில் பகுதிநேர வேலைக்கு மாலை நேரத்தில் நான் செல்வதை அறிந்து மகிழ்வுடனும் கண்ணீருடனும் மற்றொரு அண்ணனிடம் சொன்னதற்காக,
சிறுவயதில் இருந்து என்னை உடல் பெருத்து அவருக்கு சற்றேனும் நிகராக பார்த்துவிட ஆர்வம் கொண்டு ஆரோக்கியம் சார்ந்த உணவுகள் மற்றும் யோகம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் என்னை ஈடுபட வைத்ததற்காகவா,
பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வன்று தஞ்சை ஹோட்டலில் உணவுண்டு நூறு ரூபாய் நான் கேட்க எதுவும் கேட்காமல் கொடுத்துவிட்டு வண்டியை கிளப்பி பிறகு நிறுத்தி
'பீர் சாப்டா உடம்பு ஏறும்னு சொல்லுவானுங்க, சாப்டராத' என்று சிரித்துக்கொண்டே சொன்னதற்கா, திருமண நேரத்தில் நான் சற்று தாமதப்படுத்த 'நான்லாம் துரைசாமி வாண்டையார் சொன்னார்னு மறுவார்த்தையே பேசல' என்று அவர் சொல்ல , உங்கள் வேகம் எனக்கு வராது என்று சொல்ல . அது எப்போதும் உனக்கும் வராது என்று கால்மேல் கால் போட்டு சொல்ல , உங்களிடம் மட்டும் நான் எப்போதும் தோற்கவே விரும்புகிறேன் என்று நான் உடனே மறுமொழியுரைக்க , அதற்கு பதிலேதும் சொல்லாமல் 'மீசையை நீவியபடி சிரித்ததற்கா,
முதல்விமானப் பயணத்திற்கு நான் கிளம்ப நான் அறிந்து அவர் கொடுத்த முதல் முத்தத்திற்கா , சில நேரங்களில் அவரின் இளமைக்கால நினைவுகளை கிளறும் வகையில் உரையாடலில் சீண்டும்போதும் சிரித்துக்கொண்டே கடந்துசெல்வதற்கா ,
உடன்பிறந்தார் குடும்பம்வேறு தன்குடும்பம் வேறு என்ற பிரிவினை கொள்ளக்கூடாது என்பதை சொல்லாய் சொல்லாமல் அவரின் செயலில் நிகழ்த்தி 1970 முதலான நாட்குறிப்புகளிலும் பதிவுசெய்து எனக்களித்து சென்றதற்கா,
ஒருவரின் வேலையை ஏற்றுக்கொண்டால் அதை தன் கடமையாய் உணர்ந்து பிரதிபலன் பார்க்காமல் தன்பொருள் இழந்தாலும் அவைகளை செயல்படுத்தியதற்கா , தன்னை அழைத்தவர்களின் பக்கம் நியாயம் இல்லை என்று தெரிந்தால் அந்தக் கூட்டத்திலேயே அவர்களுக்கு ஆதரவாய் சென்றவர் எதிரியாய் திரும்பி வருவதற்கா,
எந்த வங்கியில் எந்த திட்டத்திலும் சேர்த்திருந்தாலும் சேர்த்திருக்க முடியாத அளவுக்கு என் நலத்தை நியாயமான அறம் சார்ந்த வகையில் ஆதரிக்கும் நல்லுள்ளங்களை எனக்கு கொடுத்து சென்றதற்கா,
ஒட்டுண்ணிகளை அடிப்படைவாதிகளை அரசியல் அடிபொடித்தனத்தை இனம்காணும் வித்தையை கற்றுத் தந்ததற்கா,
'செய்யக்கூடியது , செய்யக்கூடாதது மட்டுமல்ல செய்தே ஆகவேண்டியதையும் சேர்ந்ததுதான் தன்னறம் ' என்ற நித்ய சைதன்யயதியின் வரிகளுக்கு நிகராய் , தன் குறைகள் பலவற்றையும் எந்த தயக்கமும் இல்லாமல் என்னிடம் ஒப்புக்கொண்டு என்னிடம் இதையெல்லாம் நீ செய்யாதே, இவையெல்லாம் நான் இல்லாத நாட்களிலும் நீ செய்யவேண்டும் என்று எனக்கு சொல்லியதற்கா,
'வாழ்வதன் அகலம் அல்ல , வாழ்வதன் ஆழமே முக்கியம் . வாழ்க்கை வெல்வதற்கும் நிறைவதற்கும் உரியது. ஆகவே செயல் புரிக ' என்ற என் ஆசான் ஜெயமோகனின் வரிகளுக்கு ஒப்ப வாழ்ந்ததற்கா,
இவைகள் அனைத்திற்காகவும்தான் என்றே படுகிறது.
மறைவு :
உடல்நலக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் அது பலனிக்காமல் 24.03.2018 அன்று சென்னையில் இயற்கையெய்தினார் .
அந்த நாளில் அல்லது நாட்களில் அவருக்கு வந்த ஆகச் சிறந்த அஞ்சலிகள் இரண்டு.
1) எங்கள் குடும்பம் அழ உற்றார் உறவினர் அழ நின்றிருந்த நேரத்தில், காலில் செருப்பில்லாமல் கழுத்தில் கட்டம் போட்ட ஒரு அழுக்கு துண்டு, கைலியுடன் கையில் ஒரு பையுடன் ஒருவர் வந்தார், அப்பாவின் அருகே வந்து அதுவரை எந்த சலனமும் இன்றி வந்தவர். அவரின் முகத்தைக் கண்டு பெருங்குரல் கொண்டுவெடித்து அழுது தனது பையில் இருந்து ஒரு சந்தன மாலையை எடுத்து அணிவித்தார் . அவரை அதற்கு முன்பும் நான் பார்த்தது இல்லை. பின்பும் பார்த்தது இல்லை. பெயர் ஊர் கேட்க எண்ணினேன். வேண்டாம் அவரின் பெயர் அன்பன் என்றோ ஊர் அறவூர் என்றோ தான் இருக்கும் என நான் முடிவு செய்துகொண்டேன்.
2) திரு அய்யாக்கண்ணு பெரியப்பா அவர்கள் அவரும் அப்பாவும் எப்படி இளமையில் நெருக்கமாக இருந்தார்கள் என்று சொல்லிவிட்டு.. சொன்னது ' எல்லாம் இருக்கும் ஆனா சோறு போட வீட்ல கதி இல்லை அவனுக்கு .. மாங்காய் அறுத்து மண்ணில் புதைத்து வைத்து பசிக்கு எடுத்து சாப்பிடுவான். அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒண்ணு ஊரைவிட்டு ஓடி இருக்கணும். நான் உட்பட யாரும் அவன் நாலு பேருக்கு நியாயம் சொல்ற அளவுக்கு வந்து தலைவரா ஆவான்னு நினைச்சது இல்ல 'என்றார்.
அவரின் நினைவு செயல்பாடுகள் :
நான் எப்போதும் அப்பாவிடம் அவரின் நடத்தையை வைத்து கண்டுகொண்ட ஒன்றுண்டு . அது 'ஒருவர் நினைவு கூறப்படுவது பலனால் இருக்கவேண்டும் படத்தால் அல்ல '. இதை முன்னோடிகளான அவரின் அண்ணன் தெய்வத்திரு K.R .சிதம்பரம் அத்தான் தெய்வத்திரு R.A துரைசாமி மற்றும் அவரின் (நலமுடன்) பாசமிகு இளவல் அவர்களை மனதில் வைத்து சொன்னார். இவர்கள் மூவரும் விளம்பரப் பிரியர்கள் அல்ல . ஆனால் மக்களுக்கு களப்பணி செய்வதற்கு தத்தம் பொறுப்புகளை செல்வங்களை உறவுகளை ஆற்றலை என அனைத்தையும் கருவியாக்கி கொண்டவர்கள் / கொண்டிருப்பவர்கள் .
அந்த வகையில் கடந்த ஏழு வருடங்களாக அப்பாவின் நினைவு நாளன்று ஒரு வருடம் கூட ஊர் பார்த்து எனை மெச்ச விளம்பரப் பதாகை வைப்பதில்லை . மாறாக கண்ணந்தங்குடி கிழக்கு, மேற்கு மற்றும் ஒக்கநாடு கிழக்கு நூலகங்களுக்கு சில நூல்களையும் , கண்ணந்தங்குடி கிழக்கில் பெரியப்பா K.R.C அவர்கள் இளைஞர் மன்றம் நடத்தி வந்த இச்சி மரத்தடியில் வைத்து மக்களுக்கு பயன்தரும் சில மரக்கன்றுகளையும் வழங்கிவருகிறோம் .
இவ்வளவு சொல்லியபிறகும் சொல்ல எஞ்சியிருக்கும் அல்லது சொல்ல முடியாமலிருக்கும் நினைவுகளில் மேலும் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் என் நண்பரும் தந்தையுமாகிய தலைவர் கே.எம்.ஆருக்கு அவரின் ஏழாவது நினைவுநாளான இன்று என் எட்டுறுப்பும் மண்தொட விழுந்து சொல்கிறேன் வணக்கமும் நன்றியும்.
அன்புடன்
கே.எம்.ஆர்.விக்னேஸ்
Comments
Post a Comment