சிறுகதை- வாய்ப்பாடு - கே.எம்.ஆர்.விக்னேஸ்
நிலைக்கண்ணாடியின் முன்நின்று பார்க்கையில் மனம் ஏனோ பின்னோக்கிப் போனது.
அன்றுதான் நான் ஒரு வார விடுப்பில் தாயகம் சென்று திரும்பி இருந்தேன். அந்த நிகழ்வை பல நூறு தடவை நினைத்துப்பார்த்தாயிற்று. ஆனாலும் இன்னும் இனிமை குறையவில்லை அதனிலிருந்து.ஊருக்கு செல்லும்முன்பே குறுகிய நாட்களில் அங்கு செய்ய வேண்டியவைகள் என்னென்ன என குறித்து வைத்திருந்தேன்.அதில் நட்சத்திர முத்திரையிட்டு முக்கியமென வைத்திருந்தது , நான் படித்த கல்லூரிக்கு அருகிலுள்ள டீ கடை. கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது அந்த பகுதிக்கு சென்று. அதைப் பார்த்து எனது மனைவி நகைப்புடன் கேட்டாள் 'எல்லாரும் கல்லூரிக்கு போய் பாக்கணும்னு சொல்வாங்க. நீங்க என்ன அங்க இருக்குற டீ கடைக்கு போகணும்னு சொல்றீங்க ' . 'அது எனக்கு முக்கியமான, உணர்வுப்பூர்வமான இடம் ' என்று ஏதேதோ சொன்னேன். அவளுக்கு புரிந்ததாக தெரியவில்லை என எனக்கு நிச்சயமாக தெரியும்.ஆனால் இவன் வேற மாதிரி என்று திருமணமான இந்த எட்டு ஆண்டுகளில் அவளும் நன்கு என்னை புரிந்துவைத்திருந்தாள்.
சென்னை சென்று சொந்த ஊருக்கு செல்லவேண்டும். ஆகையால் சென்னை சென்ற அன்றே மாலையில் குரோம்பேட்டை செல்ல முடிவெடுத்து Uber , Ola என செல்லாமல் வழக்கத்துக்கு மாறாக மாநகரப் பேருந்தில் அம்பத்தூரிலிருந்து கிளம்பினேன். டாக்சியில் செல்வதை விட பேருந்தில் செல்வது இன்னும் அணுக்கமாக நகரை பார்க்கமுடிந்தது. ஆனால் புதிதாக முளைத்துள்ள வணிக நிறுவனங்களும் கடைகளும் தரை இறக்கப்பட்டுள்ள புதியரக வாகனங்களும் என வேறொரு நகருக்குள் செல்லும் உணர்வையே கொடுத்துக் கொண்டிருந்தது.ஒன்பது மணி நேரத்தில் லண்டனிலிருந்து வந்தவன் சரியாக இரண்டு மணி நேர பயணத்தில் குரோம்பேட்டையை சென்றடைந்தேன்.
வெற்றி திரையரங்கத்திற்கும் ரயில் நிலையத்திற்கும் நடுவில் இருக்கும் ரயில்வே கேட் அருகே இருக்கிறது மணி அண்ணன் டீ கடை. பகலில் அங்கு சென்றதை விட நள்ளிரவுகளில் flex பேனர் கொண்டு முக்காடிட்டுக் கொண்டு எந்த காவல் துறை மேல் பயம் கொண்டு முக்காடிட்டதோ அந்த காவல் துறையையும் தலை குனிந்து உள்ளே வர வைக்கும் கடையே எனக்கு நன்கு பரிட்சயம்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அதே கடையை எதிர்பார்த்து சென்ற எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடையின் அமைப்பு, தோற்றம் அதன் அப்போதைய உரிமையாளர் மணி அண்ணன் என அனைத்தும் சுவடறியாமல் மாற்றப்பட்டிருந்தது. கல்லாவில் உரிமையாளர் இருக்கையில் இருந்தவர் சுமார் இருபத்தைந்து முதல் முப்பது வயது வரை மதிக்கத்தக்க இளைஞர். ஆனால் நான் அங்கு அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டு நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்த 30 நிமிடங்களில் அவதானித்தது என்னவென்றால் .. அவர் உரிமையாளர் தோரணையை காட்டுபவர் மட்டுமல்ல. வரும் வாடிக்கையாளர்களை கவனிப்பதில் மிகுந்த சிரத்தை எடுத்து உழைக்கிறார். அனைவரிடமும் அன்பு காட்டுகிறார். குறிப்பாக அங்கு வேலை செய்யபவர்களிடமும்!மேலும் இமைப்பொழுதில் மனக்கணக்கு போட்டு பாக்கி சில்லறையை திருப்பித் தருகிறார் . தெளிவான கண்களும் உழைப்பின் வேகமும் அவரின் செயலில் தெரிந்தது. வெளிதோற்றமோ உள்ளூர் அரசியல்வாதிக்குரியது. அதாவது கஞ்சி போட்டு மடிப்பு கலையாத சட்டை , கருப்பு பாண்ட், சட்டை பாக்கெட்டில் வெளியில் தெரியும்படி முதல்வரின் படம். எனக்கு அவ்வப்போது தோன்றுவது ஒன்றுண்டு சுய முன்னேற்ற நூல்களுக்கு சற்றும் குறையாதது இந்த தோற்றங்கள். அவர்கள் வாழ்வில் துயரோ, பொருளாதார நெருக்கடிகளோ இல்லாமல் இல்லை. ஆனால் அவ்வாறான மனிதர்கள் நமக்கு கடத்துவது ஒரு வளமான காட்சியை. ஆனால் எல்லாம் இருக்கப்பட்டும் உலகியலின் அகோரப் பிடியில் சிக்குண்ட மனிதர்களை பாருங்கள்.. குறிப்பாக ஐ.டியில் பணிபுரிபவர்களை ..முப்பதிலேயே ஐம்பதிற்கான தோற்றமும் , எதையும் இழந்துவிடக்கூடாது என்பவர்களைப் போல அல்லது எதையோ இழந்து விட்டவர்கள் போல ஓடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை நிறுத்தி எப்போது கடைசியாய் சிரித்தீர்கள் எனக் கேட்க வேண்டும் என்பது எனது சமீப கால அவாக்களில் ஒன்று.
மணி அண்ணன் டீ கடையிலிருந்து கிளம்பும் சில நிமிடங்களுக்கு முன்பு தான் உணர்ந்தேன் . அந்த இளைஞரை எனக்குத் தெரியுமென. கல்லூரி இறுதியாண்டில் ஒரு மழைக்கால நள்ளிரவில் கடைக்கு சென்றபோதுதான் ஒரு சிறுவனை மணி அண்ணன் எனக்கு அறிமுகப்படுத்தினார். தூரத்து உறவினரின் மகன் என்றும் படிப்பைத் தொடர இயலாத நிலையில் நகருக்கு அவரை நம்பி அவன் வந்துள்ளதாகவும் சொன்னார். அதோடு அவனுக்கு எளிய முறையில் கணக்கும் வாய்ப்பாடும் சொல்லித்தர முடியுமா எனக் கேட்டார். அதற்கு பின்பு பல நாட்கள் பிற்பகல்களில் கடைக்கு சென்று அச்சிறுவனுக்கு கணக்கு சொல்லிக்கொடுப்பது எனது வழமையாகியது. அவனின் வறுமையும் ஆர்வமும் கற்பித்தலை எனக்கு எளிதாக்கின. பின்பு கல்லூரி முடிந்து வேறு மாநிலத்தில் பயிற்சி, வேலை , திருமணம், வெளிநாடு பயணம் என வாழ்க்கை என்னை இழுத்துக்கொண்டு சென்றது.
என்னிடம் கணக்கு கற்றுக் கொண்ட அன்றைய சிறுவன் தான் இன்றைய கடையின் உரிமையாளன். இயக்குனர் மிஷ்கின் சொன்னதாக ஒரு உரையாடலில் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஒருமுறை சொன்னார் 'மனிதன் உச்ச கட்ட மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பது அவனின் மொத்த வாழ்நாளிலும் ஒட்டுமொத்தமாக 5 முதல் 10 தடவை தான் என' அவ்வாறான ஒரு மகிழ்வானத் தருணத்தை நான் அடைந்தேன் அன்று. நான் யார் என்றோ என்னைத் தெரிகிறதா என்றோ அவனிடம் குறுக்கு விசாரணை செய்யவில்லை.செய்யத் தோன்றவில்லை.
கிளம்ப எத்தனித்து கல்லா அருகே சென்றேன். எனக்கு முன்பு ஒரு கல்லூரி மாணவன் '2 வில்ஸ் , 3 டீ' என்று சொல்லி ரூபாய் நோட்டைக் கொடுக்க நொடிப்பொழுதில் சில்லறை மாணவனின் கையிலிருந்தது.
என் கணக்கிற்கான தொகையையும் கொடுத்து விட்டு விடை பெற்றேன் ' என்னை மறந்து என்னின் வாய்ப்பாட்டை மறக்காத என் மாணவனிடமிருந்து'.
- கே.எம்.ஆர்.விக்னேஸ்
Comments
Post a Comment