கொடைமடம் - வாசிப்பனுபவம் - அண்ணன் சாம்ராஜிடம் பகிர்ந்தது

அன்புள்ள அண்ணனுக்கு, வணக்கம். தங்களின் 'கொடைமடம்' வாசித்தேன் . இப்போது பெருமையுடன் சொல்ல முடியும் எழுத்தாளர் சாம்ராஜின், வெளியான அனைத்து படைப்புகளையும் வாசித்த வாசகர்களில் நானும் ஒருவன் என. தங்களை நான் சந்தித்துள்ளேன். நேரில் உரையாடும் நல்லூழைப் பெற்றேன் என்பதால் அல்ல. தங்களின் எழுத்து என்னை அந்த கதைக்களத்துடன் வாழ செய்கிறது. அதில் சில நான் வாழ்ந்த அல்லது வாழத் தவற விட்ட அல்லது மிகத் துல்லியமாக சொன்னால் இனியாவது அகத்தாய்வு செய்து அப்படி வாழ விரும்புகிற தருணங்களை அடிக்கோடிட்டு காட்டுகிறது என்பதாலேயே ! அரிட்டாபட்டி சமணப் படுகையில் தொடங்கி அங்கேயே திரும்ப வந்து முடியும்(அச்சில் வந்த கதையை மட்டும் சொல்கிறேன் :) ) இந்தப் பெருங்கதையில்.. முகுந்தனின் துணை கொண்டு காண்பித்தது .. மாற்றில்லா அரசியல் எனும் தீவிரவாதத்தின் கோர முகத்தை , மதுரையின் அழகை , காதலின் வன்முறையை , மனிதக் கீழ்மையை இவை எல்லாவற்றையும் விட வாசித்து முடித்ததும் என்னில் மேலெழுந்து நிற்பது இதில் காட்டப்பட்டுள்ள மனித மேன்மை தருணங்களே ! இடதுசாரி அமைப்பின் தீவிர உறுப்பினர்களை நண்பர்களாய் கொண்டு ஆனால் தன்னை அதில் இணைத்துக்கொள்ளாமல் வெளியில் இருந்து பார்க்கும் முகமாய் முகுந்தான் இருக்கிறான் . அவனின் பார்வையில் அந்த அமைப்புகளில் எப்படி உறுப்பினர்கள் சுரண்டப்படுகிறார்கள் , அதன் கொள்கையிலேயே உள்ள அபத்தம் அல்லது பெரிய முரண் என்ன , அங்கு எப்படி இந்திய மக்கள் தொகையை கட்டுக்குள் வைக்க அவர்களால் முடிந்த வரையில் நுண்ணிய முறையில் தனிமனித சுதந்திரத்துக்கும், காதலுக்கும் மற்றும் திருமணத்திற்கும் காண்டம் போட்டு துணை புரிய முடிகிறது என 360 டிகிரியில் அலசி ஆராய்கிறது இந்நாவல் . இன்றும் இந்த தீவிரத்துடன் இயங்கும்(இயங்கிக்கொண்டிருந்தால் ?) எந்த அமைப்பிற்கும் ரகசியக் கையேடாகவேனும் இதை பரிந்துரைக்கலாம். மனிதர்கள் மீது சகா மனிதர்கள் கொள்ளும் அபிப்பிராயத்தை(தோற்றத்தை, பின்புலத்தை, பணப்புலத்தைக் கொண்டு) மறு விசாரணை செய்ய சொல்லும் தருணங்கள் விரவிக்கிடக்கிறது இந்நாவலில். அது முகுந்தன் வாழ்பனுபவமாக பெற்றதைக் கொண்டு வெளிச்சம் பாய்ச்சுகிறது வாசகனிடம். ஒவ்வொரு நிகழ்வுகளை சொல்லும் பொருட்டு அதில் தொடர்புள்ள மனிதர்களை மட்டும் காட்டாமல் அந்த இடத்தை அதோடு இணைந்த இயற்கைக் காட்சிகளை பருந்துப் பார்வை கொண்டு வாசிப்பின் போது உறுத்தா வண்ணம் உள்ளது உள்ளபடியாய் கண்முன் நிறுத்துவது தனித்துவமான ஒன்று. கதையில் நாம் ஆழ்ந்திருந்தாலும் இந்த தருணங்களையும் தவற விடாது ரசிக்க வைக்கிறது. வாழ்வில் எவ்வளவு துயரும் களிப்பும் இருந்தாலும் இவை தவறவிடக்கூடாத ஒன்றென நம்மை அறிவுறுத்தாமல் அறிவுறுத்துகிறது. முகுந்தன் ஜென்னி காதலையும் அவ்வாறே எந்த சமரசமுமின்றி முகுந்தனின் பார்வையில் அதே நேரத்தில் முகுந்தனின் பக்கம் மட்டும் பேசாமல் எந்த சமரசமும் அன்றி பேசுகிறது அக்காதல் கதை. முகுந்தன் முகுந்த் என அழைக்கப்பட்டபோது அவன் நானில்லை என சொல்லி மாடிப் படிகள் அருகே செல்லாமல் இருந்திருக்கலாம் என உள்ளுணர்வு சொல்லாமலுமில்லை. ஆனால் காதலுக்குத்தான் கண் இல்லை என நாம் அறிந்திருக்கிறோமே! முகுந்தன் மீண்டும் அரிட்டாபட்டியில் முகுந்தில் இருந்து முகுந்தனாய் மாறியத்தருணத்தில் அறிந்ததைப் போல ! மையக்கதையில் முகுந்தன் ஜென்னியுடனான காதலுடன் அவர்கள் இருவர் பார்வையில் புரட்சி, அமைப்பு, கொள்கை, தீவிரம் , ஒழுக்க விதிகள் , எது இலக்கியம் எது இலக்கியம் அல்ல என ஒரு அறிவார்ந்த தர்க்கங்களும் விவாதங்களும் நடக்கிறது. தோழர்கள் மற்றும் அவர்தம் அமைப்புகளை பட்டவர்த்தனமாக காண்பிக்கும் உபகதைகள் நம்ம உலுக்குகின்றன. இந்த நாவலை வாசிக்க ஆரம்பித்து சில பக்கங்கள் கடக்கும் வரை ஒவ்வொரு பக்கம் கடக்கும்போதும் வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தேன். வீட்டில் அனைவரும் திரும்பி பார்க்கும் வண்ணம்! அதுபோல நான் சிரித்தே பல நாட்கள் கடந்துவிட்டிருந்தது என்பது பின்பு உபகதை ஒன்றை வாசித்தபோது அதில் வரும் தோழர் போலதான் நாமும் சிரிக்காமல் ரசிக்காமல் நாமே அறியா இறுக்கத்தை வளர்த்து எதை நோக்கியோ ஓடிக்கொண்டிருக்கிறோமா எனத்துணுக்குற வைத்தது. எப்படி வாய்விட்டு சிரித்தேனோ அதே போல ஆனால் வாய்விட்டு அழுதேன் 'தோழர் ஆர்.கே எனும் சுதாகர் ' கதையை படித்து. தல்ஸ்தோய் வரியென ஆசிரியர் ஜெயமோகன் தளத்தில் படித்தேன் ' சந்தோஷம் கொண்ட குடும்பங்கள் ஒன்று போல உள்ளன . துயரமிக்க குடும்பங்கள் ஒவ்வொன்றும் அவை அவை வகையில் துயரமாக உள்ளன' என . அதுபோல இவர்கள் எல்லோரும் இடதுசாரி அமைப்பின் தோழர்கள் தான் ஆனால் அவர்கள் கொண்ட துயரம் ஒவ்வொன்றும் தனித்துவமானது. உபகதைகளையே விரித்தெடுத்தால் ஒவ்வொன்றும் தனித்தனி நாவலாகும். மேலே சொன்ன சில வார்த்தைகள் போக.. இந்த நாவலை வாசித்து முடித்ததும் இது எனக்கு என்ன கொடுத்தது எனத் தொகுக்க முயன்றேன். அவற்றில் சில கீழே. 1)அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை , இருப்பதைக் கொண்டு எந்த நேரத்திலும் சமநிலையை மீட்டிக்கொள்ள (இதை வெவ்வேறு இடங்களில் வாசித்து இருந்தாலும்) வாழ்வனுபவத்தைக் காண்பித்து அறிவுறுத்தியது . 2) கடந்த ஏழு நாட்களில் நான் சிரித்தது எத்தனை தடவை என்னை சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைத்தது எத்தனை தடவை என எழுதினேன். துயர்மிகு உண்மையே என் முன் வந்து நின்றது. 3)எனக்கு சில நேரத்தில் சின்னஞ்சிறு இடர்கள் வரும்போது கூட மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாவேன். ஆனால் அந்த அளவுக்கு நீ பெரிய ஆள் இல்ல தம்பி என உபகதைகள் வழி உரக்க அறிவிக்கப்பட்டேன். 4)நான் பார்த்த இடதுசாரிகள் எல்லாம் சிவப்பு சால்வை மடிப்பு கலையாமல் தோளில் போட்டு கூடவே, 'சார்லி' அல்லது 'பாஸ்' perfume அடித்துக்கொண்டு வாக்கு கட்சிகளுடன் தேர்தல் நேரத்தில் கூடும் விருந்ததுண்ணிகள் தான் . அப்படி அல்ல என விரிவாக உணர வைத்தது. 5)வார்த்தைகளும் / அரசியல் பார்வைகளும் பல ஞாபகங்களை தருணங்களை நினைவுறுத்தியது . (சில உ.தா : 'தட்டுவாணி', 'கெச்சல் ', 'இன்று இருக்கும் காவி கழுவினாலும் அவ்வளவு சீக்கிரம் போவதல்ல' ,'நாத்திகன் அல்ல , நம்பிக்கையை கேலி செய்பவனும் அல்ல ' ) 6) காட்சி வர்ணனைகள் அப்படியே அந்த இடத்தில் நம்மை கொண்டுசென்று நிறுத்துகிறது. நிச்சயமாக நம் வாழ்நாளில் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கும் இடங்களுக்கு அதே வடிவத்தில் சென்று காணமுடியாது ஆனால் அப்படி கண்டுவிட்ட சிறு உணர்வை அளிக்கிறது. 7) நிறைய இடத்தில் முகுந்தனின் மேல் பொறாமை கொள்ள வைத்தது அவரின் அனுபவங்களும் பகடிகளும். ஆனால் அந்த அனுபவத்தின் விலையாக அவர் கொடுத்ததை நினைக்காமலும் இல்லை. 8)உவமைகள் : நாவலில் உறுத்தாத உவமைகளுக்கு பஞ்சமே இல்லை . 'நிலவொளி பட்டு சிறுநீர் பொன்னிறமாக மாறியது' , 'நாம் ஏன் எதையோ இழந்தது போல அல்லது எதையும் இழக்கக்கூடாதவர்கள் போல' என்பதெல்லாம் உச்சம் . 9)புரட்சியில் புதையுண்டவர்கள் / நினைவில் மேலெழுபவர்கள் : வர்கீஸ், கலைக்கோ , சுதாகர், தாமஸ் , செம்முகில் , சையது அண்ணண் , அரிஸ்டாட்டில் , மாக்கான் ,பரமேஸ்வரன் , பாபு என நிறைய பேர் 10)உதாரணங்கள் / மேற்கோள்கள் : நிறைய இடத்தில அந்த சம்பவத்தை நிகழ்வை சொல்லும்போது அதற்கு மேற்கோளாக முகுந்தன் படித்த நாவலையோ பார்த்த திரைபடத்தையோ சொல்வது நம்மை அங்கும் இழுத்து சென்று சிந்திக்க வைக்கிறது. நான் சில நேரங்களில் நண்பர்களுடனான பேச்சுக்களில் அப்படி எனது முந்தைய அனுபவத்தை / கல்லூரி நாட்களை மேற்கோள் சொல்வேன் . ஆனால் அவர்களுக்கு தெரியாது நான் சில வினாடிகள் அங்கும் சென்று வாழ்ந்து விட்டு வருகிறேன் என . 'எல்லாம் கிடைக்கப்பெற்று' இப்படி மனிதத்தின் மீது அன்பு செலுத்த முகுந்தன் நம்மிடம் சொல்லவில்லை . எதுவுமில்லாமல் அப்படி சொல்கிறார் என்பதே இந்நாவலின் சிறப்பு . அதை வெறும் போதனையாய் சொல்லாமல் அவருக்கே உரிய பகடியுடன் வாசிப்பறிவுடன் அடுத்தவர் புண்படா மெல்லியத் தர்க்கத்துடன் முக்கியமாக அன்றாட வாழ்வின் போக்குடன் சொல்கிறார் . நீர் வழிப் படூஉம் புணைப் போல ..வாழ்வை அதன் போக்கில் எதிர்கொள்கிறார் எந்த முன்முடிவுமன்றி அளவுகோளுமன்றி ! மதுரை பின்னணியில் ஒரு நாவல் எழுத ஆசிரியர் ஜெயமோகன் சொன்னதாக நாவலின் தொடக்கத்தில் சொல்லியிருந்தீர்கள் அது செவ்வனே நிறைவேற்றப்பட்டுள்ளது . பணிவன்புடன் , மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும் அண்ணன் . - கே.எம்.ஆர்.விக்னேஸ்

Comments

Popular posts from this blog

க.நா.சு - இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

வெண்முரசு - இந்திரநீலம் - வாசிப்பனுபவம்

சென்றடையவில்லை என்னும் நிறைவின்மை !