அயோத்திதாசர் என்னும் முதற் சிந்தனையாளர்

https://www.jeyamohan.in/18154/

அன்புள்ள நண்பர்களுக்கு ,

வணக்கம்.


ஆசிரியரின் 'அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்' என்ற கட்டுரைத்  தொடரை வாசித்தேன். 


முதற்  சிந்தனை என்றால் என்ன , வழிச்சிந்தனை என்றால் என்ன என்ற விளக்கத்துடன் துவக்கப்படும் இந்த கட்டுரை , ஒரு ஆரம்ப நிலை அறிதலுக்கு ஏற்றவாறு மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது .


இதில் தான் நான் பாரதி , ஈ .வே.ரா முதலியோரின் சிந்தனைகளின் ஊற்றுமுகம் என்ன என அறிந்து கொண்டேன் . இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை அப்படியே நான் நம்புவதற்கு முன் அது சரி தானா என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன் . ஆம் என்றே உள்ளுணர்வு சொல்லியது.


மிக முக்கியமாக ,  பாரதி , ஈ .வே.ரா , ஜெயகாந்தன் , சுந்தர ராமசாமி முதலானோர் ஏன் வழிச் சிந்தனையாளர்கள் என தெளிவு படுத்தி பின்பு ஆசிரியரின் கோணத்தில் முதற் சிந்தனையாளர்கள் என எஸ்.என்.நாகராஜன்,மு.தளையசிங்கம் & பண்டித அயோத்திதாசர் இவர்களை அறிமுகம் செய்த விதம் ஏற்புடையதாக இருந்தது . மேலும் அவர்களைப் பற்றி மேலும் அறிய வாசிக்க தொடக்கப்புள்ளியாய் அமைந்தது .


உள்ளபடியே சொல்லவேண்டுமென்றால் , எஸ்.என்.நாகராஜன் என்ற பெயரை நான் இங்கு தான் கேள்வி படுகிறேன் .. அல்லது அப்படி கேள்வி படும் சூழலுக்கு ஒப்புக்கொடுக்க முடியாதபடிக்கு என்னை வைத்துக்கொண்டிருந்தேன் . மற்ற இருவரையும் பெயரளவில் மட்டுமே அறிமுகம்.


அன்பு பொன்னோவியம் , ராஜ் கௌதமன் , ஞான அலாய்ஸியஸ்,வேதசகாயகுமார், ப்ரேம்  ஆகியோரின் பங்கு உள்ளபடியே பாராட்டுக்கும் என்றும் மறவா நன்றிக்கும் உரியது .


நாராயணகுரு , அயோத்தி தாசர் ..இவர்கள் இருவரும் எப்படி அரசியல் காரணிகளுக்காக ஒரு சிறு வட்டத்திற்குள் அடைக்கப்படுகின்றனர் என்ற விளக்கம் ஒரு நினைவூட்டல் தான் . உண்மையிலேயே எப்படி காமராசரை நாடார் என்றோ , அம்பேத்கரை தலித் என்றோ , காந்தியை செட்டியார் என்றோ சொல்லி உரிமை கொண்டாடும் கீழ்மையில் தான் நாம் வாழ்கிறோம் 


"நம்முடைய சிந்தனைமுறை என்று ஒன்று இருக்கிறது. நாம் எங்கோ அதிலிருந்து நம்மை துண்டித்துக்கொண்டிருக்கிறோம். ஆகவே நம்முடைய முன்னோர்களிடம் நம்மால் பேச முடியவில்லை. நமக்கும் அவர்களுக்கும் நடுவே மாபெரும் கருத்து இடைவெளி உள்ளது. இந்த நாட்டில் படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் நடுவே உள்ள இடைவெளியும் இதுவே. இங்குள்ள ஒவ்வொரு அரசுத்திட்டங்களும் முழுமையாகத் தோல்வி அடைவதன் காரணமும் இதுவே." நூற்றுக்கு நூறு உண்மை இது. ஒரு விவசாயியாக உணர்ந்தது இது.



"இன்றைய சூழலில் அசல்சிந்தனையாளன் என்பவன் அவனுடைய பிறப்பிலேயே அவனைச்சூழ்ந்துகொண்டிருக்கும் இந்த மாய உறையைக் கிழித்து வெளியே வந்து தன்னுடைய சுயத்தை மீட்டுக்கொள்ளமுடிந்தவன் என்று சொல்லலாம்".இதை ஒரு வேத வாக்கென்றும் சொல்லலாம் .


அயோத்தி தாசரை அணுகி அறிய வழியாக பின் நோக்கி செல்ல வேண்டிய அவசியத்தையும் யுவனின் வரிகளை மேற்கோள் காட்டி சொன்ன விதம் ஏற்புடையதாய் இருந்தது . நம்மை  நாம் உற்று நோக்கி அறிவின் வழி செல்ல வைக்கும் தொடக்கப் புள்ளி. 



"சமண பௌத்த மதங்களால் தமிழ்மக்கள் அந்த மதங்களுக்கு மாற்றம் செய்யப்படவில்லை. அவர்களின் அடிப்படை நெறிகளையும் ஆசாரங்களையும் தத்துவங்களையும் மற்றும் அவர்கள் கற்றுக்கொண்டார்கள்." -- எவ்வளவு பெரிய விழுமியம் அது . அதன் உருவகமாக நதியை சொன்னது மேலும் அழகு . 


ஒன்றை தொட்டதும்  பல துலங்குவது ..தோண்ட தோண்ட எடுக்கும் புதையலாய் பலரின் பெயர்களும் அவர்களின் சிந்தனைகளும் நூல்களும் அறியப்படுவது பெரும் கொடையாய் உணர்கிறேன் .


சாஸ்தாவைப் பற்றியது அப்படி ஒன்று . காவு என்றால் சோலை ; க்ஷேத்ரம் என்றால் கோவில் என்பதெல்லாம்  கூட எனக்கு புதிய செய்தி .




மேலும் கீழ்க்கண்ட மேற்கோள்கள் / தரவுகள் :


"

பௌத்தம் கட்டமைக்கப்பட்ட விதத்தில் மூன்று வழிகள் உள்ளன. அவை  மறைஞானநோக்கு [Esoteric] , நற்செய்திநோக்கு [gospel] , நவீனத்துவ நோக்கு [Modernist ] 


பால் காரஸ் [Paul Carus ] 1894 ல் எழுதிய எழுதிய ‘புத்தரின் நற்செய்தி’ [The Gospel of the Buddha]


கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் [Henry S. Olcott ] அவர்கள்  1881 ல் எழுதி 1908ல் வெளிவந்த பௌத்தஞானச்சுருக்கம் [ The Buddhist Catechism] என்ற நூல் இன்றும் பௌத்ததை பௌத்தர்களே ஆராய்வதற்கு உதவக்கூடிய நூல் .


ரய்ஸ் டேவிட்ஸை [Thomas William Rhys Davids] ன்  பௌத்த இந்தியா [Buddhist India] .


ஐரோப்பா முன்வைத்த பௌத்தத்தில் தங்களுக்கு உகந்த பௌத்தத்தைத் தமிழறிஞர்கள் ஏற்றுக்கொண்டார்கள். முதன்மையானவர் உ.வே.சாமிநாதய்யர். மணிமேகலையை 1898ல் அவர் பதிப்பித்தபோது அதை புரிந்துகொள்ளுவதற்காக பௌத்த தத்துவங்களைக் கற்று விரிவாகவே அறிமுகம் செய்தார்.  திருவிக தமிழ் நூல்களில் பௌத்தம் [ 1929 ] என்ற நூலை எழுதினார். கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை எட்வின் ஆர்னால்டு எழுதிய. Light of Asiaவை ஆசியஜோதி என மொழியாக்கம் செய்தார்.  அ.மாதவையா 1918ல் சித்தார்த்தன் என்ற நூலை எழுதினார். இதெல்லாம் அன்று சென்னையை மையமாக்கி நிகழ்ந்த பௌத்த மீட்பியக்கத்தின் பாதிப்பினால் உருவான எதிர்வினைகள் என்று சொல்லலாம்.


பண்பாட்டு – வரலாற்று உருவாக்கத்தில் சைவமீட்பியக்கத்திற்கு  உள்ள பங்கு பிரம்மாண்டமானது. வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், ஆறுமுகநாவலர் முதல் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் வரை ஒரு பெரும் பட்டியல் இருக்கிறது. அவர்களுடன் இணைந்துகொள்பவர்களாகவே நம் வரலாற்றாசிரியர்களான ஸ்ரீனிவாச சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் போன்றவர்களும் இருந்தார்கள். அவர்கள் முரண்பட்டு விவாதித்தும், இணைந்து இடைவெளிகளை நிரப்பியும் அதை உருவாக்கினார்கள்.  அந்த சித்திரத்தை ஐநூறு கலைஞர்கள் சேர்ந்து வரைந்த ஒரு மாபெரும் ஓவியத்துக்கு நிகரானதாகக் கொள்ளலாம். நம் கையிலிருப்பது அதுவே.


தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த பௌத்த நூல் எனப்படும் மயிலை சீனி வெங்கடசாமியின் ‘பௌத்தமும் தமிழும்’  1940ல் வெளிவந்தது.  


பௌத்த மெய்ப்பொருளையே அனாத்தம், அநித்தம், துக்கம் என மூன்று சொற்களாக வகுக்கலாம்.  சாரமின்மை வாதம் [அனாத்மவாதம்] நிலையின்மைவாதம் [அநித்தம்] துக்கம் [ அறியமுடியாமைவாதம்].


அயோத்திதாசரின் 'புத்தரது ஆதிவேதம்’  & 'இந்திரர்தேச சரித்திரம்'(இந்த  நூல் பற்றிய ஆசிரியரின் பார்வை ..மேலும் பல அறிதல்களை வாசிப்பை நோக்கி நம்மை நகர்த்தலாம் என எண்ணுகிறேன் )"


அயோத்தி தாசரை விளக்கும் முன் பௌத்த மீட்பின் பின்புலத்தை தெளிவாக விளக்கி ..அவர் கொடுப்பவராகவே இருந்துள்ளார் ..பெறுபவராக அல்ல என்று ஆரம்பிக்கிறது அவரின் அறிமுகம் 



சிங்காரவேலர்( மார்க்ஸியர்), லட்சுமிநரசு(முற்போக்குதாராளவாதி) & அயோத்திதாசர் (விளிம்புநிலைப்போராளி ) என்று வகை படுத்தியது அவர்களின் சிந்தனை ஓட்டம் எப்படி இருந்து இருக்குமென ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது . 


கீழ்க்கண்ட வரிகள் உண்மையிலேயே அயோத்திதாசரை  யார் இவர் என அறிய நம்ம நிச்சயமாகத்  தூண்டும்: 


"அயோத்திதாசர் நீதிநூல்களையும், இலக்கண நூல்களையும் வாசிப்பதற்கு ஒரு முறைமையை வைத்திருக்கிறார். இது அவருக்கு எங்கிருந்து கிடைத்தது? உதாரணமாக அவர் திருக்குறளுக்கு அளிக்கும் பொருள் முழுக்க முழுக்க பௌத்தம்சார்ந்த பொருள். திரிக்குறள் என்றே அவர் அதை பெயர் சொல்கிறார். அது அந்தரத்தில் இருந்து வந்த ஒரு தரப்பு அல்ல. அதற்கு ஒரு வழிமரபு இருந்திருக்கிறது. அது அவருடைய குலத்திற்குரியதாக இருக்கலாம். ஒருவேளை நான் முன்னர் குறிப்பிட்ட அந்தக் காலவிளிம்பில் அறுபட்டு அவர்களின் குலத்துக்குள் மட்டுமே புழங்கி வந்த ஒன்றாக இருக்கலாம்."


அவரின் தனித்தன்மையென(முன்னோடியாகவும் அசல் சிந்தனையாளராகவும் அவரை நாம் அறிவது) கீழ்க்கண்டவற்றை சொல்லலாம் : 


1. சித்தர்மரபை அதன் முந்தைய வடிவமான பழைமையான பௌத்த - சமணம் நோக்கிக் கொண்டுசெல்ல முயன்று அதன்  மெய்ப்பொருளை மீட்டெடுக்க ஆர்வம் கொண்டது 

2. உரை வழங்கியதில், புராணம் அமைப்பதில்  உள்ள தனித்தன்மை / அறிவார்ந்த தன்மை 

  உதாரணங்கள் (இவை நம்மின் அறிதலை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது ) : 

( ’தையல்சொல்கேளேல்’ -‘தைக்கும்படியான சொற்களைக் கேட்காதே’ ;’ஏற்பது இகழ்ச்சி’ -'ஆராயாமல் கருத்துக்களை ஏற்றுக்கொள்வது இகழ்ச்சிக்குரியது' ; ’ஆலயம் தொழுவது சாலவும் நன்று’-'ஆலயம் என்ற சொல்லை அ+லயம் என்று பிரித்து ஆ என்றால் என்றால் மனம் வாக்கு காயம் என்ற மூன்றின் தொகை என்றும் அவை சென்று லயிக்கும்படி தொழுவது சிறப்பு';  ‘நீர்விளையாடேல்’ - ‘பெண்களுடனான ஜலக்கிரீடைகள் செய்யவேண்டாம்’ ; ’சனி நீராடு’ - 'உலோகத் தாதுக்கள் கலந்த ஊற்றில் நீராடு' ) .

3. சமண-பௌத்த மரபு சார்ந்து ஒட்டுமொத்த தமிழ் பண்பாட்டு – வரலாற்று வரைவையே புதியதாக உருவாக்கமுடியும் மற்றும் புதிய அறங்களை கண்டெடுக்க முடியுமென முன்வைத்தது 

4.அவரது  உரைகளில்  பௌத்தத்துடன் யோகமும் மருத்துவமும் கலந்து வருவது 




"இந்தவகையான ஆய்வுக்கு இன்றைய இடம் அல்லது அவசியமென்ன? இதன் வழியாக நாம் எதை செய்ய நினைக்கிறோம்? ஒருவகையான வெட்டிவேலையா இது? எதற்காக மரபை ஆதியிலிருந்து ஆரம்பித்து திரும்பவும் விளக்கவேண்டும்?


காரணம் ஒன்றே. நம்முடைய பண்பாட்டு வரலாறு முழுமையற்றது. அரைகுறையானது. வளர்ச்சி தேங்கி ஒரு புள்ளியில்நின்றுவிட்டது. அதன் பல பக்கங்கள் இன்னும் எழுதப்படாமலேயே உள்ளன. நம் மக்களின் கணிசமானவர்கள் இன்னும் வரலாற்றுக்குள் வரவேயில்லை.


நெடுங்காலமாக மறைவாக ஓடிவந்துகொண்டிருந்த அந்த மாற்று மரபு சார்ந்து ஒரு பண்பாட்டு வரலாற்றுச் சித்திரம் நம்மிடையே இல்லை.


அதை உருவாக்குவதற்கான சாத்தியங்களை அயோத்திதாசரின் உரைகள் திறக்கின்றன என்று நான் நினைக்கிறேன்." 



இது ஆய்வுக்கு மட்டுமல்ல என்னை போன்ற வாசகர்களுக்கும் பொருந்தும் . 



"அரைகுறை முயற்சிகள்,வெறும் மனப்பதிவுகள் ஆகியவற்றுடன் அதீதமான தாவல்கள் கொண்டதாகவும் காணப்படுகிறது. " -- முன்பு முதற்சிந்தனை என்ற சொல்லாடலையும் குறிப்பிட்டு அதன் உண்மை நிலவரத்தையும் உள்ளது உள்ளபடி நம்மின் வாசிப்பிற்கு முன் நிறுத்துகிறார் ஜெ .


அதற்கான காரணத்தையும் மிகத் தெளிவாக எடுத்து வைத்துள்ளார். 



ஆசிரியர் நவயான பௌத்தத்தை ப்ரேம் மூலமாக முதன்முதலில் அறிந்தது 1999 ல் அந்த வகையில் அவரின் 37 வது அகவை அது.  அதே வயதில் உள்ள நான் ஏன் இவ்வளவு தாமதமாக இதை வாசிக்கிறோம் என குற்ற உணர்ச்சி பட தேவை இல்லை . கற்றல் மட்டுமே இந்த நேரத்தில் நான் செய்யக்கூடியது  என உணர்ந்தேன் .



”உண்மையான அறிஞன் யாரா இருந்தாலும் அவன் கிட்ட நாமதான் போகணும்…அவன் நம்ம கிட்ட வரமாட்டான். அவனுக்குன்னு ஒரு பார்வை இருக்கும். அதை பல வருஷமா உருவாக்கிக்கிட்டிருப்பான். அவனை கொஞ்சநாள் பின்னாலே தொடர்ந்து போனாத்தான் நம்மால அவனைப் புரிஞ்சுக்க முடியும்” சு.ரா ஜெவிடம் சொன்ன இது அயோத்தி தாசரின் நம் அறிதலுக்கும் பொருந்துமென நினைக்கிறேன் . 


பாடத்திட்டத்தை உருவாக்கி வழி நடத்தும் நண்பர்களுக்கு மிக்க நன்றி . 


அன்புடன் ,

கே.எம்.ஆர்.விக்னேஸ் 

Comments

Popular posts from this blog

வெண்முரசு - வெய்யோன் - வாசிப்பனுபவம்

க.நா.சு - இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

ரா.கிரிதரனின் சாதகப்பறவையின் காத்திருப்பு