'ஏன் சிவதரே, என்னை விழையும் எவரும் இங்கில்லையா ?' கர்ணன் சொல்லும் இந்த வரியைக் கொண்டே மொத்த நாவலையும் பார்த்தால் புரியும் , அது சொல்வது யாராலும் மறுக்கமுடியாமை ஒன்றை. இந்த ஆண்டு வாசித்த வெண்முரசின் கடைசி நாவல் வெய்யோன். கர்ணனின் கதைகளை, அலைக்கழிப்புகளை , கைவிடப்படும் நிகழ்வுகளை என பலவற்றை சொல்லிச் செல்கிறது வெண்முரசு வரிசையில் ஒன்பதாவதாக அமைந்த இந்நூல். செந்தழல் வளையத்தில் இருந்து தொடங்குகிறது சம்பாபுரி அரண்மனையில் சூதர்மொழியில் தன்கதையை தானே கேட்டு அமர்ந்திருக்கிறான் கர்ணன். பரசுராமரால் கைவிடப்படும் கதை. தாழொலிக்கதவுகளில் அங்கநாட்டின் சம்பாபுரி அரண்மனையில் அவைமுறைமைகள், சம்பிரதாய சடங்குகள் எவ்வண்ணம் உருவாகி வந்தது. அதோடு அங்கிருந்த அரசுக்கு மாற்றாய் ஒரு சூதன் மகன் அரசமைக்க அதை மக்களும் அவையும் ஏற்றுக்கொள்ள வைக்க அமைச்சர்களின் பங்களிப்பு என்ன என்ன என தொடங்குகிறது இந்த பகுதி. வெய்யோன் மகன் , அளித்துதீராதவன் என அடைமொழிகளுக்கு நிகராய் வசைச்சொற்களும் வந்து விழுகிறது கர்ணனின் மேல் . அரசு சூழ்தல் , ஆட்சி அதிகாரம் என இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவனாய் வேறொரு உலகத்தில் வா...
Comments
Post a Comment